அன்புள்ள அப்புவுக்கு என் கடிதம்

அன்புள்ள அப்பா,

உங்களை பார்த்து எத்தனை நாளாகி விட்டது. எப்படி இருக்கிறீர்கள் அப்பா. இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் இப்போது தான் வீட்டுப் பாடம் எல்லாம் முடித்தேன் அப்பா.

அழகாக பூவென்று வரைந்து முடித்திருக்கிறேன் நீங்கள் எப்போது அதை பார்க்க வருகிறீர்கள். அந்த காகிதப் பூவும் இந்த குட்டிப் பூவும் உங்களுக்காக காத்திருக்கிறது அப்பா. மறந்துவிட்டேன் அம்மாவும் கூட உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் அப்பா.

எனக்கு உங்களைத் தேடுகிறது அப்பா.உன்னைக் கத்தி கத்தி அப்பா என்று கூப்பிட வேண்டும் போலிருக்கிறது. உங்கள் முத்தத்தின் சத்தமும் அந்த எச்சில் ஈரமும் என் கன்னங்கள் கேட்கிறது. நான் யாரிடம் போய் கேட்பேன் அப்பா . அம்மா தருகிறார்கள் இருந்தாலும் எனக்கு உங்கள் முத்தங்களும் வேண்டும் போல இருக்கிறது அப்பா. அந்த நெற்றி அப்புறம் இரு கன்னம் பதித்து சத்தமாய் நீங்கள் தரும் முத்தத்தின் சத்தத்தை அந்த சுவரத்தை என் இதயம் உணர்ந்து நாட்கள் ஆகி விட்டதே அப்பா.

எங்கு போனாலும் சொல்லிவிட்டு போக வேண்டும் என்று எனக்கு சொல்லித் தந்த நீங்கள் அங்கு போகும் போது மட்டும் ஏன் என்னிடம் சொல்லிவிட்டு போக மறந்தீர்கள் அப்பா. இப்போதும் எங்கு போக வெளியே கிளம்பினாலும் காலணிக்குள் கால்களை நுழைக்கும் பொழுது "அம்மா போயிற்று வாரேன்" என்று சொல்லி முடித்ததும் அனிச்சையாக என் உதடுகள் "அப்பா போயிற்று வரேன்" என்று மறக்காமல் சொல்லிவிடுகிறது.

சொல்லியபின் ஒரு பெருமூச்சோடு இப்போது உன் புகைப்படம் பக்கம் எட்டிப்பார்க்கும் கண்கள் கொஞ்சகாலம் பனித்தும் பின் பழகிக்கொள்ளவும் பயங்கரமாக முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. உன்னிடம் விடைபெற்றே பழக்கப்பட்ட உதடுகளுக்கும் உள்ளத்துக்கும் நீ இப்போது புகைப்படத்தில் மட்டும் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் உண்மை தெரிந்தாலும் ஏனோ புரிவதே இல்லை . சில நேரம் நீ வீட்டு நாற்காலியில் அந்த நார் கட்டிலில் நீ உட்கார்ந்திருப்பதை போல தோன்றுகிறது . நான் ஆசையாய்க் கிட்டே வந்து பார்த்தால் நீங்கள் அங்கு இல்லை அப்பா .ஏன் பா.

முன்பெல்லாம் நீங்க வீட்டுக்கு வந்தாலே உங்கள் செருப்பு சத்தத்தில் கணிக்கும் நாங்கள் அதுவரை ஆட்டம் போட்டுக் கொண்டிருந்ததை மறைத்து சட்டென்று விளையாட்டுக்கு விடுமுறை கொடுத்து புத்தகத்திற்குள் முகத்தை புதைத்துக் கொள்வோம். இந்த அப்பா கொஞ்சம் கழித்தே வந்திருக்கலாம் என்று மனதிற்குள் முணுமுணுத்து காலங்கள் உண்டு.இப்போது அந்த செருப்பு சத்தம் கேட்காதா என்று ஏங்குகிறேன் அப்பா . உங்களுக்காக உங்களைக் கண்டு பயந்து ஒளிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அப்பா. ஆனால் எங்கோ போய் ஒளிந்துகொண்ட நீங்கள் வீட்டுக்கு வருவதே இல்லையே அப்பா.

