ஒன்றுமில்லை

அன்புடன் ஆசிரியருக்கு

சில மாதங்களுக்கு முன் அம்மாவுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. திருவாரூர் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை. சுந்தர் என்ற பிரபலமான மருத்துவர் அறுவைசிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை சனிக்கிழமை காலை பத்து மணிக்கு தொடங்குமென்று முந்தைய தினம் சொல்லியிருந்தார்கள். வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அம்மாவை ஒரு நோயாளிப் படுக்கையில் பார்த்தபோது மனம் துணுக்குற்றுவிட்டது. அப்பாவும் தைரியமாக காண்பித்து கொண்டாலும் அவரும் அப்படித்தான் இருந்தார் .அண்ணன் மட்டும் கொஞ்சம் தைரியமாக இருந்தான். மறுநாள் நான் அலுவலகம் செல்லவில்லை. பரிசோதனைகள் ரத்தம் வாங்கியது என்று அறுவைசிகிச்சை செய்ய மாலையாகிவிட்டது. மருத்துவர் வாசல் வழியாகத்தானே உள்ள வரப்போகிறார் என நானும் அண்ணனும் அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில் காத்திருந்தோம். மணி அப்போது ஐந்து. அவர் வேறொரு வாசல் வழியாக மருத்துவமனைக்குள் சென்றுவிட்டார். சென்ற உடனேயே அம்மாவை அறுவைசிகிச்சை செய்யும் அறைக்கு மாற்றச் சொல்லி இருக்கிறார்.
அம்மா அளவுக்கே நெருக்கமான பெரியம்மாக்கள் இருவரும் உடன் இருந்ததால் ஏதோவொரு பாதுகாப்பு உணர்வு எனக்கு இருந்து கொண்டிருந்தது. ஆனால் மாலை அம்மா அதுவரை படுக்கவைக்கப்பட்டிருந்த அறை வெறுமையாகக் கிடப்பதை கண்டபோது முழுமையாக தளர்ந்து விட்டேன். அதிலும் அறுவைசிகிச்சை அறைக்கு அம்மா அழைத்து செல்லப்பட்டபோது அருகே இல்லாமல் இரண்டு பிள்ளைகளும் கீழே இருந்திருக்கிறோம் என்பது குற்றவுணர்வைத் தந்தது. அதையும் தாண்டி மனம் முழுக்க பீதியும் நிச்சயமின்மையும் வாட்டிக் கொண்டிருந்தது. அறுவைசிகிச்சை அறைக்கு வெளியே இருந்த வராண்டா இருட்டாக இருந்தது. பெரியம்மாக்களும் மற்ற பெண் உறவினர்களும் தரையில் அமர்ந்து சுவற்றில் தலை சாய்த்திருந்தனர். மாமா (அம்மாவின் தம்பி) அம்மாவை அறுவைசிகிச்சை அறைக்கு மாற்றியபோது அப்பா கதறி அழுததாகச் சொன்னார். நானும் உடனிருந்து அழுதிருந்தால் மனம் அறுவைசிகிச்சை நடந்த அந்த நேரத்தில் அவ்வளவு அழுத்தியிருக்காது என்று தோன்றியது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அறுவைசிகிச்சை நடந்தது. மூத்த பெரியம்மாவைப் பார்த்தால் நிச்சயம் அழுதுவிடுவேன் என்று தோன்றியது. அம்மா “அழுத்தக்காரன்” என்று அடிக்கடி சொல்லும் அண்ணனும் கலங்கிப்போய் தான் அமர்ந்திருந்தான். அவன் பள்ளி தலைமை ஆசிரியர் அவனருகே வந்து அமர்ந்திருந்தார். நேரம் செல்லச் செல்ல என்னால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்த கழிவறைக்குச் சென்று ஓசையில்லாமல் அழுதுவிட்டு அழுகையின் தடம் தெரியாமல் முகத்தை துடைத்துக் கொண்டு அப்பாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தேன். ஒரு சங்கிலி போல எங்கள் மூவரையும் பிணைப்பது அம்மா தான். அம்மா அந்த அறுவைசிகிச்சை அறையில் இருந்த போது அப்பாவுக்கும் அண்ணனுக்கும் எனக்கும் இடையே ஏதோவொரு பிணைப்பு அறுந்தது போல தோன்றியது.
