பிறந்த வீடே போய்வரவா

மஞ்சள் தாலி கழுத்திலாட
***மன்ன னுடனே கிளம்புகிறேன் !
நெஞ்சம் கனத்துக் கிடக்கிறது
***நெகிழ்வில் விழிகள் வடிக்கிறது !
பஞ்சாய்ப் பறந்த மனமெங்கும்
***பதற்றம் தொற்றிக் கொள்கிறது !
வஞ்சி யென்றன் உணர்வுகளை
***வடிக்க சொற்கள் தேடுகிறேன் !! (24)

இருபத் திரண்டு வருடங்கள்
***இனிதே வளைய வந்தேனே !
அருமைத் தம்பி தங்கையுடன்
***அன்பா யாடிக் களித்தேனே !
துரும்பைக் கூட அசைத்ததில்லை
***சுகமாய்க் காலம் கழித்தேனே !
வரும்நா ளெல்லாம் எப்படியோ
***வருத்தம் சற்றே தோன்றிடுதே !! (48)

முல்லைக் கொடியே மயங்காதே
***முகைகள் பூக்க வழியனுப்பு !
கொல்லைப் புறத்தில் நின்றிருக்கும்
***கொய்யா மரமே கலங்காதே !
பல்லால் கடித்துப் பழுக்கவைத்த
***பாவை யென்னை மறவாதே !
செல்லு மிடத்தில் நிதம்நினைப்பேன்
***செய்த குறும்பைப் பகிர்ந்திடுவேன் !! (72)

முற்றந் தெளித்து வண்ணத்தில்
***முழுதாய்க் கோலம் யாரிடுவார் ?
வெற்றாய் விட்டால் வெதும்பாதே
***விடுப்பில் வருவேன் அழகூட்ட !
சுற்றி வளர்ந்த வாழைகளே
***சோர்ந்து விடாதீர் நானின்றி !
நெற்றிப் பொட்டு நிலைத்திருக்க
***நீங்கள் வாழ்த்தி யனுப்பிடுவீர் !! (96)

மறக்க வியலா நினைவுகளை
***மனத்தில் சுமந்தே செல்கின்றேன் !
குறைகள் களைந்து புக்ககத்தில்
***குணத்தால் எல்லோ ருளங்கவர்வேன் !
பிறரை மதித்துச் சொற்கேட்டுப்
***பெற்றோர் பேரை விளங்கவைப்பேன் !
பிறந்த வீடே போய்வரவா ?
***பிரியா விடையைத் தருவாயே !! (120)

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (8-Apr-18, 9:52 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 62

மேலே