கலவரத் தனிமை - சந்தோஷ்

விடியலுக்கான
பிரசவ வேதனையோடு
கர்ப்பிணி இராத்திரி
ரணம் பிளிறலிடுகிறது.
மனசாட்சியற்ற
உலகம் உறங்கிக்கொண்டிருக்கிறது
மருத்துவச்சியாகிவிட்ட
என் தனிமை
பிரசவம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-----------------

ஒவ்வொரு இரவிலும்
ஒவ்வொரு விதமான சடலமாய்..
நான்........!

-------------------
கருப்பு சுரக்கும்
இந்த இராத்திரி மழையில்
வண்ணதாசனோடு நனைந்து
ஒரு நிறமாகிட ஆசை.

---------------------

நகுலனின் தனிமைக்கும்
என் தனிமைக்கும்
பெருத்த வேறுபாடில்லை.
அவரின் தனிமை நிழற்காலம்..!
என் தனிமை நிகழ்காலம்..!

--------------------------

விசித்திர தனிமை
இராத்திரி மெளனத்தில்
சித்திரை வெயிலை
இரசித்து வெடிக்கிறது.

ஒரு பல்லியின் வேட்டையில்
சிக்கித்தவிக்கும்
ஒரு சிறு பூச்சியின்
கடைசிக் கதறலை
யாரேனும் கேட்டிருக்க மாட்டீர்கள்.
நான் கேட்டிருக்கிறேன்...
மெளன மொழியில்
கதறல் வன்கொடுமையை
கவிதையாக்கி இருக்கிறேன்.
ஆனாலும் பாவம் நீங்கள்..,
என் தனிமை பாஷை
உங்களுக்கு புரிய இயலாது.

நான் தவித்து வெடிக்கிறேன்.
இராத்திரி மெளனத்தில்
சித்திரை வெயில் சூட்டில்
ஆதரிக்கும் குளிருக்காய்
தனிமை வியர்வையில்.!


----

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (9-May-18, 9:10 pm)
பார்வை : 160

மேலே