ஒருவேளை என்னிடம் பெரிய கண்ணாமுச்சி விளையாடுகிறீர்களோ . விளையாட்டு என்றால் போதும் அப்பா . நான் தோற்று விட்டேன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்னால் உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை நீங்களே வெளியே வந்துவிடுங்கள் அப்பா. என்ன கண்டு பிடிக்க முடியலையா! என்று சொல்லி என் கன்னம் கிள்ளி சிரித்து விடுங்கள் அப்பா. எப்போதும் போல தோற்று விட்டேன் என்று முகம் திருப்பாமல் உங்கள் கழுத்தோடு கட்டிக்கொள்வேன் அப்பா. வந்துவிடுங்கள்.

நாங்கள் அதுவரை விளையாடிதான் பொழுதைக் கழித்தோம் என்று நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ ஒழுங்கா படிக்கிறீங்களா என்ற உங்கள் கர்ஜனையில் எங்களுக்கு பாடம் மண்டையில் ஏற ஆரம்பித்திருக்கும்..உங்களிடம் பரீட்சை தாளைக் காட்டி அந்த கிறுக்கிய கையெழுத்தை வாங்குமுன் நீங்கள் சொல்லும் அந்த வார்த்தைகளுக்கு அஞ்சியே படித்திருக்கிறேன் பரிட்சைகளை எழுதி இருக்கிறேன் .இப்போது அந்த காக்கா எச்சம் என்றும் கிறுக்கல் என்றும் நான் கிண்டலிடித்த அந்த குச்சி கையெழுத்து என் பரீட்சை தாள்களை வந்து ஒட்டிக்கொள்ளாதா என்று காத்து கிடக்கிறது நான் வாங்கிய மதிப்பெண்களும் என் மனசும் அப்பா . ரொம்ப நல்ல மதிப்பெண் வாங்கி இருக்கிறேன் அப்பா எப்போது வந்து பார்ப்பீர்கள்,

என்னை ஒருமுறை கூட வந்து பார்க்காமல் அங்கு என்ன வேலை அப்பா அப்படி உங்களுக்கு. எப்போது கேட்டாலும் சாமிகிட்ட போய்விட்டார் அப்பா என்று சொல்லும் அம்மா கண்களில் கண்ணீரை நிறையவே கொண்டிருக்கிறாள். ஏன் பா அந்த சாமி விடுமுறையை தராத கடுமையான முதலாளியா ?

அப்பா அப்போ இனி வர மாட்டாரா என்று கேட்டதும் என் விழி நீர் கண்டதும் தன்னுடைய விழி நீர் துடைத்து அவள் சீக்கிரம் வந்திடுவார் மா என்று ஒரு சத்தமில்லா சிரிப்பு சிரிக்கிறாள் . அம்மாவின் அந்த கண்ணீரை போ போ என்று பொத்தென்று தள்ளி விட்டு விட்டு உண்மை இல்லாமல் அவள் உதட்டில் ஒரு ஸ்டிக்கர் பொட்டுப் போல வந்து ஒட்டிக்கொள்ளும் அந்த புன்னகை எனக்கு குழப்பமாக இருக்கிறதே அப்பா.

எந்த சந்தேகம் என்றாலும் உங்களிடம் கேட்டு பழக்கப்பட்ட நான் இதை யாரிடம் போய் கேட்பது அப்பா. என் வகுப்பு ஆசிரியை என்னவென்றால் அன்று பாடம் நடத்தும்போது சாமிகிட்ட போனவர்கள் நமக்காக பிரார்த்தனை செய்வார்கள் அங்கிருந்து என்று சொல்கிறார் . அப்படி என்றால் நீ ஒருவேளை எனக்காக என் பரீட்சை மதிப்பெண்ணுக்காக என் பொது தேர்வுக்காக அங்கிருந்து பிராத்தனை செய்து கொண்டிருக்கிறாயோ அப்பா. இருக்கும் இருக்கும் உனக்கு தான் நான் நல்லா படிக்க வேண்டும் என்று நிரம்ப ஆசை உண்டே. . சரி பிராத்தனை பண்ணுவது நல்லது தான் பா ஆனால் சீக்கிரம் உன் பிரார்த்தனையை முடித்துவிட்டு வந்துவிடு அப்பா.நான் உனக்காக இங்கு ரொம்ப ரொம்ப காத்துக்கொண்டிருக்கிறேன்.

