சமயபுரம் யானை மிரண்டு பலி வாங்கியது ஏன் பாகன்களுக்கு பயிற்சி அவசியம் என்கிறார் விலங்கு உளவியலாளர்
கோயில் யானைகள் மிரள்வதற்கும், அவற்றுக்கு மதம் பிடிப்பதற்கும் பல்வேறு அகவியல், புறவியல் மற்றும் உளவியல் காரணங்கள் இருப்பதாக, திருநெல்வேலியிலுள்ள விலங்கு உளவியலாளரும், வனத்துறை ஆராய்ச்சியாளருமான எஸ்.சேதுராமலிங்கம் தெரிவித்தார்.
திருச்சி அருகே சமயபுரம் மாரியம்மன் கோயில் பெண் யானை மசினி நேற்று முன்தினம் மிரண்டு, பாகன் கஜேந்திரனை தூக்கி வீசி, மிதித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோயில் யானைகள் அவ்வப்போது மிரள்வதும், மதம் பிடிப்பதும், உயிரிழப்புகள் நிகழ்வதும் தொடர்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து சேதுராமலிங்கத்திடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது:
சமயபுரம் கோயில் யானை `மசினி’ மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கிறது. பாகனை அது நான்கு கால்களாலும் மிதித்ததில் இருந்து, அதனுள் இருக்கும் வன்மத்தை உணரமுடிகிறது. இவ்வாறு கோயில் யானைகள் நடந்துகொள்வதற்கு புறக்காரணங்கள், அகக்காரணங்கள் இருக்கின்றன.
வவ்வால்கள்
ஒலி மாசுபாடு யானைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக பறவைகள் எழுப்பும் தொடர்ச்சியான இரைச்சல் யானைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். பெரும்பாலும் நமது கோயில்களில் அதிகப்படியாக பழந்தின்னி வவ்வால்கள் இருக்கின்றன. இவை, எழுப்பும் அல்ட்ரா சவுண்ட் யானைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். சமயபுரத்தில் வவ்வால்கள் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒலி மாசுபாடும் ஒரு காரணியாக இருக்கலாம். மோட்டார் பம்ப் செட் அதிர்வுகள், சரியாக எரியாத டியூப் லைட் எழுப்பும் ரீங்காரம், ஜெனரேட்டர் ஒலி மற்றும் அதிர்வு போன்றவை யானைகளை மிரள வைக்கும்.
திருச்சியில் தற்போது வெயில் சுட்டெரிக்கும் நிலையில் யானையின் வசிப்பிடத்தை குளுமையாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தெளிப்பான் மூலம் யானைகளை குளிக்க வைக்கலாம்.
யானைகளின் கால்களின் அடிபாகத்தில் பாக்டீரியாக்கள் தொற்றால் osteo meylitis என்ற நோய் பாதிப்பு ஏற்படுகிறது. யானைகளை தார் சாலையில் நடக்க வைப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்நோய் வருகிறது. யானைகளின் எலும்பு மற்றும் நகங்களை இந்த பாக்டீரியா அரித்துவிடும். மாதந்தோறும் யானைகளின் பாதங்களில் உள்ள நகங்களை வெட்டி, சுத்தம் செய்ய வேண்டும்.
யானையின் எச்சத்தை பரிசோதித்தால் அதில் குடல் புழுக்கள், முட்டைகள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரியவந்தால் உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதும், தரமான உணவை அளிப்பதும் அவசியம்.
உளவியல் காரணங்கள்
பொதுவாக யானைக்கு 6 வயதுக்குமேல் பாலுணர்வு நாட்டம் ஏற்படும். இது துணை தேடும் பருவம். 9, 10 வயதுகளில் பாலுணர்வு உச்சகட்டத்தில் இருக்கும். பெண் யானைகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படும். இந்நேரங்களில் பாகன்கள் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பெண் யானையின் சிறுநீரை ஆய்வகத்தில் பரிசோதித்தால் அதிலிருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை கணக்கிடலாம். இந்த ஹார்மோன் அதிகமிருந்தால் யானைக்கு பாலுணர்வு அதிகம் இருக்கிறது என்பது தெரியவரும். அவற்றை துணையுடன் சேர்க்க நடவடிக்கை எடுத்தால் யானைகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க முடியும்.
தாய்விட்டுச் சென்ற அனாதை குட்டியாக இருந்தபோது யானை மசினி பிடித்து வரப்பட்டு, 4 ஆண்டுகள் பயிற்சி அளித்து வளர்க்கப்பட்டு, பின்னர் சமயபுரம் கோயிலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. குட்டி யானைகள் பெரும்பாலும் செல்லமாக வளர்க்கப்படும். அவ்வாறு செல்லமாக வளர்ந்த யானையை, கோயிலுக்குள் தங்க வைத்திருக்கிறார்கள். இங்குள்ள கட்டுப்பாடான சூழ்நிலை யானைகளை மிரள வைக்கிறது.
சிவப்பு சட்டை கூடாது
யானைகளுக்கு சிவப்பு நிறம் பிடிக்காது. இதையறியாத பல பாகன்கள் சிவப்பு சட்டை, வேட்டி அணிகிறார்கள். யானைகளுக்கு எது பிடிக்காது, எது பிடிக்கும் என்பது குறித்தும், அவற்றின் உடல் சார்ந்த, உளவியல் சார்ந்த விஷயங்கள் குறித்தும் பாகன்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
கோயில் யானைகள் இருக்கும் பகுதிகளில் கால்நடை மருத்துவர், உளவியலாளர், விஞ்ஞானி, பொதுமக்கள் பிரதிநிதி உள்ளிட்டோரை கொண்ட சிறப்பு குழுவை அமைத்து மாதந்தோறும் யானைகளை பரிசோதித்து, அவற்றுக்கான உடல், உளவியல் பிரச்சினைகளை அறிந்து நிவர்த்தி செய்தால், யானைகள் மிரள்வதும், உயிர்பலிகள் நிகழ்வதும் தடுக்கப்படும் என்றார் அவர்.
தி ஹிந்து தமிழ்