நிழலில் தேடிய நிஜம் கவிஞர் இரா இரவி

நிழலில் தேடிய நிஜம்! கவிஞர் இரா. இரவி !



நிழல் என்றும் நிஜமாகாது என்பதை உணர்ந்திடுங்கள்
நிழலை நம்பி நிழல்யுத்தம் செய்வதை நிறுத்திடுங்கள்!

வெள்ளித்திரையில் நல்லவராக நடித்தவர்களை நம்பிடும்
வெள்ளந்தி உள்ளத்தை உடன் விட்டு விடுங்கள்!

வெள்ளித் திரையில் கெட்டவராக நடித்தவர் கெட்டவரென
வெகுளியாக நம்புவதையும் விட்டு விடுங்கள்!

தாடி வைத்தவர்கள் எல்லாம் பெரியாராக முடியாது
தடி வைத்தவரிகள் எல்லாம் காந்தியாக முடியாது!

பணத்திற்காக நடிக்கிறார்கள் கோடிகள் குவிக்கிறார்கள்
பணம் அனைத்தும் நீங்கள் தந்திட்ட அன்பளிப்பு!

நடிகவேள் இராதா சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்
நம்பாதே நம்பாதே நடிகரை நம்பாதே உண்மை!

தமிழகம் தமிழர் என உணர்ச்சி பொங்க பேசுவார்
தமிழகம் விட்டு கர்னாடகத்தில் சொத்துக்கள் வாங்குவார்!

கவித்துவமாக புரியாத கருத்துகள் எழுதி வருவார்
கண் வைத்து விட்டார் முதல்வர் பதவிக்கு!

கல்வி வள்ளல் காமராசரும் அறிஞர் அண்ணாவும்
கட்டிக்காத்த நேர்மையை காற்றில் பறக்க விட்டனர்!

கூத்தாடிகளை நம்பி ஒப்படைத்தது போதும்
கண்ணியமானவர்களிடம் இனி ஒப்படைக்க முயல்வோம்!

வாய்ச்சொல் வீரர்களிடம் செயல் இல்லை
வீரவசனம் மட்டுமே விடிவைத் தராது!

வெண்மையானவர்களின் நிழலும் கருப்பாகவே இருக்கும்
விழும் நிழல் வேறு நிஜம் வேறு அறிந்திடுங்கள்!

நடிகர்களை நாளும் நடிகர்களாகவே பாருங்கள்
நாடாளும் தலைவர்களாக என்றும் பார்க்காதீர்கள்!

அரிதாரம் பூசியவர்கள் அவதாரப் புருசரல்ல
அவர்களைக் கடவுளாக நினைக்கும் மடமை ஒழியுங்கள்!

ஒரு நடிகர் நாடு ஆண்டுவிட்டார் என்பதால்
ஒவ்வொரு நடிகரும் நாடாள நினைப்பது தவறு!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (8-Apr-18, 7:42 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 140

மேலே