எது வெற்றி சிறுகதை

முன்னுரை: இந்த சிறுகதை செக்ஸ் கதையல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்த விரும்புகிறேன். மேலெழுந்த வாரியாகப் படிக்கும் போது அவ்வாறு தோன்றினாலும் இதன் உண்மையான நோக்கம் செக்ஸ் அல்ல. ஒரே.வீட்டில், ஒரே அறையில் இருந்தாலும் தங்களுக்குள் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் பல தம்பதிகள் உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் இவ்வாறு இருப்பது இவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வருவதில்லை. இவர்களைப் போன்று உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி, உறவு கலவாமல் இருந்து, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஏமாளிகள் இந்தக் கதையைப் படித்த பின்பாவது தங்களுக்குள் ‘ உடன்படுக்கை ’ ஏற்படுத்திக் கொண்டால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். – கதாசிரியர்.


கார்த்திகேயன் தன் மனைவி யிடம் மீண்டும் கெஞ்சினார் “ ஜெயந்தி . . . . ப்ளீஸ் . . . . “

“ நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதே பதில் தான். . . . முடியாது . . . . முடியாது . . . .” திட்ட வட்டமாக மறுத்தாள் ஜெயந்தி.

“ நீயே இப்படி சொன்னால் எப்படி? உங்கிட்ட மட்டும்தான் நான் இவ்வளவு உரிமையோட கேக்க முடியும் “ கார்த்திகேயன் தன் மனைவியிடம் மன்றாடினார்.

ஜெயந்தியும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். “ உங்க டேஸ்ட் ரொம்ப சீப்பாயிருக்கு. மட்ட ரகமா நடந்துக்காதீங்க. “

“ நம்ப பெட்ரூமில, என் முன்னாடி மட்டும்தான் நீ இந்த நீச்சல் உடையோட நிக்கப்போறே. இதில வெக்கப் படவோ கூச்சப் படவோ ஒண்ணுமேயில்லை . . உனக்கு இந்த ட்ரெஸ் நன்னாயிருக்கும்னு அறுநூறு ரூபா கொடுத்து வாங்கி வந்தேன் “ என்று கூறிக் கொண்டே வந்த கார்த்திகேயனை இடை மறித்தாள் ஜெயந்தி. “ நானா வாங்கி வரச் சொன்னேன்? நீங்களாவே எதையாவது வாங்கிட்டு வருவீங்க. . . . . அதையெல்லாம் நான் போட்டுக்கணும்னு கட்டாயமா என்ன? . . . . .”

ஏமாற்றமும் கோபமும் கலந்த தொனியில் பேசினார் கார்த்திகேயன். “ ஜெயந்தி . . . . உனக்கு பிடித்தமான ட்ரெஸ்ஸ நீ போட்டுக்கோ . . . . . உன்னை நான் கம்பெல் பண்ண மாட்டேன். உனக்கு இது நன்னாயிருக்ககும்னு இந்த நீச்சல் உடையை வாங்கி வந்த நான்தான் பைத்தியக்காரன் “

வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி கார்த்திகேயன் தனது அறைக்குச் சென்று விட்டார். தனது அறைக்குச் சென்ற அவர் தனிமையில் உட்கார்ந்து கொண்டு சிந்திக்கலானார். பழைய நினைவுகளில் மூழ்கினார்.

கார்த்திகேயன் தனது திருமணத்துக்காக பல பெண்களைப் பார்த்தும் அவர்களுள் ஒரு பெண் கூட அவருக்குப் பிடிக்கவேயில்லை. ஆனால் ஜெயந்தியைப் பார்த்த உடனேயே அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. ஜெயந்தியின்பால் ஓர் ஈர்ப்பு ஏற்படுவதை அவர் உணர்ந்தார்.