பரீட்சை எல்லாம் முடித்து விட்டு வழக்கமான விடுமுறையை போல இந்த வருடமும் நாம் பாட்டி வீட்டுக்கு போக வேண்டும். அங்கு உள்ள வயல் வரப்பெல்லாம் நான் உன் கை பிடித்து ஓடி வர வேண்டும். அப்புறம் அந்த பெரிய குளத்தில் நீங்க குளிப்பதை நான் கரையில் இருந்து பார்க்கணும்.உங்ககிட்ட நான் தாமரை பூ கேப்பேன் . நீங்க பெரிய மீன் போல நீச்சலிடித்து போய் அத பறிச்சிக்கிட்டு வரணும் .அந்த பூவை நான் நெஞ்சொடு ஒட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கணும். நீங்க தண்ணியில் ஒளிந்து சாகசம் காட்டணும். நான் அப்பா அப்பா என்று கூப்பிட நீங்க டபக்கென்று வெளியே வந்து சிரிக்கணும்.

அப்புறம் நீங்க குளியல் முடித்து கை நீட்ட நான் துள்ளி ஓடி வரணும். தண்ணிக்குள்ள பயந்தாலும் கூட உங்க நெஞ்சொடு ஒட்டிக்கிட்டு அப்படியே தண்ணீருக்குள்ளே முங்கி உள்ள இருக்கணும் .ரொம்ப பயந்து நான் தண்ணியில் இருந்து எம்பி எழ என்னை நெஞ்சொடு அணைச்சு வைக்க அந்த தண்ணீரும் நெஞ்சு கூடும் என் தாயின் கருவறை சூட்டை எனக்கு தர தண்ணியின் குளிர் போய் நான் உன் கைக்குழந்தை ஆகி இருப்பேன் . அப்படியே என்னை அலேக்காக தூக்கி வானம் நோக்கி நீ தரும் முத்தம் அந்த குளத்து நீரை விட சில்லென்று சுகம் தர என்னை முதுகில் சவாரி ஏற்று நீ தாமரை கூட்டத்திற்குள் என்னை கூட்டிச் சென்று என் கையும் உன் கையும் சேர்த்து தாமரை பூ பறித்து ஒரு தேவதையென என்னை விரல் பிடித்து வீட்டுக்கு கூட்டிட்டு வருவியே அப்பா. இந்த விரல் இப்போது உனக்கு பேனா பிடித்து தனியே கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது அப்பா. பாவம் அது உன் கை கேட்கிறது .

அப்பா என்று அடிக்கடி மனசில் ஆழத்தில் உரக்க கத்திக்கொண்டும் தூக்கத்தில் மெல்ல உளறிக்கொண்டும் உங்களுக்காக காத்துக்கொண்டும் இருக்கிறேன். சீக்கிரம் வந்துவிடுங்க .

அந்த தாமரைப் பூக்களும் குளத்து மீன்களும் நம்மளை பார்க்க காத்திருக்கும் .கோடை விடுமுறைக்கேனும் வந்துவிடுங்கள் அப்பா. இல்லையென்றால் இந்த உடல் மட்டும் அல்ல என் மனசு கூட உஷ்ணம் அதிகமாகிடும் அப்பா. அப்படியே முடிஞ்சால் உங்க சாமிகிட்ட இருக்கும் தாமரைப்பூ ஓன்று எனக்கு கொண்டு வருவீங்களா பா. அதை நம்ம வீட்டு சாமிக்கு வச்சு அழகு பார்க்கலாம் பா. அப்புறம் பா மறக்காம அந்த சாமி கிட்ட கொஞ்சநாள் இல்ல நிறைய நாள் லீவு கேட்டுட்டு வாப்பா . இப்போ அப்பாக்கு கடிதத்தில் நிறைய முத்தம் நீங்க வந்தப்புறம் இன்னும் நிறைய நிறைய கன்னத்தில் தருவேன் பா. சரியா பா. சீக்கிரம் வந்துடுங்க பா. டாடா

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (14-Apr-18, 6:34 pm)
பார்வை : 220

மேலே