தலைப்பை கவிதையில் தேடவும்

மனம் சலித்தது.
துயரம் கொண்டேன்.
யாதொரு பலனுமின்றி
நாட்கள் கழிகின்றன.
ஒவ்வொரு நாளும் நீ
பாத்திரங்களை உடைக்கிறாய்.
புதிய பாத்திரங்கள் செய்ய
எனக்கு கடினமாகிறது.
மீசை வளர்ந்தபோது
உனக்கு பிடிக்கவில்லை
பாத்திரம் உடைத்தாய்.
கடல் அருகே வீடு
பார்த்தபோதும் நீ
பாத்திரம் உடைத்தாய்.
அசைவம் பிடிக்காது என்பதும்
சாப்பிட தெரியாது என்பதும்
வேறு வேறானவை என்றேன்.
மறுபடி உடைந்தது.
நாற்காலி சிலசமயம்
என்னிடம் பேசுவதுண்டு.
அப்பா அதில்தான்
அபானவாயு கழிக்கையில்
உயிர் பிரிந்தது.
பேசப்பேச உடைத்தாய்.
இனி பாத்திரம்
எதுவும் என்னிடமில்லை.
வாயற்ற உன் கோபங்கள்
என் மென்மையில்
கூர்தீட்டி உன்னை
ஏவி விடுகின்றன எட்டாத
என் பாதாளத்தில் இருக்கும்
உள்ளெங்கும் இருள் குடித்த
அண்டாவின் விலா ஓடிக்க...
நீயும் ஒடுகிறாய் உன்
மனதினை மீறியும் என்
சமிக்ஞைகள் எதிர்த்தும்...
இருள் உன்னை விழுங்கும்.
அப்போதும் நீ
வெளியேறும் பாதை என்பது
துக்கத்தில் ஓய்ந்த இந்த
நாற்காலி தன்னைமறந்து
தும்மும்போது மட்டுமே.

எழுதியவர் : ஸ்பரிசன் (15-Apr-18, 10:59 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 86

மேலே