சில மௌனங்களில் சில சொற்கள்
உன் மௌனத்துடன்
காற்றில் பதங்கமுறும்
புன்னகை...
அது தெரியும்.
எழுதிய புதினத்தை
ஓயாது மனனம்
செய்யும் மனதில்
மோதி மோதி
ஓடும் அலையென்று.
திட்டங்கள் இன்றி
புன்னகையினூடே
தலை கவிழ்வாயே...
சிரபுஞ்சி சாரலாய்
தெறிக்கச்செய்து
நொடிகளை புரட்டும்
விசைமுள் கூட
நாணத்தில் நழுவுமென
கணிக்க கொண்டாயோ?
நீராவியாய் நான் திரிய
எனக்கென்று இருக்கும்
மந்திரப்புன்முறுவலில்
நீயே நெசவுகிறாய்
காதலின் தோகைகளை.
என் கை பற்றுகையில்
கண்பற்றிய கணத்தில்
உச்சரிக்க உச்சரிக்க
ஈரமற்று உலர்ந்த
சொற்கள் எவ்வொன்றும்
ஸ்வர்க்கத்தில் ஒளிரிட்ட
வளியோடு கலவிய
வெண் இதழ்களாக...
நமதில் உன் உரையாடல்கள்.