அண்மையில் அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்த போது ஒரு கடையில் அந்த நீச்சல் உடையைக் கண்டார். அதைக் கண்ட உடனேயே அழகான தன் இளம் மனைவி அந்த உடையில் எவ்வாறு
தோற்றமளிப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தார். .உடனடியாக அதன் விலையைக் கூடப் பொருட்படுத்தாமல் வாங்கி விட்டார். தன் மனைவிக்கென்றே ஆசை ஆசையாய் தான் வாங்கிய அந்த உடையை அணிய அவள் மறுத்தது அவரை உதாசீனப் படுத்துவது போல் நினைத்தார். அது கூடப் பரவாயில்லை. ஜெயந்தி இன்று அவரது ரசனை மிகவும் சீப்பாகவும் மட்டரகமாகவும் இருப்பதாகக் கூறியதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பிறர் மனை நயவா பேராண்மை கொண்ட தான் தன் சொந்த மனைவியைக் கூட நயவாமல் இருக்க வேண்டியதுதானோ என்று ஐயுற்றார். தன் மனைவியைத் தான் விரும்பிய உடைகளில், கோலங்களில் கண்டு களிக்க விரும்பும் ஒரு கணவனின் ரசனை
மட்டரகமானது என்றால் அனைத்துக் கணவர்களின் ரசனையும் மட்டரகமாகத் தான் இருக்கும். மட்டரகமான ரசனை இல்லாத கணவன் யார் என்பதைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அத்தகைய ஒருவர் ஒரு வேளை அகப்படுவதுவாக வைத்துக் கொண்டாலும் அவர் கண்டிப்பாக ஓர் ஆண் மகனாக இருக்க மாட்டார். இதையெல்லாம் எப்படி ஜெயந்திக்குப் புரிய வைப்பது? யார் புரிய வைப்பது? என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் ஜெயந்தியின் குரல் கேட்டு தன் சுய நிலைக்கு வந்தார். ஜெயந்தி அவரைச் சாப்பிட அழைத்தாள்.

“ இன்னைக்கு என்ன குழம்பு? “ என்று கேட்டுக் கொண்டே டைனிங் டேபிள் முன் அமர்ந்தார்.

“ இன்னைக்கு வத்தக் குழம்பு “ என்று சொல்லிக்
கொண்டே சாதம் பரிமாறினாள் ஜெயந்தி.

“ வத்தக் குழம்பு எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத்
தெரியுமில்லையா? . . . . . எனக்குப் பிடிக்காததா செய்யணும்னுதான் உன்னோட பாலிஸியா? “ கர்ஜித்தார் கார்த்திகேயன்.

“ சாதாரணமா உள்ளதப் போயி பெரிது படுத்தறீங்களே “ பதிலுக்கு ஜெயந்தி.


“ எனக்கு மோர்க் குழம்புதான் பிடிக்கும்னு உனக்குத் தெரியுமில்லையா? . . . . .” மீண்டும் சீறீனார் கார்த்திகேயன்.

“ ஆனா மோர் இல்லையே “ என்ற ஜெயந்தியிடம் “ மோர் இல்லைன்னா வாங்கணும் . . . . . . இதுக்கெலாம் உனக்கு நேரம் எங்கே யிருக்கு? . . . . . ஊர் சுத்தவே உனக்கு நேரம் காணது “ கிண்டலடித்தார் கார்த்திகேயன்.

“ மாசம் அம்பதாயிரத்துக்கும் அதிகமா சம்பாதிக்கறேன். வாய்க்கு ருசியா சாப்பிடக் கூட முடியலே “

அங்கலாய்த்துக் கொண்டார் கார்த்திகேயன்.

“ நானும்தான் அதே அளவுக்கு சம்பாதிக்கறேன் “ மறுமொழி பகர்ந்தாள் ஜெயந்தி. அவள் அப்படி கூறியதும் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் கார்த்திகேயன்.


“ ஓஹோ . . . . சம்பாதிக்கற திமிர்லதான் இப்படியெல்லாம் பண்ணறியா? சாப்பாடு விஷயத்தில கூட நீ நெனச்சதான் பண்ணுவியா? என்ன வேணும்னு கேக்கக்கூட எனக்கு உரிமையில்லயா? “ என்றார்.

