மூடப்பட வேண்டியதும் திறக்கப்பட வேண்டியதும்

ஒரே குழப்பம்
ஒருங்கே மனதிற்குள்

மூடப்பட வேண்டியது எது
திறக்கப்பட வேண்டியது எது

நாளெல்லாம் செய்திகள்
நாளேடுகளில்
நாலு பேர் சேர்ந்து
நங்கையை நாசம் செய்ததாக

நங்கையை மட்டுமா
நயவஞ்சக நரம்புகளால்
நறுமணம் பரப்ப
இன்னமும் இதழ்விரிக்கா
மொட்டுக்கள் கூட
பாரபட்சம் இன்றி
பன்றிகளால் மேயப்பட்டு
சகதிகளாய் மாறிப்போகின்றன

மேய்ந்த நாடுகளெல்லாம்
புல் வசீகரமாக இருந்தது
புல்லின் கவர்ச்சி ஈர்த்தது
என்று தான் சொல்கிறதே தவிர
எனக்கு உயிரில் பசித்தது
எனக்கு உணர்வு துடித்தது

நான் என்னை மீறினேன்
என்று சொல்வதில்ல்லை
அவள் ஆடை எல்லை மீறியது
என்று சொல்கிறது
அது தன்னை தூண்டியது
என்று சொல்கிறது
நான் மனித மரபுகளை தாண்டினேன்
என்று உணர்வதில்லை

அற்ப மனிதர்களே
எது உங்களைத் தூண்டுகிறது
இறுக்கமான மேலாடையா
இணையான ஜீன்ஸா
துப்பட்டா இல்லா திறந்தவெளிகளா
துணையான லெகின்ஸ்களா
உதடு சூட்டிய லிப்ஸ்டிக்க்கா
இப்படி எல்லாம் சொல்லிக்கொள்ளுங்கள்

எது உங்களைத் தூண்டவில்லை ?
ஆடை இலக்கணத்துக்கு
அடக்கமாக உட்பட்டு
அதரங்களை கண்ணியமாய்
மறைத்துவிட்டால் கண்களால்
மேயாமல் இருந்து விடுகிறீர்களா ?
காமத்தீயை கக்காமல் இருந்து விடுவீர்களா

வெறும் விழியாலே அவள் அங்கத்துக்குள்
விஷமிறக்கும் வஞ்சகர்கள் எத்தனை
வெறும் வார்த்தையாலே அவள் உடலை
கூசச் செய்யும் கேவலமானவர்கள் எத்தனை
விரலால் அவள் அனுமதியின்றி
அவள் அதரத்தில் சில்மிஷம் செய்திடும்
சில்லரைக்கார்கள் எத்தனை

மறைக்கும் பகுதியை
எல்லாம் மேய துடிக்கும்
மாடுகள் தான் நீங்கள்

இந்த துப்பட்டா குத்தி
இருக்கும் முன்னழகு மூடி
இரட்டைச்சடை சேர்த்து
மறைத்த பள்ளி
மாணவியின் மானமும்
இங்கு பறிபோகிறது

இறுக்கிய ஆடை
மூடிய பாகம்
மூடாத பாகம்
முன்னழகு பின்னழகு
சுற்றி மூடிய சேலையிலும்
கவர்ச்சி உண்டு
திறந்து பரந்த ட்ஷிர்டிலும்
கவர்ச்சி உண்டு
காணும் கண்ணில்
காமம் தெளித்து பார்ப்பின்
காணும் பெண்ணின்
தேகம் தசையே
சதை பிண்டமே
நாயின் பார்வையில்
அகப்பட்ட கோழிக்கறியும்
எலும்பும் ஒன்றுதான்
அதன் வெறியும் ஆசையும்
தீரும் மட்டும் அது
நக்கப்படுகிறது
எச்சிலாக்கப்படுகிறது
உறியப்படுகிறது
உணவாக்கப்படுகிறது

இதில் கொழுத்த கரி
மெல்லிய கரி
பொறித்த கரி
அவித்த கரி
என்று எல்லாம் காரணம் கூறி
கோழிகளை மேயப்போகாமல்
கோழி கூட்டிற்குள் அடைத்த காலம் போய்
கோழிகள் வீட்டு முற்றம் மட்டும் சுற்றி பின்
கோழிகள் உலகம் சுற்ற ஆரம்பித்தும் விட்டன
எல்லா காலத்திலும்
இது தொடர்ந்தே வருகிறது
இது ஒரு இனத்தின்
ஒரு கொடிய பசி
நாயென்று ஆணினத்தை
சொல்லி முடிக்க மனம் வரவில்லை
அப்பாவும் அண்ணனும்
எந்தன் அண்ணலும்
ஆணாக இருக்க
அன்பான அருமையான
ஆதரவான ஒழுக்கமான
உண்மையான ஆண்கள்
ஊரெல்லாம் இருப்பினும்
ஓரத்தில் ஒரு ஓரத்தில்
ஆண் மனசில் ஒரு ஓரத்தில்
பூப்பெய்திய காலம் தொட்டு
சதை வெறிபிடித்த
நாய் இருக்கிறான்
ஏட்டிப் பார்க்கிறான்

சிலர் வாலி சுருட்டி இரு என்று வைத்து விடுகிறார்கள்
பலர் அப்படி இருக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்
சிலர் வால் ஆட்டினால் தான் நாய் என்று சொல்லிக்கொண்டு
தானே நாயானதை அறியாமல் சதை வேட்டை ஆடிக்கொண்டிருக்கும் அற்பங்கள்
அவள் என்னும் அற்புத சிற்பங்கள் அநாதை பிணங்களாய்
இந்த நாய்களின் வேட்டைக்கு பின் அங்கும் இங்கும்

மூடப்பட வேண்டியது எது
திறக்கப்பட வேண்டியது எது

மூடப்பட வேண்டியது
பெண்ணின் அதரங்களா-------?
திறக்கப்பட வேண்டியது
ஆணின் இதயங்கள்
மாற்றப்பட வேண்டியது
பெண்ணின் இலக்கணங்கள்
அவளின் அடையாளங்கள்
மறைக்கப்பட்ட உண்மைகள்
பருவ பாடங்கள்

சமூகம் சொல்லித்தர வேண்டிய
ஆண் பெண் கல்வி
உடல் மொழி
உணர்வு மொழி
நமக்கான புரிதல்

இன்னும் என்னன்னவோ
என்ற என்ன வட்டத்துக்குள்
சுற்றியபடி இஇப்போது
நானும் என் ஆசிபாவும் !!!

எழுதியவர் : யாழினி வளன் (17-Apr-18, 2:48 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 236

மேலே