ஜெமோ எனும் இலக்கிய அதிகார மையம்-------இலக்கிய விவாதம் ---படித்தது ---நம் பார்வைக்கு

2017/05/03ம் திகதியில் முகநூலில் எழுதிய பதிவு இங்கே மீள்பதியப்படுகிறது.

#ஜெமோவும்_இன்ன_பிற_விடயங்களும்

ஜெமோ, இன்று தனது பக்கத்தில் சுஜாதா விருது பற்றி எழுதி இருக்கிறார். விருதுக்குத் தெரிவான பல புத்தகங்களையும், விருது அறிவிக்கப்பட்ட பின்னர் தான் வாசித்ததாகச் சொல்லி இருக்கிறார். வாசிப்பென்பது பெரும் பணி. அதைத் திறம்படச் செய்ய நேரமும், சூழ்நிலைகளும் ஒத்துழைக்க வேண்டும். வெண்முரசுக்காக எழுதிக் குமித்துக்கொண்டிருக்கிற ஜெமோவால் அதில் இருந்து விடுபட்டு, நேரம் ஒதுக்கி எப்படி இப்படி வாசிக்க முடியும் என யோசித்துக் கொண்டிருந்த போதே கடங்கநேரியான் Kadanganeriyaan Perumal முகநூல்ப் பக்கத்தில் பகிர்ந்திருந்த, யாவரும் என்கிற இணையப்பக்கத்தில் வெளியான அவரது பேட்டி ஒன்று கண்ணில் பட்டது. அதில் இப்படி ஒரு கேள்வியும் பதிலும் இருக்கும்…

ஜெயமோகன் தன்னுடைய பதிவில் கடங்கநேரியான் என்பவர் ஆணா? பெண்ணா ? என்று எழுதியிருந்தார். உங்கள் மீது ஏன் இவ்வளவு பெரிய ஒவ்வாமை ?

முந்தைய கேள்விக்கான பதிலில் இதற்கான பதிலும் இருக்கிறது . ஜெயமோகன் தன்னை தமிழ் இலக்கிய உலகின் அதிகார மையமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நினைப்பில் அவர் நிகழ்த்துவது அனைத்தும் ஆகப்பெரிய நகைச்சுவைகள்.எதனையும் வாசிக்காமலேயே அதெல்லாம் ஒரு படைப்பா என்ற அளவிற்கு கீழிறங்கி அடித்தாடுவார்.வாருங்கள் விவாதிக்கலாம் என்றால் வரமாட்டார். சமூகப் பொறுப்பற்ற அவருடைய எழுத்துக்களை யமுனா ராஜேந்திரனோடு சேர்ந்து தீவிரமாக விமர்சித்திருக்கிறேன் . அதுதான் இப்படி எழுதத் தூண்டுகிறது.கடைசியில் மூக்கறுபடுவது அவர் தான் .

அந்திமழை என்னை சமூக ஊடகங்களில் இயங்குபவர்களில் நம்பிக்கை நட்சத்திரம் என்றெழுதியது. அதனைப் பொறுக்காமல் என்னுடைய கவிதைகளையும் வாசிக்காமல் “கடங்கநேரியானுடைய கவிதைகள் அறிவுமதியின் கவிதைகளை போலானவை என்றார். அறிவுமதியின் கவிதைகளுக்கும் எனது கவிதைகளுக்கும் வடிவ ரீதியாகவும் சொல்லும் முறை ரீதியாகவும் யாதொரு சம்மந்தமுமில்லை என்பதனை வாசித்தவர்கள் அறிவர்.

நானும் ஜெயமோகனை வாருங்கள் பொது மேடையில் என்னுடைய கவிதைகள் குறித்து விவாதிக்கலாம் என அழைத்தேன், அதற்கு பதிலாக அவர் எழுதியது தான் நீங்கள் கேட்ட கேள்வி.

வாருங்கள் ஜெமோ ! நாம் ஒரு டேட்டிங் போகலாம் , நீங்கள் வாயாடி நான் ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள் என்றழைத்தேன்.இதுவரை பதில் இல்லை. நீங்களாவது கேட்டுச் சொல்லுங்கள் .

யாரு இந்தப் பேட்டியைச் செய்தவர் என்கிற தகவல் இன்னும் சுவாரஷ்யமானது.

ஈழத்தையும், அங்கு நடந்த யுத்தத்தையும் வைத்து பிழைப்பு நடத்துவோர் பலர். அதில் அந்தத் தம்பியும் ஒன்று. எப்போதாவது அந்த விடலைப் பையனைப் பற்றி முகநூலில் வாசிக்கிற போது, ” இன, மான உணர்வு மிக்க தமிழ்நாட்டு மக்களே! இன்னுமாடா இவனுகளை எல்லாம் நம்புறீக?” என்று கேட்கத் தோன்றும்.

