அவளைச் சுற்றிய அகழி
விண்ணில் பறந்தாள் அதீதக் கற்பனைகளில்
வாயில் வரையோடு அவள் காற் சதங்கை ஒலிக்க....
இதயச்சிரை தமனிகள் மீட்டின அகச்சுவட்டின் ராகங்கள்....
அஞ்சறைப் பெட்டி அடுக்களை சட்டிகளின் இடுக்குகளில் அதிர்ந்திட...
கதை வசனம் இயக்கம் அவளாகி
கதாபாத்திரமாய் அவளை மாற்றுகிறாள்
விழித்திரைக்குள் முடிவுறாப் படம் வெளியிட்டு
ரசிகையாய் அவள்மட்டுமே கண்டு தேற்றுகிறாள்.....
கற்ற இளங்கலைப் பட்டத்தில்
ஆர்க்கமெட்டீஸ் தத்துவத்தையும்
நியூட்டனின் மூன்றாம் விதியையும்
சுற்றுச் சுவர்களுக்குள் உற்ற உறவுகளிடை மெய்யாவதை காண்கிறாள்...
வறண்ட வெறுமை வனமாய்
வாழ்வின் பக்கங்களை
வெற்றுக் கனவுகளால் நிரப்புகிறாள்....
சொல்லற்ற மௌன வலுவான
வனமொன்று
சுற்றி அகழியாய் உருவாகுகிறது......
கவிதாயினி அமுதா பொற்கொடி