பெண்கள் அன்றும் இன்றும்------------படித்ததில் நம் சிந்தனைக்கு

பெண்களின் முடங்கி போய் இருந்த காலம் மாறி பெண்கள் இன்று அனைத்திலும் முன்னுரிமை பெற்று விளங்குகின்றனர். அன்றைய கால கட்டத்தில் இருந்த பெண்களின் நிலைக்கும் தற்போதைய பெண்களின் இமாலய மாற்றங்கள் வந்துவிட்டன. பெண்களின் சாதனைப் பயணமும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

கண்டிப்பாக பெண்கள் அன்று இருந்த நிலைக்கும், தற்போது உள்ள நிலைக்கும் பல ஆரோக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.

கல்வியில் கண்ட மாற்றம்:

அன்று - பெண்கள் ஓரளவுக்கு கல்வி கற்றால் போதும், அல்லது கல்வியே வேண்டாம் வீடு வேலை செய்யத் தெரிந்தால் போதும் என்ற நிலை இருந்தது.

இன்று - தற்போது பெண்களைப் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார்கள். தந்தை பெரியார் அறிவுரைக்கேற்ப ஒரு ஆணைப் படிக்க வைத்தால் அவன் மட்டும் முன்னேறுவான். ஒரு பெண்ணைப் படிக்கவைத்தால் அந்தக் குடும்பமே முன்னேறும் என்பதற்கேற்ப, தற்போது பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். இதனால் பெண்கள் பொருளா-தாரத்தில் முன்னேறியிருக்கிறார்கள். உலக அளவில் சிறந்தவர்களாகிக் கொண்டிருக்-கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. இவர்களில் பெரும்பான்மையான குடும்பங்களின் பொருளா-தார வளம் பெருகியுள்ளது. இப் பெண்களின் குழந்தைகள் கல்வி வளத்திலும், பொருளாதாரத்திலும் நல்ல நிலைமை அடைந்து வருகிறார்கள்.

வேலைவாய்ப்பு:

அன்று - ஓரளவு கல்வி கற்றிருந்தாலும், வேலைக்குச் சென்று பணம் ஈட்டக் கூடிய ஆர்வமும், திறமையும் இருந்தாலும் பெரும்பாலும் அனுமதி மறுக்கப் பட்டது. 'அடுப்படியே திருப்பதி, ஆம்படையானே குல தெய்வம்' என்று கட்டுப் பெட்டியாக பெண்களை அடக்கி வைத்திருந்தனர்

இன்று - கற்ற கல்வியை வீணாகாமல், குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் பொருட்டு பெண்கள் வேலைக்குச் செல்வதை எல்லோருமே விரும்பி வரவேற்பதுடன், வீட்டு வேலைகளிலும், ஆண்கள் பெண்களுக்கு உதவும் வகையில் நடந்து கொள்கின்றனர். முன்பு பெண்களுக்கு வேலை வாய்ப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட பல துறைகளில் (காவல் துறை, ராணுவத் துறை, போக்குவரத்துக் கழகம், இது போன்ற மேலும் பல துறைகள்) இன்று பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் நிலை நிலவுகிறது.

குடும்பத்தில் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலை:

அன்று - பெண்கள் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு இயந்திரமாகவே பார்க்கப்பட்டார்கள். குடும்பத்தில் உள்ள எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவளின் உணர்வுகளை (கோபம், தாபம், மகிழ்ச்சி) வெளிப்படுத்தத் தக்க சந்தர்ப்பங்கள் அவளுக்கு மறுக்கப்பட்டது. விருப்பு, வெறுப்புகளை சொல்லும் அடிப்படை சுதந்திரம் கூட மறுக்கப் பட்டது.

இன்று - நிலைமை ரொம்பவே மாறிவிட்டது. பெண்களின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுத்து, குடும்ப நிர்வாகத்தில் அவளுடைய ஆலோசனைகளையும் கேட்டு செயல் படும் சுதந்திரம் கிடைத்துள்ளது. சில குடும்பங்களில் ஆண்களின் தலையீடு இல்லாமல் பெண்களே குடும்ப நிர்வாகத்தை திறம்பட செய்யும் நிலை உருவாகி விட்டது.