ஜெயந்தி ஒன்றும் பேசாமலே இருந்தாள்.

தொடர்ந்த கார்த்திகேயன் “ உங்கிட்ட பேசிட்டிருக்க இப்ப எனக்கு நேரமில்லை , , , , , . சாயந்திரமா வந்து . . . கவனிச்சுக்கிறேன். . கொஞ்சம் இடம் கொடுத்தா போதும் . . . . தலைக்கு மேலே ஏறிடுவீங்களே . . . . திமிரு . . . . .திமிரு . . . . . திமிரு . . . . . “
அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்து விட்டு அலுவலகத்துக்குக் கிளம்பி விட்டார் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் சென்ற பின்னரும் ஜெயந்தியின் காதுகளில் அவரது வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தன.
“ திமிரு . . . . .திமிரு . . . . . திமிரு . . . . .திமிரு . . . . .”
வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண்கள் சாதாரணமாய் எதிர்கொள்ளும் வார்த்தைகள்தான் இவை. திமிர்த்தனமாக தாம் எப்போதாவது நடந்து கொண்டுள்ளோமா? என்று தன்னத்தானே கேள்வி
கேட்டுக் கொண்டாள். அந்தக் கேள்விக் குரிய பதில்தான் அவளுக்குப்
புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. கார்த்திகேயனின் கோபத்துக்குக் காரணம் அவளின் சமையல் அல்ல. அவர் விரும்பிய உடையை அவள் அணிய மறுத்ததுதான் அவரது கடுமையான வார்த்தைகளுக்குக் காரணம் என்று நன்றாகவே அவளுக்குப் புரிந்து விட்டது. எனினும் தனக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லாத அந்த ஆபாசமான உடையைத் தான் எப்படி அணிவது? பெண்ணணுரிமை பற்றி வாய் கிழியப் பேசும் ஆண்கள் தம் மனைவிக்கு மட்டும் அந்த உரிமையைக் கொடுக்க மறுப்பது ஏன் என்று சிந்தித்தாள். தன்னை ஊர் சுத்துவதாக அவர் ஏளனம் செய்ததும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. திருமணத்துக்கு முன்பு கார்த்திகேயன் தன்னை முதன் முதலாய் பார்த்த போது தன்னிடம் வழிந்ததும் அவன் வழிவதை அவள் அமைதியாகப் பார்த்துக் கொண்டு ரசித்ததும் அவளது நினைவுக்கு வந்தன. திருமணத்துக்குப் பின் தேன் நிலவு சென்றிருந்தபோது கார்த்திகேயன் தன்னயே சுற்றிச் சுற்றி வந்ததையும் ஏறக்குறைய தன்னிடம் சரண்டர் ஆகி விட்டதையும் நினத்துப் பார்த்தாள். அப்படிப் பட்டவரா இன்று கடுமையான வார்த்தைகளைத் தன்னிடம் பேசினார்? அவளால் நம்பவே முடியவில்லை. இது அவருக்கு அவள் மீதுள்ள வெறுப்பை அல்லவா உணர்த்துகிறது? இது கணவன் மனைவி உறவில் பின்னடைவல்லவா இந்த
வெறுப்பு தொடர்ந்தால் நாளடைவில் அவர் தன்னை விட்டு மெல்ல மெல்ல அகன்று விடுவாரோ என்று அச்சமுற்றாள். அதை அனுமதிக்கவே கூடாது. அவரை எப்படியாவது தன்னிடமே நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டாள். அதற்காக என்னென்ன வித்தைகளைச் செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினாள். அன்று மாலை வீடு திரும்பிய பின் தன் கணவர் தன்னிடம் என்னவெல்லாம் சொல்வாரோ? அந்தப் பெரும் சண்டையை எப்படி சமாளிப்பது என்று அஞ்சினாள். சண்டை போட்டால் சண்டை போட்ட தினத்தன்று மட்டும் அல்ல. கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு ஓர் இறுக்கமான சூழ்நிலை நிலவி, செய்யும் செயல்களில் கவனம் சிதறி எல்லாம் தப்பும் தவறும் ஆகுமே. அந்த ஒரு வார காலத்துக்கு ஆக்க பூர்வமான எண்ணங்கள் எதுவும் தோன்றதே என்றெல்லாம் அஞ்சினாள் ஜெயந்தி. முன்பு பல முறை இதனை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறாள். புயலுக்குப் பின் அமைதி என்று கூறினாலும் புயலே ஏற்படாமால் பாதுகாத்துக் கொள்வது புத்திசாலித்தனமல்லவா என்று சிந்தித்த ஜெயந்தி மாலை வீடு திரும்பிய பின் கணவருடான சண்டையை எப்படி தவிர்ப்பது என்று சிந்திக்கத் தொடங்கினாள்.

