மூலிகையே மருந்து 05 ஆஹாவாரை
ஆவாரைக் கண்டோர் சாவோரைக் கண்டதுண்டோ’ எனும் வரி, ஆவாரையால் கிடைக்கும் நித்தியத்தன்மையைப் பறைசாற்றுகிறது. இலை, பட்டை, பூ, வேர், பிசின் எனத் தனது முழு உடலையும் மருத்துவ தானமாக அளிக்கும் ஆவாரை இருக்கும்போது, நோய்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
வெயிலின் தாக்கம் பாடாய்ப்படுத்தும் பொட்டல்களில் வாழும் மனிதர்களின் வெப்பத்தைக் குறைக்கும் தலைக்கவசமாக ஆவாரை இலைகள் பயன்படுவதை இன்றும் பார்க்கலாம். தலைக்கு மட்டுமல்லாமல் உள்மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது, உள்ளுறுப்புகளுக்கும் கவசமாக ஆவாரை பயன்படும்.
பெயர்க் காரணம்:
ஏமபுட்பி, ஆவரை, மேகாரி, ஆகுலி, தலபோடம் எனப் பல பெயர்கள் ஆவாரைக்கு உண்டு. தங்க மஞ்சள் நிறத்தில் மலர்வதால் ‘ஏமபுட்பி’ என்று பெயர் (ஏமம் - பொன்). மேகநோய்களை விரட்டி அடிப்பதால் ‘மேகாரி’ என அழைக்கப்படுகிறது.
அடையாளம்:
‘காஸியா ஆரிகுலட்டா’ (Cassia auriculata) என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆவாரை ‘சீஸால்பினியோய்டே’ (Caesalpinioideae) குடும்பத்தைச் சேர்ந்தது. வறண்ட நிலத்திலும் குதூகலத்துடன் மஞ்சள் நிறப் பூக்களுடன் வளரும் குறுஞ்செடி வகையான ஆவாரை, மண்ணிலிருந்து முளைத்தெழும் சொக்கத் தங்கம்!
மருந்தாக:
பிளேவனாய்டுகள், டானின்கள், அவாரோஸைடு (Avaroside), அவரால் (Avarol) எனத் தாவர வேதிப்பொருட்கள் ஆவாரையில் நிறைய இருக்கின்றன. ஆய்வுகளின் முடிவில் ஆவாரைக்கு இருக்கும் ‘ஆண்டி – ஹைப்பர்கிளைசெமிக்’ (Anti-hyperglycemic) செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆவாரையின் எதிர்-ஆக்ஸிகரணத் தன்மை (ஆன்ட்டி ஆக்சிடண்ட்) குறித்தும் நிறைய ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன.
ஆவாரை இலைகளுக்கு கல்லீரலைப் பாதுகாக்கும் தன்மை (Hepato-protective activity) இருப்பதாகவும் தெரியவருகிறது. சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஆகச் சிறந்த மூலிகை ஆவாரை. ‘நீர்க்கோவைக்குத் தும்பை… நீரிழிவுக்கு ஆவாரை’ என்ற மூலிகை மொழியும் உண்டு. ‘ஆவாரைப் பஞ்சாங்கம்’ என்று சொல்லப்படும் இதன் வேர், இலை, பூ, காய், பட்டை ஆகியவற்றை உலர வைத்துத் தயாரித்த சூரணத்தை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துவர, நீரிழிவு நோயின் தீவிரம் குறையும். நீரிழிவு நோயால் ஏற்படும் அதிதாகம் (Polydipsia), அதிகமாகச் சிறுநீர் கழிதல் (Polyuria), நாவறட்சி, உடல் சோர்வு முதலியன கட்டுக்குள் வரும்.
உணவாக
உலர்ந்த / பசுமையான ஆவாரம் பூக்களை மூன்று தேக்கரண்டி எடுத்து, நீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, சுவைக்குச் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, வாரத்தில் மூன்று நாட்கள் குடிக்கலாம். துவர்ப்பு - இனிப்புச் சுவையுடன் கூடிய இந்த பானம், கைகால்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க உதவும். உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்துச் சிறுநீர் எரிச்சலைக் குறைக்கும்.
உடலுக்குப் பலத்தைக் கொடுக்க, ஆவாரம் பூக்களைப் பாசிப்பயறு சேர்த்துச் சமைத்து, நெய் கூட்டி சாதத்தில் பிசைந்து அவ்வப்போது சாப்பிட்டு வரலாம்.
வீட்டு மருத்துவமாக:
சித்த மருத்துவத்தின் ‘கூட்டு மருந்துவக்கூறு தத்துவத்துக்கு’ (Synergistic effect) ஆவாரைக் குடிநீர் சிறந்த எடுத்துக்காட்டு. ஆவாரை இலைகள், மருதம் பட்டை, கொன்றை வேர் ஆகியவற்றை அரைத்து, மோரில் கலந்து குடிப்பது நீரிழிவுக்கான மருந்து.
இதன் பூவை துவையலாகவோ குடிநீராகவோ பயன்படுத்த உடலில் தோன்றும் வியர்வை நாற்றம், உடலில் தங்கிய அதிவெப்பம் மறையும். ஆவாரம் பூ, அதன் பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளித்துவந்தால், வாய்ப்புண் குணமாகும்.
துவர்ப்புச் சுவையுடைய ஆவாரைப் பூக்கள், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதிக ரத்தப்போக்குக்கு மருந்தாகிறது. மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் அடிவயிற்று வலிக்கு, ஆவாரை மலர் மொட்டுக்களைக் குடிநீரிலிட்டுப் பயன்படுத்தும் வழக்கம் குஜராத் மக்களிடையே உள்ளது. ஆவாரம் பூக்களைக் காய வைத்துச் செய்த பொடியைக் குளிப்பதற்குப் பயன்படுத்த, தோல் பொலிவைப் பெறும்.
உளுந்து மாவோடு, உலர்ந்த ஆவாரை இலைகளைச் சேர்த்து மூட்டுகளில் பற்றுப்போட வீக்கமும் வலியும் விரைவில் குறையும். ஆவாரம் பூவோடு, மாங்கொழுந்து சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீர், மூல நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் டாக்டர் வி. விக்ரம் குமார்