கண்டிப்பாக பெண்கள் அன்று இருந்த நிலைக்கும், தற்போது உள்ள நிலைக்கும் பல ஆரோக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.
-------------------------------------
பெண்கள் அன்று இன்று...

அன்று:

பெண்கள் பேசவே மாட்டாங்க, பேச விட்டதில்லை...

யோசிப்பாங்க ஆனா அதை சொல்ல முற்பட்டதில்லை, சொன்னாலும் எடுபட்டதில்லை.

கூட்டு குடும்பம்... பல பெண்கள் சேந்து குடும்பத்துக்கு குடும்பத்து மனிதர்களுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்தாங்க.... வேலையை பங்கு போட்டு கொள்வது என்பது இன்றியமையாததாக இருந்தது.

குடும்பத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் அதை ஆராய்ந்து பார்த்து தோள் கொடுத்து தாங்க வயோதிகர் இருந்தனர், பிள்ளைகள் கலந்தாலோசித்தனர். பெண்களால் ஆனது அவர்தம் கணவன்மாரிடம் சொல்லினர்.

குடும்ப பாரம்னு சுமந்தாலும் தனியாக இல்லை என்ற உணர்வு இருந்தது.

பெண்கள் இன்று

இன்றைய பெண்கள் நிலை கொஞ்சம் மாறுபட்டது... நன்றாக படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள், முன்னேற்றப் பாதையில் செல்கிறார்கள், சாதிக்கிறார்கள் .....ஆனால் அடிமட்டத்தில் பார்க்க போனால் இன்னமும் அவள் பாடு திண்டாட்டம்தான்.

பெண் எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறாளோ, எத்தனை அதிகமாக சம்பாதிக்கிறாளோ அத்தனைகத்தனை பொறுப்புகள் சுமையாக ஏறுது.

அதற்காகவென பெண்களின் கடமைகள், நான் சொல்வது வீட்டிற்குண்டான கடமைகளில், இருந்து அவளுக்கு விடுதலை இல்லை.

அந்த காலத்து பெண்கள் வீட்டிலே மட்டுமே வேலை செய்தார்கள்..... ஆனால் இன்றோ, படித்த படிப்பு, கிடைத்த உத்யோகம் என திறமையை, படிப்பை வீணடிக்கக் கூடாது என அவள் வேலைக்குச் செல்ல ஆசைப்படுகிறாள்..... ஆணும் அவள் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வசதியாக வாழ உதவியாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறான்.

ஆனால் இங்கே மறந்து போய்விடுவது எதை என்றால், அவள் வீட்டிலேயும் வந்து உழைக்க வேண்டும்.....

மனைவி வேலைக்கு போகிறாள், சில சமயம் அவனை விடவும் அதிகம் சம்பதிக்கிறாள் என்பதை அறிந்த ஆண் உள்ளம், அவளுக்கு வீட்டில் உதவியாக இருக்க நான்கு முறை யோசிக்கிறது.

அதனால் அவள் வீட்டிலேயும் உழைக்க வேண்டும், கடமைகளை ஆற்ற வேண்டும்..... முக்கியமாக பிள்ளையையும் பெற்று பேணி வளர்த்து நல்ல குடிமகனாக குடிமகளாக வளர்க்க வேண்டும்.....

நாளை அந்தப் பிள்ளை மோசமான பழக்கங்களுக்கு அடிமை ஆனால் தாயின் வளர்ப்பைதான் குற்றம் சொல்லுவார்கள்.... ஏதோ அவள் தனியாக போய் பெற்று தனியாக வளர்த்தது போல.... தந்தைக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை.

அதனால் பெண்களின் நிலை மேன்மை அடைந்திருக்கிறது சொசைட்டியில்.... ஆனால் அவள் அளவில் அவள் இன்னமும் மோசமாகத்தான் அவதி பட்டுக்கொண்டு இருக்கிறாள் என்பது என் கருத்து.


Penmai Community Forum

எழுதியவர் : (30-May-18, 7:11 pm)
பார்வை : 102

சிறந்த கட்டுரைகள்

மேலே