மாலை. கார்த்திகேயன் அலுவலகத்திலிருந்து வந்தார், ஜெயந்தி கட்டிலில் இழுத்து மூடிப் படுத்துக் கிடந்தாள்.

“ ஏய் . . . . . . . என்ன ஆச்சு? “ என்று கேட்டுக் கொண்டே அவளது போர்வையயை விலக்கப் போனார் கார்த்திகேயன்.

“ போர்வையை விலக்காதீங்க . . . . . .” என்று அவசர அவசர மாகத் தடுத்த ஜெயந்தி, “ காத்து பட்டாலே குளிருது . . . . .கதவை சாத்திட்டு வாங்க “ என்று நடுங்கும் குரலில் சொன்னாள்.

கதவைத் தாழிட்டு வந்த கார்த்திகேயன் ஜெயந்தியின் அருகில் வந்து “ வா . . . . . டாக்டர்கிட்ட போகலாம் , வா . . . . “ என்று கூறிக் கொண்டே அவளது போர்வையயை விலக்கினார். போர்வையை விலக்கியவர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. ஜெயந்தி அவர் வாங்கிக் கொடுத்த நீச்சல் உடையில் படுத்துக் கிடந்தாள். கண்களை அகல விரித்தார். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை யாதலால் அவருக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. அந்த நீச்சல் உடை அவளுக்குக் கச்சிதமாய் பொருந்தியி ருந்தது. அந்த உடையில் அவளின் அழகான அங்க வளைவுகள் அப்பட்டமாகத் தெரிந்தன.


. . . . 6 . . .
–: 6 :–

“ குளிருதுன்னு சொன்னே “ என்று அப்பாவித்தனமாக் கேட்டார்

“ இங்க வாங்க . . . . சொல்லறேன் . . . . “ என்ற ஜெயந்தி அவரது கையைப் பற்றி இழுத்தாள். அவள் அருகில் அமர வைத்தாள். தன் கைகள் இரண்டையும் உயரத் தூக்கி, இடையை நெளித்து, நெஞ்சை நிமிர்த்தி, சோம்பல் முறித்து கொண்டே இலேசான புன்னகையைத் தவழ விட்டாள். புரண்டு படுத்துக் கொண்டாள்.

அவ்வளவுதான். நீச்சல் உடையில் அவளைப் பார்த்து ஏற்கெனவே கதி கலங்கிப் போயிருந்த அவரை அவளது அங்க அசைவுகள் மேலும் உசுப்பேத்தி விட்டன.

“ டார்லிங் . . . . “ என்று கூவிக் கொண்டே அவள் மீது குபீரெனப் பாய்ந்தார், “ ச்சீ . . . . சரியான முரடு . . . . “ என்று அவள் அவரைப் பிடித்துத் தள்ளினாள்.

ஒரு கணவருக்குத் தன் மனைவிடமிருந்து ‘இந்த’ விஷயத்தில் ‘முரடு’ என்று பட்டம் கிடைத்தால் அவர் வாழ்க்கையில் பெரும் பேறு பெற்றவர் ஆவார் என்று எங்கேயோ எப்போதோ படித்தது அவரது நினைவுக்கு வந்தது.

