கறுப்பிற்குள் வெளுத்துப் போன இரவு

கறுப்பின் கர்ப்புக்குள் வெளுத்துப்போனது ஏழையின்; வெறுமையான இரவு
சட்டை கழற்றிய பாம்பாய் படுத்துறங்குது பாவப்பட்ட வயிற்றுக்குள் வெறுமையான குடல்
இஞ்சித் தேத்தண்ணிக்கும் கெஞ்சித் திரியும் அஞ்சிப் போன பார்வையில் முகம்
மிஞ்சிப் போனால் கிடைப்பது எஞ்சிப்போன குப்பைத்தொட்டி உணவுகள்

கட்டியணைக்க இருப்பதுவோ நடைபாதைச் சுவர்களின் சுவடுகள்
இரண்டு கால்களுக்கிடையே சுருங்கிப் போன இரங்கும் கரங்களின் தாம்பத்யம்
குளிருக்குப் பங்குவைக்க பஞ்சாய்ப்போன பழைய கம்பளித் துண்டுகள்
தகரப் பாத்திரத்தில் ஆயிரம் பீரங்கிகள் தாக்கிய துளைகளின் உண்ணாவிரதம்

மடிந்த மனசிற்குள் எமனைப் பார்ப்பதற்காய் அடையாளமிடப்பட்ட கால் தடங்கள்
தூக்குக் கவுறாக வெட்டிவிடப்பட்ட தொப்புள்கொடிகளின் ஒன்றுகூடல்
குடிப்பதற்கு நீரின்றி குளிப்பதற்காய் மழை தேடும் மங்கிப்போன மானிடங்கள்
இறப்பர் செருப்பாய் மாறிவிட்ட மரத்துப்போன பாதங்களின் பங்குதாரர்கள்

சூரியச் சாட்டையால் அடிவாங்கியே உலரந்து போன உடல்களில்
வியர்வையும் புழுதியும் இரண்டறக் கலந்து இளகியே லேகியமாயிற்று
பூமிக்குள் புகைகின்ற எரிமலைக் குழம்பு போல புழுங்குகின்ற மனதினிலே
அழுக்குகள் அகற்றியதால் வெள்ளையாய் வெளியேறும் கண் பூளைகள்

பழுத்துப்போன முடிகளில் எழுத்துப்பிளையான தலைவிதியின் கிறுக்கல்கள்
காதோரத்தில் கிசு கிசுக்கும் கொசுக்களின் திசுக்களில்கூட மூச்சுத்திணறல்
ஐந்தறிவுடனே அலைகின்ற பூனைகளும் சுத்தமாகும் தன் உமிழ்நீரால் நக்கி
ஏனோ மனித மிருகம் மட்டும் இன்னும் சுத்தமாகவில்லை ஏற்றத்தாழ்வு சகதியிலிருந்து…

எழுதியவர் : கல்முனையான் தாஸீம் (10-Apr-18, 8:31 am)
சேர்த்தது : Samthaz
பார்வை : 109

மேலே