ஈழ மக்களுக்கு இப்போதும் பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் யுத்தகாலத்தை விட இப்போது அந்த மக்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். அந்தத் தம்பி போன்ற சில இலக்கிய விபச்சாரர்கள்தான் இன்னமும் இலங்கையை ஏதோ சவக்குழி போல காண்பித்து, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு எழுதிப் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். சரியான ஈழத்து இலக்கியத்தை தமிழ்நாட்டுக்காரர்கள் எப்போதுதான் தேடி வாசிக்கப் போகிறார்களோ!!

நேற்று, ஈழத்தில் இருந்து வெளிவருகிற ‘புதிய சொல் இதழின் எடிட்டர் யதார்த்தனன் Yatharthan எழுதிய ஒரு முகநூல் பதிவை வாசித்து சிரிப்புத் தாங்கல..

ஆண்டவரே ஈழத்து இலக்கியத்தை முத்துலிங்கத்திடம் இருந்து எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் .அகரமுதல்வனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

மெய்யான ஈழத்து இலக்கியம் எந்தளவில் தமிழ்நாட்டு வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறது?

நான் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களுடைய படைப்புகளைப் பற்றி இங்கே கேட்கவில்லை.

ஜெய மோகனுடைய சுஜாதா விருது பற்றிய பதிவை நண்பர் பிரபு காளிதாஸ் அவருடைய பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு நான் இப்படிக் கமென்ட் இட்டிருந்தேன்..

“இவர்கள் மொழிநடையை எளிதாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சரளமான வாசிப்பு என்பதற்கு இலக்கியத்தில் தனிமதிப்பு ஏதுமில்லை. உள்ளத்தையும், பண்பாட்டையும் மொழி சென்று சந்திக்கும் தருணங்களை கொண்டு மட்டுமே நடை மதிப்பிடப்படுகிறது. இக்கதைகளில் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து எழுதுவதன் வழியாக உருவாகும் பயிற்சி மட்டுமே தெரிகிறது.”

இதுதான் முக்கியமானதாக இருக்கும். ஆசான் என்று இதற்குத்தான் அழைக்கப்படுகிறார் போலும்…..

ஜெமோவை அவரது வாசகர்கள் ஆசான் என்றுதானே அழைக்கிறார்கள். அவர் நிச்சயமாக அதற்குத் தகுதியானவர்தான். ஜெமோவின் வாசகர்கள் ஜெமோவின் புனைவுகளை வாசித்து, அதன்பால் ஈர்க்கப்பட்டு, பின்னர் வாசகரானவர்கள். அப்படி இல்லாது அறம் சார்ந்த விடயங்களில் எப்போதும் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஜெமோவை ஒருவருக்குப் பிடிக்க வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

ஆனால் சாருவின் வாசகர்களில் எத்தனை பேர், சாரு எழுதி, அவரே ‘இது ஒரு நாவல்’ எனப் பிரகடனப்படுத்துகிற அந்தப் புத்தகங்களை வாசித்திருப்பார்கள்!

ஜெமோ எப்போதும் சொல்வதைப் போல, சாரு நிச்சயமாக ஒரு நல்ல தரமான பத்தி எழுத்தாளர்தான . அவருடைய எல்லாப் பத்திகளும் மிகச் சுவாரஸ்யமானவைதாம். அதை வாசித்து அவருக்கு வாசகரானவர்கள்தான் அதிகம். என்னுடைய ஆரம்பமும் அப்படித்தான்..

பிரபு எனது அந்தக் கமென்டுக்கு பதில் எழுதி இருந்தார்…

ஆசான் தவிர இங்கு யாருக்கும் ஒழுங்காகவே எழுதத் தெரியாது.

ஜெமோவின் எழுத்தும் பேச்சும் அதிகாரத் தொணி மிகுந்தவை. சமரசங்களே இல்லாத அவரது விமர்சனங்களை பலராலும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. தான் நினைப்பதைப் பயமில்லாமல் ஜெமோவால் சொல்ல, எழுத முடிகிறது. அது அவரது இலக்கியம் தந்த தைரியம். சில நேரங்களில் நாம் அதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறோம். நாம் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர் அப்படி எழுதுகிறாரோ என்னவோ! ஜெமோ இப்படித்தான் பலருக்கு ஜென்மவிரோதி ஆகிவிடுகிறார்.

பிரபுக்கு நான் இப்படிப் பதில் எழுதினேன்..

இப்போது நான் இதை வேறு மாதிரிப் பார்க்கக் கற்றுக் கொண்டேன் பிரபு.

எமக்குப் பிடித்த மற்றைய எழுத்தாளர்கள் இப்படியாக நடந்து கொள்கிற போது ‘ஞானச் சிறுக்கு’ என ஏற்றுக்கொள்கிற மனது, ஜெமோ செய்கிற போது மட்டும் ஏற்றுக்கொள்ளுதில்லை. விமர்சிக்கத் தலைப்படுகிறோம்.