மறு நாள் காலை. கார்த்திகேயன் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அவரருகில் வந்த ஜெயந்தி,

“ இன்னைக்குப் பேப்பர்ல என்ன விசேஷம்?” என்று கேட்டாள்.

“ விவாகாரத்து ஆகிறவர்களோட எண்ணிக்கை வருஷா வருஷம் அதிகரிக்குதாம் . . . . . இந்தா பாரு . . . . . “ என்று அந்த செய்தியைக் கார்த்திகேயன் காட்டினார்.

“ ஆயிரக்கணக்கானவர்களைக் கூட்டி நடத்தப்படும் ஒரு திருமணத்தை . . . . புனிதமான ஒரு காரியத்தை . . . . . ஒரே ஒரு நீதிபதி ரத்து பண்ணறதை என்னாலே ஏத்துக்கவே முடியாது “ என்ற ஜெயந்தியிடம், ““ இவங்கதானே விவாகரத்து பண்ணனும்னு விரும்பறாங்க. நீதிபதியா விவாகாரத்து பண்ணச் சொன்னார்? “ என்று கேட்டார் கார்த்திகேயன்.

“ எந்தக் கோர்ட்டுக்கும் போகாமலேயே விவாகரத்து ஆனவங்க மாதிரி இருக்கறவங்களும் உண்டு தெரியுமா? “ என்று கேட்டாள் ஜெயந்தி.

“ சமூகத்திலே தமக்கு இருக்கிற அந்தஸ்து கருதியும் குடும்ப கௌரவம் கருதியும் இவங்க கோர்ட்டுக்கெல்லாம் போக மாட்டாங்க. ஆனா சேர்ந்து வாழவும் விரும்ப மாட்டாங்க. அதனால, ஒரே வீட்டில, ஒரே ரூமில இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா வெளி உலகத்துக்கு ரொம்பவும் அன்னியோன்னமான தம்பதிகள் போலத் தெரிவாங்க “. என்றார் கார்த்திகேயன்.

“ இவங்களப் பார்த்து ‘ஏமாளிகள்’னுதான் சொல்லத் தோணுது அழகான மனைவி, அன்பான கணவன், நிறைவான வருமானம், நோயற்ற வாழ்க்கை எல்லாம் இருந்தும், எதையுமே அனுபவிக்காம, வாழ்க்கையின் இனிய தருணங்களைத் தவற விட்டு விட்டு, தமது இளமையைத் தொலைக்கிறவங்களப் பத்தி வேறென்ன கூற முடியும்? “ என்றாள் ஜெயந்தி.

“ விவாகரத்து ஆனவங்களை விட இவங்க நிலை பரிதாபம் “ என்றார் கார்த்திகேயன்.

அதை ஆமோதித்த ஜெயந்தி, “ கணவன், மனைவிக்கிடையே ப்ரச்னை, அபிப்ராய பேதம் ஏற்படறது சகஜம்தான். ப்ரச்னை இல்லாத தம்பதிகளே இருக்க மாட்டாங்க. எந்தப் ப்ரச்னையாயிருந்தாலும் அதோட அணுகுமுறைதான் முக்யம். அணுகுமுறை சரியா இல்லைன்னா சாதாரண ப்ரச்னை கூட பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாகி விடும். என்றாள்.

“ கணவன், மனைவிக்கிடையே ப்ரச்னை வந்துட்டுது. அதுக்கு என்னதான் தீர்வு? என்று கேட்டார் கார்த்திகேயன்.

