நிழலில் தேடிய நிஜம்

நன்றி தினமணி வெளியீடு:: 08 - 04 - 2018

நன்றி படம் கூகிள் இமேஜ்.
=========================================

இந்த உலகில் நமக்கு நல்லதென்று எது கிடைத்தாலும் சந்தோஷம்தான், ஆனால், ஒரு நல்ல நண்பன் நமக்குக் கிடைத்துவிட்டால் அதைவிடப் பேரானந்தம் வேறென்ன இருக்கப் போகிறது. நமது சுப, அசுப நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, நம்முடன் உறவாடி, நமக்குத் தேவை என்கிறபோது ஓடோடி வந்து உதவிசெய்து, ஆபத்துக் காலங்களில் கூடவே ஆறுதல் சொல்லும் ஒரு அற்புத நண்பர் நமக்குக் கிடைத்து விட்டால் அது இறைவன் நமக்குக் கொடுத்த வரம்தான்.

இதிகாசங்களிலும், புராணங்களிலும், இலக்கியங்களிலும், காப்பியங்களிலும், ஒரு நல்ல நண்பனால் உச்ச நிலைக்குச் சென்ற பல நிகழ்ச்சிகளை நாம் படித்திருக்கிறோம். அதேபோல நல்ல நண்பணாக இல்லாமல், தீயதை உரைக்கின்ற ஒருவன் நண்பனாக அமைந்துவிட்டால் அதைவிட வேறு துன்பம் இல்லை.

நண்பனுக்காக ஒரு கவிதையை வாசிப்போம் வாரீர்..

=========================
நிழலில் தேடிய நிஜம்..!
=========================

சுழலும் புவியுலகில் இறைவன் நமக்களித்தநற்
……….சூழல்தாம் எத்தனை கோடியின்பம் அளிக்கிறது..!
உழலும் மாந்தரினம் இவ்வுலகில் பெற்றபலவுள்
……….ஒன்று உயர்வானது!அதுநல் நண்பரமைவதாகும்..!
குழலூதி மாயம்செய்வித்த மாமணி வண்ணனே
……….குசேலனனெனும் ஏழைக்கு உற்ற நண்பனானான்..!
நிழலில்தேடிய நிஜமானது நேரில் வந்ததுபோல்
……….நிகரிலாக் கர்ணனைப் பெற்றான் துரியோதனன்..!



குழவிக் கல்லிருந்தால் கூடவே அம்மியிருக்கும்
……….வாழ்விலதுபோல வகையான நண்பர் வேண்டும்..!
உழப்பம் விளைவித்து உபத்திரவம் உண்டுசெயும்
……….உதவாத நண்பர்கள் ஒருசமயம் அமைவதுண்டு..!
அழகாரத்தினால் நம்மகத்தைக் கவர்ந் தோர்கள்
……….அதில் இடம்பெறுதலைத் தவிர்த்தல் வேண்டும்..!
உழவுத்தொழில் செய்பவன் ஒருவனே நம்மில்
……….உத்தம நண்பனாவான்!இதுவள்ளுவனின் வாக்கு..!



அத்தகையநல் நண்பனையே நான் தேடுகிறேன்
……….ஆங்கென் அறிவில் வருபவராக எவருமில்லை..!
எத்துணைநபர் வந்தாலும் ஏற்கும் மனமில்லை
……….ஏதேனும் குறைகண்டால் விலகி யோடிடுவார்..!
உத்தம நண்பன் எனவொருவன் அமைவானா.?
……….உள்ளத்துள் உரை பவனாக அவனிருப்பானா?
நித்தமும்.. நிழலில்தேடிய நிஜம்போல நானுமே
……….நீண்ட நாளாய்த் தேடுகிறேன்! கிட்டவில்லை..

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (12-May-18, 6:46 pm)
பார்வை : 162

மேலே