முதுமொழிக் காஞ்சி 67

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
சிறுமைநோ னாதோன் பெருமைவேண்டல் பொய். 7

- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் பிறர்க்குத் தான்செய்யும் பணிவினைப் பொறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய்.

பிறர் தனக்குச் செய்யும் பணிவினைப் பொறாதோன் என்று பாடபேதம் உண்டு.

பதவுரை:

சிறுமை - அடக்கத்தை, நோனாதோன் - அனுசரிக்கப் பொறாதவன், பெருமை - பெருமையை, வேண்டல் - வேண்டுதல், பொய் - பொய்யாம்.

நோன்றல் - பொறுத்தல் (இதற்கு எதிர்மறை நோனாமை): உற்ற நோய் நோன்றல்' (திருக்குறள்) என வருகின்றது.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். 979 - பெருமை

பொருளுரை:

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

பெருமையை விரும்புகின்றவன் பிறரிடம் பணிவாக அடங்கி நடப்பான். 'பெருமை பெருமித மின்மை' என்றது திருக்குறள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-May-18, 8:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

மேலே