“ ப்ரச்னை வந்த உடனேயே கணவன், மனைவி ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசி, ப்ரச்னை என்ன? ப்ரச்னை வரக் காரணம் யார்? எதிர் காலத்தில் அது மாதிரி ப்ரச்னை வராமல் இருக்க என்னென்ன பண்ணலாம்? என்பதையெல்லாம் அலசி, ஆராய்ந்து அதுக்கு ஒரு தீர்வு காணலாம். இதில கணவன், மனைவி ரெண்டு பேருமே EGO பாக்கக்கூடாது. ப்ரச்னை வந்த உடனேயே SOLVE பண்ணியாகணும். லேட் பண்ணினா பிறகு கஷ்டமாயிடும் “ ஒரு சொற்பொழிவே ஆற்றினாள் ஜெயந்தி.

பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திகேயன்,
“ கேக்க நல்லாத்தான் இருக்கு. இதெல்லாம் நடக்கற காரியமா? “ என்றார்.

“ ஏன் முடியாது? உணர்ச்சி பூர்வமா முடிவு எடுக்காம, அறிவு பூர்வமா முடிவு எடுத்தா கண்டிப்பா முடியும் “ என்றாள். தொடர்ந்த அவள் “ கணவன், மனைவி இருவருமே தாங்கள் சொல்வதுதான் சரின்னு வாதம் பண்ணி, அந்த வாதத்தில, தனக்குத் தான் வெற்றி கிடைக்கணும்னு நெனக்கிறாங்க. ஆனா வாழ்க்கையில வெற்றி அடையறதுதான் முக்யம் என்கிறதை ரெண்டு பேரும் அறவே மறந்துடறாங்க. எது வெற்றின்னு அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குது “ என்றாள்.

ஜெயந்தி ஓர் அறிவு ஜீவி எனப் புரிந்து கொண்டார் கார்த்திகேயன், ஜெயந்தி தனக்கு மனைவியாக அமைந்ததற்காகப் பெருமைப் பட்டார்.

“ இவ்வளவு பேச நீ எங்கே கத்துகிட்டே? “ என்றார் கார்த்திகேயன்.

“ எல்லாம் அனுபவத்திலிருந்துதான். “ என்ற ஜெயந்தி,
“ அந்தக் குறிப்பிட்ட சண்டையில தான்தான் வெற்றி பெறணும்கற குறிக்கோளோட ரெண்டு பேரும் சண்டை போடறதினால, அ.ந்தச் சண்டை நாளடைவில் கணவன் மனைவிக்கிடையே ஒரு விரிசலை உண்டு பண்ணி, அதுவே பிளவா மாறி, விவாகரத்து வரைக்கும் போய்டறது “ என்றாள்.

“ நீ சொல்லறது நூற்றுக்கு நூறு சரி “ என்றார் கார்த்திகேயன்.

“ இப்ப நம்ப வீட்டையே எடுத்துக்குங்க. . . . . “ என்ற ஜெயந்தி, “ நீங்க வாங்கிக் கொடுத்த அந்த ட்ரெஸ்ஸ நான் போட்டுக்கலைன்னு எங்கிட்ட என்னமா சண்டை போட்டீங்க? . . . . . . உங்களை எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல. நீங்க சொன்ன மாதிரியே அதப் போட்டுக்கிட்டேன். “ என்றாள் ஜெயந்தி.

கார்த்திகேயன் அமைதியாக இருந்தார்.

“ முதல்லே போட்டுக்க மாட்டேன்னு சொன்ன நானே அதப் பிறகு போட்டுக்கிட்டேன். இதனால, என்னோட வாதத்தில நான் தோல்வி அடைஞ்சிட்டேன். ஒத்துக்கறேன். . . . . . . ஆனா வாழ்க்கையில நான் வெற்றி அடைஞ்சிட்டேன். ஆனா நான் . . . . . . . . “ தொடர்ந்து பேச முற்பட்ட அவளை இடை மறித்தார் அவர்.

“ நீ எப்பேர்ப்பட்ட ஆளூ? “ என்றார்.

“ நான் அதை அணிய மாட்டேன்னு பிடிவாதம் பண்ணி, அதை அணியாமலே இருந்தேன்னா என்ன ஆகியிருக்கும்? . . . .” என்றாள் அவள்.

