சொர்ணா இரயில் தங்கவயலின் வாழ்வாதாரம்

விடியலைத்தேடி
விடியுமுன்னே
மேற்கு நோக்கி
விரைந்தோடும் இது
நீள நந்தவனத்தேரு

தங்க நகரத்திலிருந்து
தோட்ட நகருக்கு
தினமும் சுற்றிவரும்
அதன் கம்பீரத்தை பாரு

எல்லா தர மக்களும்
வேற்றுமையில்லாமல்
ஒருவருக்கொருவர்
விட்டுகொடுத்து அனுசரித்து
ஒற்றுமையாக அமர்ந்து
பயணிக்கும் இந்த கலாச்சாரத்தை
கற்றுத்தந்தது யாரு...?

ஒருத்தாயின்
மக்களைப்போல்
ஒரே தட்டில் ஒன்பது
கைகள் வைத்து அன்போடு
பகிர்ந்துண்ணும் காட்சியை
ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு
என இவ்வுலகிற்கு கூறு...

படித்தவனும் பாமரனும்
பட்டம் பெற்றவனும்
சட்டம் கற்றவனும்
மாணவனும் மாணவியும்
வாழ்வாதாரம் தேடி
ஊரைவிட்டு ஊர்செல்லும்
நிலை என்று மாறுமோ
எங்களின் சோக கதை
என்று தீருமோ...

ஒருத்தி தன்
கைப்பிள்ளையை
தவிக்கவிட்டு
உழைக்க ஓடுகிறாள்
ஒருத்தி
தன்னை ஈன்றவர்களை
காப்பாற்ற ஓடி உழைக்கிறாள்
இன்னொருத்தி
ஆயிரம் கனவுகளை
மனதில் சுமந்து
தன் குடும்பத்தை
காக்க ஓடுகிறாள் இந்த
நகரும் சமத்துவபுரத்தை நம்பி...

காலங்காலமாக
ஊரைவிட்டு ஊர்போய்
உழைக்கிறோம்
எக்காலத்தில் வாய்க்குமோ
நாம் அனைவரும்
நம்மூரிலே வேலைசெய்யும்
பொற்காலம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (11-May-18, 4:40 am)
பார்வை : 327

மேலே