பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதா
சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ப் மீடியா என்ற ஒரு பத்திரிக்கை நிறுவனம், நடத்திய ஆய்வில் நாம் அருந்தும் பாட்டில் தண்ணீரில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சுத்தமான நீர் வேண்டும் என்று தான் பாட்டில் தண்ணீருக்கும், கேன் தண்ணீருக்கும் தண்டம் கட்டி பருகுகிறார்கள், மக்கள். இதிலுமா பிரச்சினை? என நீங்கள் எண்ணலாம்.
உலக அளவிலான பாட்டில்-கேன் என கொள்கலனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் சந்தையின் மதிப்பு ஓராண்டுக்கு சுமார் 147 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 9 இலட்சத்து 56,000 கோடி ரூபாய்கள்.
ஆர்ப் மீடியா நிறுவனம், பாட்டில் தண்ணீர் உற்பத்தி செய்யும் 11 நிறுவனங்களின் 250 பாட்டிலை வாங்கி சோதனைக்கு உட்படுத்தியது. மொத்தம் 5 கண்டங்களில், 9 நாடுகளில் இருந்து 19 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கிருந்து குடிநீர் பாட்டில் மாதிரிகள் வாங்கப்பட்டன. இந்நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் பாலி எத்திலின் தெரெப்தலேட் (PET) என அழைக்கப்படும் பிளாஸ்டிக் வகை கலந்திருக்கிறது.
உலக அளவில் விற்பனை செய்யப்படும் பாட்டில் குடிநீரில் 100 மைக்ரான் அளவிற்கு அதிக அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 10.4 எண்ணிக்கையில் இருக்கின்றன. சில நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் லிட்டருக்கு 10,000 துகள்கள் வரை இருந்திருக்கின்றன. அதேபோல் 100 மைக்ரானுக்குக் குறைவான அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 314.6 எண்ணிக்கையில் இருக்கின்றன.
எடுக்கப்பட்ட மாதிரிகளில் 93% பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன. இதே நிறுவனம் கடந்த ஆண்டு குழாய் நீரில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டது. அதன்படி உலக அளவில் குழாய் நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக்கின் அளவு சராசரியாக லிட்டருக்கு 4.45 எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இது பாதுகாப்பான குடிநீர் எனக் கூறி விற்கப்படும் பாட்டில் குடிநீரை விட மிகவும் குறைவு.
உடம்பில் உட்கொள்ளப்படும் பிளாஸ்டிக் துகள்களில் சுமார் 90% நமது உடல் வெளியேற்றிவிடுகிறது என்றும் மீதமுள்ள 10% துகள்கள் நமது உடலின் திசுக்கள் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்களில் தங்கிவிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும் இந்த பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனங்கள் உடலில் எவ்வகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது குறித்த முழுமையான ஆய்வு எதுவும் இதுவரை இல்லை.
ஏகாதிபத்தியங்களால் சுரண்டப்படும் மூன்றாம் உலக நாடுகளில் தண்ணீர் வழங்கல், சேவை என்ற நிலையில் இருந்து சந்தைக்கானதாக மாற்றப்பட்டு வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் பல நாடுகளில் தண்ணீரை தனியார்மயமாக்கி விட்டார்கள்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தனியார் வசம் சென்று கொண்டிருக்கிறது. உலகவங்கியின் உத்தரவிற்கு இணங்க தேசிய நீர் பாதுகாப்பு மசோதாவை நம் மீது திணிக்கத் தயாராகியிருக்கிறது மோடி அரசு. இதற்கான வரைவை கடந்த காங்கிரசு ஆட்சியிலேயே கொண்டு வந்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அம்மசோதா கிடப்பில் போடப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், சுத்தமான நீரைப் பெற தனியாரை நாடும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தரக்கட்டுப்பாடு வைத்து அதனைக் கறாராக அமல்படுத்தும் மேற்குலகிலேயே பாட்டில் தண்ணீரில் அதிக அளவில் பிளாஸ்டிக் இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
இந்தியாவிலோ இதற்கென எந்த கட்டுப்பாடும் இல்லை. இருக்கும் பாதுகாப்பு முறைகளெல்லாம் அதிகார வர்க்கத்தின் ஊழல்களால் பலனில்லாமல் தூங்குகின்றன.
இதை விட முக்கியமானது, தண்ணீர் என்றால் அது பாட்டில், பாக்கெட், கேன் என மாற்றி விட்டார்கள். மக்கள் வருமானத்தில் கணிசமான அளவு குடிநீருக்குச் செல்கிறது. பொது சேவையில் பெறப்படும் குடிநீர் பாதுகாப்பற்றது என்பதாக தற்காலத்தில் மக்கள் மனங்களில் மாற்றப்பட்டு விட்டன. உணவகங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் தனியார் நிறுவனங்களின் குடிநீரே ஆதாரங்களாக இருக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பான நீர் குறித்த இத்தகைய விழிப்புணர்வு யாருக்கு ஆதாயம்?
இனி பாட்டிலில் பிளாஸ்டிக் துகள் இல்லாத உயர்தர குடிநீர் என அடுத்த சரக்கு சந்தையில் புதிதாக விற்கப்படும். இப்போது செலவழிப்பதை விட இனி குடிநீருக்கான பட்ஜெட் அதிகரிக்கும். தண்ணீரில் கலந்திருக்கும் தனியார் மயம் எனும் விஷத்தை முறியடிக்காமல் பாதுகாப்பான பாட்டில்களால் என்ன பாதுகாப்பு வந்து விடப் போகிறது?
:
வினவு தளத்தில் வெளியாகும் படைப்பு
How much plastic is there in your packaged water?
Share this: