ஆலிலை மேலொரு அழகிய பாலகன்

ஏக்நாத் ஈஸ்வரன் (1910-1999) அண்மையில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த தன்னையுணர்ந்த தத்துவ தரிசி. இந்தியாவில் நாக்பூர் பல்கலை கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக் கழகத்து ‘ஃபுல் ப்ரைட் அறிஞராக”, (Fulbright Scholar) 1960-களில் வந்த அவர், நீலகிரி பிரசுரம் (Nilgiri Press), மற்றும் “நீலமலை தியான வளாகம்” (Blue Mountain Center of Meditation), முதலியவற்றை நிறுவி, ஆன்மிகம், தியானம், பகவத் கீதை, உபநிஷத்துக்கள், தம்மபாதா போன்றவற்றுக்கு விளக்க உரையாக, நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார்.

அவருடைய “தினசரி வாழ்க்கைக்கான பகவத்கீதை” தொடர் புத்தகங்களின் இரண்டாவது தொகுப்பான “ஆயிரம் சூரியர்களைப் போல” என்ற புத்தகத்தின் சில பகுதிகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்க்கண்டேயன் கிருஷ்ணனைப் பார்த்து, ‘மாயைப்” பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்க, நடக்கும் நிகழ்வுகளை, மிகவும் அழகாக, பிரமிப்பாக விளக்கியிருப்பார். அந்த விளக்கங்களை படித்தன் காரணமாக எழுந்த உள்ள எழுச்சியில் பிறந்த பாடல்தான் இதோ…! கவிதைக்கான முதல் காரணமான “உள்ள எழுச்சி” என்பதைத்தவிர மற்று இலக்கண விதிகளுக்கெல்லாம் உட்பட்டுள்ளதா என்று சிந்திக்காமல் எழுதிய வெளிப்பாடு இது…!

ஆலிலை மேலொரு அழகிய பாலகன்
கால்விரல் கனியிதழ் வாயினில் குலவிட
மாயங்கள் செய்கின்றான் – எல்லாமவன்
மாயை என்றே சொல்கின்றான்.

ஆலமுண்ட நீலகண்ட ஆதிசிவ நாதன்
காலனை கடிந்தே கார்த்தமார் கண்டன்
காலமும் ஞாலமும் கடந்த மாயையின்
கருத்துரைக்கக் கேட்டான் – கண்ணனோ
கருத்தையே அழித்தான் – அகமாயக்
கருத்தையே அழித்தான் -

உள்ளிழுக்கும் மூச்சிலே உயிரெலாம் ஒடுங்கும்
உள்ளும் புறமுமென்ற உணர்வுமே அடங்கும்
எல்லாம் ஓய்ந்துவோர் எல்லையிலா மெளனம்
ஏகாந்தமாய் அங்கே நிலைபெறும் மோனம்

ஹூங்கார நிஸ்வாஸம் உண்டாக்கும் ப்ரபஞ்சவெளி
ஆங்கார மாயைதனை அழிக்கின்ற ஞானஒளி
இருவினை இருள்மாயக் களியினிலே களைப்பார்
கருமவினையில் இங்கே பிறந்திறந் திளைப்பார்-பின்
பரமயோக பாதன் பக்தியிலே திளைப்பார்.

எல்லாம் துறந்த துறவியருக்கும் இலக்கியமும், இலக்கணமும் துறக்கமுடியவில்லையே என்று நினைப்பதுண்டு. ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, அக்கூற்றையும் கவியாகச் சொன்னவர்கள் நம் துறவிகளும் ஞானியர்களும். கவிதை ஆசைமட்டும் எவரையும் விட்டதில்லை! இதற்குக் காரணம் எதுவாக இருக்கமுடியும்?
சிந்திப்போம்

எழுதியவர் : (29-May-18, 6:15 am)
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே