அவளின் அவர்தொடர்கதை 3

அவளின் அவர் 3
அவளின் அவர்-3

இதுவரை (.....(அதிகாலையின் எந்த சப்தம் இன்றி பொழுது விடியும் நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கெள்சல்யாவின் முதலிரவினை அன்று அவர் எழுதி அளித்த சேகுவாரா பற்றிய கவிதையும் என சில சங்கதிகளை நினைவூட்டியது..தன்னை இனி கெளசல்யா என விளிப்பது என்றும் ஒரு தோழராய் பாவித்து ஒருவரை ஒருவர் மரியாதையாக அழைத்துக் கொள்ள வேண்டுமென்று கூறிய அவர் தனக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உண்டென சொன்னார்.அவளின் அவர் இன்னும் எழுந்திருக்கவில்லை.)
-----------------இனி…….

சற்றே கலவரத்தோடு சன்னலோரம் வந்து நின்றாள் கெளசல்யா..குழப்ப வரிகள் நெற்றி சிலேட்டில் எதையோ எழுதத் தொடங்கின…சன்னல் கம்பிகள் ஊடே வெளியே பார்த்தாள்…நீண்ட தெரு அமைதியாய் படுத்திருந்தது…இந்த சன்னல் கம்பிகளும் தன்னைப் போன்ற பெண்களும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் இத்துணைக் காலம் எப்படியெல்லாம் சிரம் சிலந்தி வலைக்குள் அடிமை இழைகளாய் பின்னப்பட்டு இருந்தோம் என எண்ணியவள் அந்தக் கவிதையை நினைத்துப் பார்த்தாள் …

பின்னலாய் மேகம் சின்னதாய் நிலா
சன்னல் வழியே மட்டும் தரிசனம்
அம்மாவுக்கு..!
காற்றின் மழையின் குளுமை அனுபவிக்க
முற்றமே குற்றாலமாய் அம்மாவிற்கு..
எட்டிப் பார்க்கும் அணில் குட்டிகளொடு பூனை
கூடுகட்டும் குருவி பசு காம்பு நக்கும் கன்று
இவர்களே தோழர்கள் வீட்டினுள் அம்மாவிற்கு.!!
அன்று தாத்தா வீட்டிலும் இன்று அப்பா வீட்டிலும்
படி தாண்டக் கூடாதாம் அம்மா..

சீமை சிலுக்கும் ஸ்ருங்கார செண்டுமாய்
படி தாண்டி அப்பா அவ்வப்பொது
தெருக் கோடி வீட்டிற்கு …
ஊர்க் கோடி சிவப்புத் தோலுடன் அண்ணன் அடிக்கடி…
சத்தமின்றி நித்தம் அழுவாள் அம்மா..

நானும் அம்மா ஆவேன்
ஆனாலும் அம்மாவைப் போல் அல்லாமல்..

கல்லூரி கவிதைப் போட்டியில் பரிசு வாங்கிய அந்த மகிழ்ச்சியும் பின்னாளில் இந்தக் கவிதைக்காக அப்பா அன்ணனிடம் தான் வாங்கிக் கட்டிக் கொண்டதும்…..மறக்கமுடியவில்லை..

இன்று அதெ சன்னலோரம் …என்ன செய்வது….

அருகில் வந்த அவர் அவளது தோளின் முற்பகுதியில் தனது இரு கைகளையும் தொலைத்து பேசினார்,”என்ன தோழர்..அந்த உங்கள் இரு மூத்த தோழியரைப் பற்றிய நினைவா..? நான் உண்மையை இப்போது சொல்ல வில்லையெனில் பிறகு இல்லறம் சுகமாய் அமையாது அல்லவா தோழர்…? அதான் சொல்லிட்டேன்..ஏதும் சினமா..? ”

அவர் குரலில் இருந்த நேர்மை அவளுக்கு நம்பிக்கை அளித்தது. சேகுவாரா…பெரியார் …தமிழ் பற்று …பெண்மை போற்றும் பண்பு இப்படியெல்லாம் உள்ள இவர் அப்படியா இருக்க முடியும்..என்று சிந்தித்தவள் சற்றே அவருடன் விளையாட எண்ணி “சரி தோழர்..உங்களின் முந்தைய உறவுகளின் தொடர்ச்சி என்னால் பாதிக்கப் பட வேண்டாம்..என்னைத்தான் தோழராக பாவித்து விட்டீர்களே..புது தோழமை எதுவும் பழைய தோழமையின் கல்லறையிலா பிறக்கும்….நீங்கள் தொடரலாம்…என்னையும் தொடர விடுங்கள்…எனக்கு உங்களைப் போல இரண்டு கணவர்கள் இல்லை..ஒரே ஒரு காதலன் மட்டும் உண்டு அதுவும் அண்மைக் காதல்தான்..”என்றாள்.

“என்ன சொன்னீர்கள்….என்னை தோழர் என்றா…மகிழ்ச்சி மகிழ்ச்சி. தோழா…”என்றவர் அவளைத்தூக்கி அப்படியெ தன்னுள் தொலைத்துக் கொண்டு தன்னைத் தேடத் தொடங்கினார்..

‘அந்தக் காதலர் யார் என நீங்கள் வினவவில்லையே..?’

‘அந்த இரு மனைவிகள் யார் என நீங்களும் கேட்கவில்லையே தோழா ?’

‘சரி சொல்லுங்கள் யார் அந்த இரு மனைவிகள்..?’

“பெண் முதலில் . நீங்கள் சொல்லுங்கள் உங்கள் அண்மை காலத்துக் காதலர் எவரென்று..? “

‘தொடங்கியவரே முதலில்..”

