உளம்விரும்பும் முத்தமிழே

கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தே தோன்றிக்
***கவின்மொழியாய் உருவான செந்தமிழே வாழி !
நல்லழகு "தமிழ்"என்ற சொல்லொன்றே போதும்
***நயமாக மூவினமும் இணைந்துவந்து கொஞ்சும் !
மெல்லயினி தமிழ்மொழிதான் சிகரத்தை எட்டும்
***வியத்தக்க கலைச்சொற்கள் தனித்தமிழாய்க் கொட்டும் !
இல்லாத தேதொன்றும் இன்றமிழி லில்லை
***இருளகற்றி ஒளிகூட்டும் தமிழுக்கீ டில்லை !

உயிராகி மெய்யாகி உயிர்மெய்யு மாகி
***உதிரத்தில் உணர்வுகளில் கலந்தினிக்கும் தேனாய் !
இயலிசையாய் நாடகமாய் இளமையுடன் பாரோர்
***இதயத்தில் உயர்வாக விரிந்திருக்கும் வானாய் !
உயர்தனிச்செம் மொழியிதுகற் கண்டாய்த்தித் திக்கும்
***உளம்விரும்பும் முத்தமிழே ஒலித்திடுமெத் திக்கும் !
பயன்தரும்நல் லிலக்கணமும் இலக்கியங்கள் யாவும்
***பறைசாற்றும் பழந்தமிழின் மாண்புகளை நன்றே !

பார்போற்றும் மொழிகளிலே மூத்தமொழி யானப்
***பைந்தமிழால் அனைத்துலகும் இன்பமுறச் செய்வோம் !
ஆர்வர்டின் அரியணையில் தமிழேற்றி வைத்தே
***அதன்சிறப்பை உய்த்துணரும் நாள்தொலைவி லில்லை !
தேர்பூட்டி முத்தமிழைப் பவனிவரச் செய்து
***தேவமொழி யையுலகே கைக்கூப்ப வைப்போம் !
மார்தட்டி முழங்கிடுவோம் தமிழ்மொழிதா னென்றும்
***வற்றாத வளமையொடு விளங்குமொழி யென்றே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-May-18, 11:45 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 679

மேலே