நான் அந்த வராண்டாவைவிட்டு வெளியே வந்து ஒரு ஜன்னலில் ஏறி அமர்ந்து வெளியே வெறித்திருந்தேன். பெரிய பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கீழ்தளத்தில் இறக்கிக் கொண்டிருந்தார்கள். மிருகம் உறுமுவது போல ஒவ்வொரு நிரம்பிய சிலிண்டரும் உருட்டப்படும் போது உறுமியது. மீண்டும் வந்துவிட்டேன். அறுவைசிகிச்சை அறைக்கதவைத் திறந்து பதற்றத்துடன் ஒரு மருத்துவர் ஓடிவந்து ஒரு பிளாஸ்டிக் டப்பா வேண்டுமெனக் கேட்டார். அங்கிருந்து அகன்று செல்வதற்காகவே டப்பா வாங்க போன மாமாவுடன் நானும் ஓடினேன். டப்பா வாங்கி வந்த கொஞ்ச நேரத்தில் நீக்கப்பட்ட கட்டிகள் நிறைந்த கருப்பையை அப்பாவிடம் தலைமை மருத்துவர் காண்பித்து “நல்லா இருக்காங்க பயப்படாதீங்க” என்றார். அப்பாவின் முகம் தெளிந்தது. மயங்கிய நிலையில் அம்மா மீண்டும் அறைக்கு மாற்றப்பட்டார். அண்ணன் மட்டும் வீட்டினை கவனித்து கொள்வதற்காக சென்றுவிட்டான். அன்றிரவு நல்ல மழை. நான் உறங்கவே இல்லை. மனதில் ஒரேநேரத்தில் வெறுமையும் நிறைவும் மாறி மாறி தோன்றிக் கொண்டே இருந்தது. மீண்டும் ஜன்னலில் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். மாமியும் அத்தையும் பெரியம்மாவும் அம்மாவுக்கு துணையாக இருந்தனர்.
ஒன்றுமில்லை..கதையை இந்த மனநிலையுடன் தான் வாசித்தேன். இறுதியில் அனைத்தும் சரியாக முடியப்போகிறது என்ற நம்பிக்கையை இறுதி வரி வரை அக்கதை கொடுத்தது. இத்தனை வளர்ச்சிக்கு பின்னும் ஒரு உயிரின் இருப்பை இயற்கைதான் தீர்மானிக்கிறது. நாம் செய்யக்கூடுவதெல்லாம் நம்மால் இயன்ற வழியில் முழுமையாக செயல்பட்டுவிட்டு காத்திருப்பது மட்டும் தான். இந்த நிச்சயமின்மை மனிதனுக்கு விதிக்கப்பட்ட நிரந்தர சாபம் அல்லது வரம் போல.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்

அன்புள்ள சுரேஷ் பிரதீப்



என் கதைகளில் அசோகமித்திரனுக்குப் பிடித்த கதைகளில் ஒன்று அது. என்னிடம் சொல்லியிருக்கிறார், எழுதியிருக்கிறார். அது ஒரு செவிச்செய்தியின் கதைவடிவம். ஓம்சக்தி இதழில் வெளிவந்தது. ஜெயமோகன் சிறுகதைகள் தொகுதியில் உள்ளது. மிக எளிமையான நேரடி வடிவில் எழுதினேன். ஏனென்றால் அதிலுள்ள நேரடித்தன்மையின் அச்சுறுத்தும் உண்மையே மையக்கரு



நாம் ஒரு பெரிய வலையில் இருந்துகொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வே அச்சுறுத்துவதும் அவ்வப்போது ஆறுதல்படுத்துவதும்



ஜெ

எழுதியவர் : (9-Apr-18, 7:18 am)
Tanglish : onrumillai
பார்வை : 190

மேலே