தமிழில் ஜெமோ ஒரு அதிகார மையம் போல செயற்படுவதாக விமர்சிக்கிறோம். அது மெய்யாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர் அளவுக்கு தமிழில் நல்இலக்கியத்தில் இயங்கியவர்கள் வேறு யாருமில்லை. ஏன், உலகளவிலே யாருமில்லை. அவர் அந்த அதிகாரமையமாக இருந்துவிட்டுப் போகட்டுமே. அவருக்கு அதற்கான முழுத் தகுதியும் இருப்பதாக நம்புவோமே.

அவருடைய எழுத்தின் வீச்சமும், பரப்பும் அவருக்குப் பின்னரும் தமிழில் யாராலும் தொட்டு விடக்கூடியவை அல்ல. தமிழ் உலகம் இன்னுமொரு நூறாண்டில் இன்றைய எழுத்தாளர்கள் பலரையும் மறந்துவிடும். அப்போதும் ஜெமோ வாழ்வார்.

வெண்முரசு வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு மனிதனுக்கு பேய் பிடித்தால்தான் அப்படி எல்லாம் எழுத முடியும். ஜெமோக்கு பேய் பிடித்திருக்கிறது. எழுதுகிற பேய்..

கலையும் இலக்கியமும் மனிதனை நல்வழிப்படுத்தும் என்பதில் எனக்கு இப்போது நம்பிக்கை குறைந்துகொண்டு போகிறது. உலகளவில் நல்லிலக்கியம் படைத்த பலரும் மிக கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியானவர்களிடம் இருந்து வாசகர்களாகிய நாம் எந்த மாதிரியான நல்வழிப்படுத்துதல்களை எதிர்பார்க்கிறோம்? வம்புக்கு வேண்டுமானால் ‘அது இது’ என இதற்கு பதில் சொல்லலாம். அவ்வளவுதான்.

கலையும் இலக்கியமும் மனிதனை நல்வழிப்படுத்தும் என்பதில் எனக்கு இப்போது நம்பிக்கை குறைந்துகொண்டு போகிறது. உலகளவில் நல்லிலக்கியம் படைத்த பலரும் மிக கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அப்படியானவர்களிடம் இருந்து வாசகர்களாகிய நாம் எந்த மாதிரியான நல்வழிப்படுத்துதல்களை எதிர்பார்க்கிறோம்? வம்புக்கு வேண்டுமானால் ‘அது இது’ என இதற்கு பதில் சொல்லலாம். அவ்வளவுதான்.

அப்படி என்றால் கலையும் இலக்கியமும் எதற்காக?

நிச்சயமாக எழுதுவதைப் பற்றி ஜெமோவிடம் இருந்தது கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. யார் அவரை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவர்தான் தமிழின் முதன்மையான எழுத்தாளர்!

“ஜெமோவை அதிகமாக விமர்சித்த நீங்கள், இப்போது ஏன் அவர் புகழ் பாடுகிறீர்கள்? சாரு உங்களை திட்டி எழுதியதாலா?”என்று கேட்கிறார்கள்.

ஆமாம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஜெமோவை நான் முழுவதுமாய் வாசிக்காமல் போனதற்கு சாருதான் காரணம். ‘உத்தம தமிழ் எழுத்தாளர்’ அது இது என ஆயிரஞ் சொல்லி எங்களில் ஜெமோவை அண்ட விடாதிருக்க சாரு நிறைய பிரயத்தனங்கள் செய்கிறார் என்று நினைக்கிறேன். தீக் குச்சி என்றால் கையை வைத்து மறைத்து, வாயால் ஊதி அணைத்துவிடலாம். பெருங் காட்டுத் தீ போல சுடர் விட்டெரிகிற நெருப்பை எதைக் கொண்டு மறைப்பதாம், எந்த வாயால் ஊதி அணைப்பதாம்!

அவசர அவசரமாக இதை எழுதுகிறேன். சற்றே நேரமெடுத்து இதைச் சிறப்பாக எழுதி இருக்க வேண்டும். வாசித்துவிடுங்கள். நேரம் இருந்தால் பின்னர் ஒருநாளில் இன்னும் ஆளமாகப் பேசுவோம்.

எது எப்படியோ, காட்டாற்று வெள்ளம் போல ஓடிக்கொண்டே இருக்கிற ஜெமோ தான் எழுதிக்கொண்டிருக்கிற வெண்முரசை எழுதி முடித்துவிட்டால், இந்த உலகில் தமிழ் இருக்கும் வரையும் ஜெமோவின் பெயர் நிலைக்கும்.


This entry was posted in பொது by உமையாழ். Bookmark the permalink.

எழுதியவர் : (14-May-18, 6:59 pm)
பார்வை : 33

மேலே