;சரி…வாழ் நாள் முழுதும் அவர்களொடு நீங்கள் அன்பொடு இருப்பீர்கள் எனில் சொல்லுகிறேன்..என்னில் வாழும் அவர்களை எப்படி கைவிட ஏலும்.? ஒருவர் எனது சிறு வயது காதலியென இருந்து இப்பொது என்னுள் ஒரு தோழியாய் மற்றவர் எனது வாலிபக் காலத்தின் சினங்களுக்கு சீர்சாலை அமைத்தவர்..இந்த இருவரும் என் உயிர் பிரியும் பொழுது மட்டுமெ என்னை விட்டு ஏகுவர்..சரியா.?”

“அப்படியா…சரி சரி..நான் ஏற்கிறேன்..உறுதியும் அளிக்கிறேன்..எனக்கு முன்னால் வந்த எந்த உறவையும் உங்களிடமிருந்து எப்போதும் உதறி விட உங்களுக்குத் தொல்லை அளிக்க மாட்டேன் தோழர்..சரியா..”;.

“ நானும் அதேப்போல உங்கள் காதலரை விட்டு விட சொல்லமாட்டேன்..சரி..இப்பொது நாம் இருவரும் நமது முந்திய உறவுகளின் முகம் அறியலாமா?”என்றவர் அவளின் இரு கண்களைத் தனது கண்களால் மூடிக் கொண்டார்..

‘அய்யொ …நான் எப்படி காண்பது…?’

“விழிக்கும் எனது இரு விழிகளுக்குள் நீங்கள் இரு முகங்கள் காணலாம் தோழா…அந்த முகங்களே எனது இரு முந்திய மனைவிகள்..”என்றவர் தனது விழிகள் திறந்தார் ..

மெய் சிலிர்த்தாள் அவள்…இப்பொது அவளுள் அவர் தொலையத் தொடங்கினார்..

‘ஆமாம் என் காதலர் யார் என உங்களுக்குக் காட்டுகிறேன் ‘ என அவரின் கண்களை மூடச் சொல்லிவிட்டு தனது கைப் பையில் இருந்து எடுத்துக் காட்டினாள்……..

கைகண்ணாடியில் தனது முகம் பார்த்தவர் சிரித்தார்..

“இருந்தாலும் இவர்களுக்கு ஒரு குறியிடு வேண்டும் ..நீங்க சொல்லுங்க ‘ என்றார் அவளை அணைத்தப்படியே..

‘உங்களின் ஒரு மனைவி தமிழ்..மற்றவர் இயக்கம்…-சரியா தோழா..? “

‘அப்படியெனில் உங்கள் காதலர் …?’

‘அவர் பெயர் –“அவளின் அவர்”..!!! சரியா “ என்றவள் முகத்தை பிடித்திழுத்து தன் முகத்தில் பொருத்தினார்….

‘அய்யோ..இந்தத் தாடி……’

‘என்ன தோழர் …குத்துகிறதா ..? ‘ என்றவரின் கை விரல் நகங்களை வருடியப் படி சொன்னாள்..’இல்லை..இல்லை…என்னுள் ஒத்தட ஒத்திகைப் பார்க்கிறது..’

தாடி….அவருக்கு தனது நிலைப் பற்றி சக மனிதர்கள் சிந்தனை எழுந்தது..

முகத்தில் தாடி
உதடுகளில் பீடி
ஜோல்னா பை

நா அசைவில்
மாவோ, லெனின்,
மார்க்ஸ்,பாப்லோ நெருடா
ரசூல் கம்ச தேவ்
சர்ரிலிசம்
பெண்ணியம்
டிசால்வ்

"உள்ளூர் இலக்கியம்
ஒன்றுகூட உதவவில்லையா..."
விலா உடைக்கும் வினாக்கள்.
விசுவரூபமாய்
என்னைச்சுற்றி

தெரிந்ததால்தானே
தெரியாததை நோக்கி
ஒரு தேடல்...
தெரியாதது தெரிந்துவிட்டதால்
தெரிந்திருந்ததில் ஒரு தெளிவு...


இன்னமும் பலருக்கு
இங்கே
விக்கல்கள்
-நீருக்காய்,
உணவுக்காய்,கல்விக்காய்,
விடுதலைக்காய்...

சே,புளித்துப் போனது
பல யுகங்களாய்...

***** ****** ****** ******

தனது நினைவலைகளில் நீந்தி கரையேறினாள்...

இன்னமும் அவர் எழுந்திருக்கவில்லை...இன்று நிறைய பணிகள் உள்ளன.....மாடத்தில் இருக்கும் அந்த தேங்காய் சிரட்டை இவளைப் பார்த்து பேசுவதுப் போன்று தோன்றியது.

அவரின் கைகடிகாரமும் செல்பேசியும் இதனுள் தான் எப்பொதும் இருக்கும். யாழ்பாணத்திற்கு சென்ற அவருக்கு போது ' தம்பி ' கொடுத்தது .நாள்தோறும் இதிலிருந்து தனது கைக்கடிகாரமும் செல்பேசியும் எடுத்துக் கொண்டு வெளி செல்வதும் இல்லம் மீண்டப் பிறகு அதில் வைப்பதுமாய் அவர் பழகிப் போய் இருந்தார்.

மேசையின் மீது இருந்தவைகளை ஒழுங்குப்படுத்தி விட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்தாள்..

அழைப்பு மணி ஒலி அவளை அழைத்து கதவைத் திறக்க வைத்தது.


அதிர்ச்சியும் ஆனந்தமும்..அவளும் பெருக்கெடுத்தன..

(அவர் எழுந்திருப்பார் )

எழுதியவர் : அகன் (8-Apr-18, 9:34 pm)
பார்வை : 145

மேலே