குழந்தை வளர்ப்பில் பேதை அம்மாவின் அறிவுரைகள்

கோந்தையை நக்கல் பண்றா மாதிரி ஒன்றும் சொல்லாதீர்கள்! குழந்தை இறைவன் அளித்த வரப்ரசாதம். துள்ளித் திரியும் வயதில் நீங்கள் படி படி என்பதே தவறு.(மூன்று தாய்மார்களும் கடைபிடிக்க வேண்டியது.) காலத்தின் கோலம்.கல்வி திணிக்கப்படுகிறது. இந்தியாவிற்கு உங்கள் நாடு எவ்வளவோ மேல்.அவர்களுக்கு அங்கு கற்க வாய்ப்புக்கிட்டியுள்ளதை எண்ணி எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். குழந்தைகளை உங்கள் எண்ணப்படிதான் இருக்க வேண்டும் என எண்ணாதீர்கள். இறைவன் ஆட்டுவிக்கின்றான். நாம் ஆடுகின்றோம். அவர்களை அவர்களாகவே வாழவிடுங்கள். அவர்களை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்.யாரிடம் என்ன திறமை ஒளிந்துள்ளது என்பது எவருக்கும் தெரியாது. வருங்காலத்தில் குழந்தைகள் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு மிகப் பெரியதாக சாதிக்கும் பொழுது அசந்து போவீர்கள்.. குழந்தையைப் பற்றிய உங்கள் கணிப்புத் தவறானது என்பதனை உணர்வீர்கள். மிக மிக முக்கியமானது, புத்திமதி சொல்கிறேன் என்ற பெயரில் குழந்தைகளின் மனதில் மன அழுத்தத்தை உருவாக்கி வேதனைப் படுத்தாதீர்கள். நெய்யில் மூழ்கிய அல்வாவை ஊட்டுவது போல் அன்பினால் அணுகுங்கள்.அழ விடாதீர்கள். அழுகை குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும். அதனால் நரம்புகள் தளரும்.மனம் உறுதிபட அவர்களை ஊக்குவியுங்கள்.அப்துல் கலாம் சொல்வது போல் அவர்களை சுதந்திரமாகக் கனா காண (சிந்திக்க) விடுங்கள்.

ஒத்த வயதில் நீங்கள் எங்களை விட அறிவாளிகள். இக்காலக் குழந்தைகள் உங்களை விட பல படி மேல்.அவர்கள் வயதில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என எண்ணிப் பாருங்கள். அவர்களின் சிறு சிறு செயல்பாடுகளைப் (எந்த துறையிலும்) பாராட்டுங்கள்.கண்ணே இதை நீ இப்படிச் செய்தால் இன்னும் அருமையாக இருக்குமே எனப் புன்முறுவலுடன் கூறுங்கள்.எந்த ஜீவ ராசியும் அன்புக்கு சரணாகதி ஆகிவிடும்.அவர்கள் தவறு செய்தால் இதனால் இம்மாதிரியான பின்விளைவுகள் வரும் கண்ணா.அதனால் நாம் (நாம் முக்கியமானது - உங்களையும் அவர்களில் ஒரு அங்கமாக்கிக் கொள்ளுங்கள்.) இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே தங்கம் எனக் கூறுங்கள்.பின்னர் மாற்றத்தைப் பாருங்கள்.நேர்மறைச் சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் கூட தப்பித் தவறி கூட எதிர்மறை சொற்களைப் பயன்படுத்தாதீர்கள்.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
புண்கணீர் பூசல் தரும்" "

எனும் வள்ளுவரின் வேத வாக்கை மறவாதீர்கள்.இது குழந்தைகளை அணுகும் முறை மட்டுமல்ல; உறவுகளிடையிலும் அன்பும் இனிமையான சொற்களுமே பாலமாக அமையட்டும்.அடுத்த நொடி நடக்கப் போவது யாருக்கும் தெரியாது என்பதனை நினைவில் கொண்டு உறவினர்களையும் உங்கள் ஆத்மார்த்த நண்பர்களாக கூடப் பிறந்தவர்களாக எண்ணி அன்பைப் பொழியுங்கள்.அதனால் இம்மி அளவும் நமக்கு நஷ்டமில்லை.இது நம்மைப் பேணிக் காக்கும் மூவா மருந்து.மழலைகளுக்கும் மதிப்பு கொடுங்கள்.சின்னஞ்சிறார்கள் வருங்கால சாதனையாளர்கள்.அவர்களை சாதனையாளர்கள் ஆக்குவது உங்கள் அணுகுமுறையும் உறவினரிடையே காட்டும் அன்பான இணக்கமும்தான் என்பதனை மறவாதீர்கள்.தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை.

உங்கள் வளர்ப்பு முறை சரியாகத்தான் இருக்கும்.எங்காவது ஒரு சில தவறுகள் நேர வாய்ப்புள்ளது.உங்களையும் நீங்கள் நடந்து கொண்ட முறைகளையும் அசை போட்டு ஆராய்ந்து பாருங்கள்.பிஞ்சு மொட்டுகளுக்கு முன் உதாரணமாய் வாழுங்கள்!

முழுமையும் படித்தமைக்கு மிக்க நன்றி.

பின் குறிப்பு:என் கண்மணிகள் மூவரையும் அன்பு எனும் நீரூற்றி நேர்மறைச் சொற்கள் எனும் விதை போட்டு வளர்த்தேன்.இன்று பட்டைத் தீட்டிய வைரங்களாகப் பட்டொளி வீசித் திகழ்வது கண்டு பேருவகையும் பெருமிதமும் அடைகிறேன்.நீங்கள் உங்கள் செல்வச் சிறார்களை விலை மதிப்பற்ற பிளாட்டினங்களாகத் திகழச் செய்ய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன் !!

எழுதியவர் : முனைவர்.வெ.வசந்தா. (14-May-18, 5:08 pm)
சேர்த்தது : vasantham52
பார்வை : 186

மேலே