காதல் தோழி, தலைவியை காதலனைக் காண அனுப்புதல்
நானும் நீயும் தோழியரே
இல்லையென்று சொல்லவில்லை நான்
இருந்தும்,உன்னழகில் ,உன்
பேரழகில் நான் உன்னைக்
காண்பதோ ஓர் அழகு ராணியை
அப்படித்தான் நீ ராணி
நான் உந்தன் தோழியடி.
உன்னழகை எப்படிசொல்வேனடி
நான், சொல்லுக்கும் உவமைக்கும்
தேடி அலைகின்றேனடி நான்
உந்தன் எழில்பொங்கும்
கனக வட்டமுகம் அதில்
பதிந்த பூசிய மஞ்சள் பகலவன்
ஒளியில் தங்கமாய் ஜொலிக்குதடி,
தங்கமே, தங்கம்
உந்தன் விழிகளிரண்டும்
கயலா, இல்லை அதில்
காணும் மருட்சி மான் விழியா
சொல்லத்தெரியவில்லையடி
திகைக்கின்றேன் நான்
வளைந்து நீண்ட உந்தன்
புருவங்கள் வானவில்லா
செம்பவளம் தந்ததோ உந்தன்
தேன்சிந்தும் அதரங்கள் அது
திறக்க நான் காண்பதென்ன
மயக்கிடும் உந்தன் சிரிப்பு
முல்லைச்சர சிரிப்பு
குறுகிய உந்தன் பிறை நுதல்
அதில் வட்ட வட்ட கும்குமப்
பொட்டு அதன் ஒளியில்
நாசியில் நீ அணிந்த தங்க
மூக்குத்தி சிவப்பு ரத்தினமாய்
மாறியதே நீ அறியாயோ
கார்முகில்தான் உந்தன்
கார்குழல் ஆனதோ
இல்லாததுபோல் இருந்த
உந்தன் இடைத்தேட
அதில் சீந்தில் கொடியல்லவோ
நான் கண்டேனடி
விரிந்த கமலம் கண்டேன்
உந்தன் பாதங்களாய் அதை
நான் கண்டேனடி
நீ என்னோடு துள்ளி துள்ளி
நடந்து வருகையில் அடி நான்
ஆடும் மயிலின் அழகல்லவோ
அதில் காண்கின்றேன்
நீ பேசும் மொழியோ
குயிலின் இசையாய் என்
காதில் இசைக்குதடி
இயற்கையின் சாயல்
ஒவ்வொன்றும் உந்தன்
அங்கங்களில் காண்கின்றேன்
இயற்கையே பெண்ணாய்
மாறி என்தலைவி நீ ஆனாய்
என்றுதான் சொல்வேனடி
உந்தன் அழகை-என்றும்
உந்தன் அழகிற்கு
அடிமையாகி நான்.,உந்தன்
அன்புத்தோழி
உனக்காக உனைக்காண
காத்திருக்கிறான் அங்கு
நதிக்கரையில் உந்தன்
காதலன் அர்ஜுனன் போல்
எழிலாக , நானே ,பெண்
நானே உன் எழிலில் இப்படி
மெய்யலுற்றேன் என்றால்
உன்னவன் அவன் உன்
எழிலை என்னென்று கூறி
உன்னை அணைப்பானோ
அப்பப்பா நான் அறியேன்
இன்னும் எதற்கு தயக்கம்
போய்வாடி, என் தோழி,
என் அழகு ராணி ,உன்
காதலனைக் கண்டுவிட்டுவா
வந்து கூறுவாயோ என்னிடம்
உந்தன் எழிலை அவன்
காண்பது எப்படி என்று
சென்று வா, தோழி
சென்று வா எந்தன் தலைவி