“ உன்னோட அபிப்ராயத்தில நீ வெற்றி பெற்றிருப்பே “ என்றார் கார்த்திகேயன்.

“ எனக்குத்தான் வெற்றி. நான் ஒத்துக்கறேன். இருந்தாலும் நம்ப ரெண்டு பேருக்குமிடையே மனஸ்தாபம்தான் மிஞ்சியிருக்கும். இந்த மனஸ்தாபத்தில நான் பெற்ற வெற்றியைக் கொண்டாடவா முடியும்? அந்த வெற்றியினாலதான் என்ன பலன் இருக்கு சொல்லுங்க? “ என்றாள் ஜெயந்தி.

“ எது வெற்றி? ன்னு நல்லா தெளிவா . . . . . . புரியும் படி சொன்னே” என்ற கார்த்திகேயன், “ நீ மட்டுமா தோல்வி அடைஞ்சே? நானும்தான் உங்கிட்ட எத்தனை தடவை தோத்துப் போயிருக்கேன் . . . . . . . . போன மாசம் கூட நீ லேடீஸ் க்ளப்பில சேரணும்னு சொன்னே. இப்ப அதெல்லாம் வேண்டாம்னு நான் சொன்னப்பக்கூட நீ பிடிவாதம் பண்ணி, லேடீஸ் க்ளப்பில சேர்ந்தே. அதுக்கப்புறம் நீ கிட்டத்தட்ட ஒரு மாசம் எங்கிட்ட பேசவே இல்லை. உன்னைத் தாஜா பண்றதுக்கு நான் பட்ட பாடு . . . . . . . . . . செலவழிச்ச பணம் . . . . . . .உன் காலில் விழாத குறைதான் , , , , , , , , , “ என்றார்.

“ பொண்டாட்டி காலில் விழுந்தாத்தான் என்னவாம் ? . . . . ..” என்று அவரைப் பார்த்து கண் சிமிட்டினாள் ஜெயந்தி.

“ உன் காலில் தானே? . . . . . . . தினம் தினம் உன் காலில் விழ நான் தயாராத்தான் இருக்கேன். . . . . . . . ஆனா இதை வெளீல சொல்லிடாதே . . . . ப்ளீஸ். . . . . . . “ .என்றார் கார்த்திகேயன்.

ஜெயந்தி யோசித்துப் பார்த்தாள். முந்தைய நாள் தன்னிடம் கடுமையாகப் பேசியவர் இவ்வளவு இன்று பணிவாகப் பேசிகிறார். தான் கொடுத்த இன்ப அதிர்ச்சி வைத்தியம் நன்றாகவே வேலை செய்வதை உணர்ந்து உள்ளம் பூரித்தாள்.
“ வெளீல சொல்லாம இருக்கணும்னா, ஐயாயிரத்துக்குக் குறையாம, ஒரு பட்டுப் புடவை, . . . . அதுவும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே, எனக்கு வந்தாகணும். என்ன சொல்லறீங்க
? “ கண்டிஷன் போட்டாள் ஜெயந்தி.

“ ப்ளாக் மெயில் பண்ணறியா? “ என்ற கார்த்திகேயன் அவளது காதைத் திருகினார்.

“ நான் சொல்லறதை சொல்லிட்டேன். . . . . . ஒரு மாசம் டைம் கொடுத்திருக்கேன். . . . . . அப்புறம் உங்க இஷ்டம் . . . . . “ மீண்டும் அவரைச் சீண்டினாள் ஜெயந்தி.

கலகலவென்று அவர்கள் சிரித்தனர். அந்தச் சிரிப்பு அவர்களது உள்ளார்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. அந்தத் தம்பதிக்கு இனிமேல் என்றென்றும் மகிழ்ச்சிதான் ஏனெனில் எது வெற்றி? என்பதை அந்த இருவருமே நன்கு புரிந்து கொண்டு விட்டனர்.


( நிறைவு )

எழுதியவர் : (4-May-18, 1:44 pm)
பார்வை : 232

மேலே