கண் திறக்க வேண்டும்

கணபதிக்கு இரண்டு பெண்களும் ஒரு பையனும்.பெண்கள் இருவரையும் நல்ல இடத்தில் திருமணம் செய்த பின், வாழ்க்கையை முழுமையாக தன் பிள்ளைக்காகவே வாழ்ந்து வந்தார் எனக் கூறலாம். எங்கு சென்றாலும் ரகுவின் துணையுடன் தான் செல்வார். வருமானத் துறை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல ரகுவுடன் தான் பயணம். வீட்டில் அவன் சொல்லுவது தான் செல்லும். சிறு வயதில் இருந்தே இந்த செல்லம் தொடர்ந்து இப்பொழுது அவன் வேலை செய்யும் வேளையிலும் தொடர்கிறது.
பொள்ளாச்சிக்கு வந்து அவனை ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைத்தபின், கோவையில் பொறியியல் படிப்பிற்கு அனுப்பிய பின்,கணபதி சிரிப்பது கேட்க வேண்டுமானால் ,ரகு விடுமுறைக்கு வரும் நாட்களில் மட்டும் தான்.மற்ற நாட்களில் அலுவலகமும் தானும் ஒன்றாகிவிடுவார்கள். வீட்டில் வந்து சிறுது நேரம் பொதுவாக பேசிவிட்டு சாப்பிட உட்கார்ந்து விடுவார்.எதிலும் நாட்டமில்லாமல் ஒரு வாழ்க்கை.நண்பர்கள் யாரேனும் வந்து பேசினால் ரகுவைக் குறித்து பேசாத நாட்களே இல்லை.
ரகு படித்து முடியும் தருவாயில் கல்லூரிக்கே வந்த ஒரு பெரிய நிறுவனத்தின் பொறியியல் நிபுணனாக தேர்தெடுக்கப் பட்டான். வேலையில் அவன் சேவை உடனடியாக தேவைப் பட்டதால் ,அவனுக்கு அதில் சேர சில தினங்களே அவகாசம் கொடுத்தனர். அந்த செய்தியை அவன் ஒரு விடுமுறை வந்தபோது தெரிவிக்க, கணேசனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.மகனின் வருகைக்காக காத்திருந்த உள்ளம் அவன் இப்படி ஒரு செய்தி கொண்டு வருவான் என யோசிக்க மறுத்தது. இரண்டு நாட்கள் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.அம்மாவின் முயற்சியில்தான் கிளம்புவதற்கு முன் கை குலுக்கி புன்னகைத்தார் கணபதி.
.
நல்ல வேலையில் இருக்கிறான் என்ற பெருமையுடன் தன் காலிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் வாழும் அவனை பற்றி எல்லாரிடமும் கூறி வந்தவர்,அவன் கல்யாணத்திற்கு நல்ல ஒரு மணமகளை நாம் தான் தேர்தெடுக்க வேண்டும் என அடிக்கடி மனைவியிடம் கூறிவந்தார். ரகுவின் மாமா ஒரு முறை வீட்டிற்கு வந்த பொழுது,கணேசன் ரகுவை பற்றிப் பேச அவர் தன் பெண்ணை பற்றி கூறினார். கோவையில் அவள் படித்து இப்பொழுது தனியார் நிறுவனத்தில் விளம்பர பகுதியில் பணி புரிவதாகவும்,அவளுக்கு திருமணம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுவதாகவும் கூறிட,ரகுவிற்கு அவளை பார்த்தால் என்ன என கேட்க
ரகு தன் பேச்சை மறுக்க மாட்டான் என ஒரு வேகத்தில் அந்த பெற்றோர்களிடம் தங்கள் சம்மதத்தை தெரிவித்து, நம் உறவுக்குள் பெண் எடுத்தால் அவள் நம் கட்டுப்பாட்டில் இருப்பாள் நம்மையும் நன்றாக பராமரிப்பாள். எதிர்த்து பேச மாட்டாள்.குடும்பத்தில் ஒன்றாகி வாழ வழியுண்டு என கனவு கோட்டைகளில் நாட்களை நடத்தி வந்தார். ரகுவிடம் கூற ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருந்தார்.
சில மாதங்களுக்கு பிறகு ரகு திடீர் என வீட்டிற்கு முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் வந்தான்,ஆச்சரியத்துடன் ஆனந்தமும் கலந்திட அவனை உள்ளே அழைத்து சென்றார் கணபதி

அப்பா உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றுதான் இந்த திடீர் வருகை என்பதை தெரிவித்து விட்டு ரகு தொடர்ந்தான்.

“அப்பா உங்க மனசு சங்கடப்படக் கூடாதுன்னுதான்,உங்ககிட்டே என் கல்யாணத்தைப் பத்தி முதல்லேயே சொல்றேன். நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன் ,அவளும் நானும் சில மாதங்களாக தினமும் சந்தித்துப் பேசிப் பழகுகிறோம்.எனக்கு அவளை பிடித்திருக்கிறது. அவர்கள் கோவையில் சாய் பாபா நகரில் வசிக்கின்றனர். அவள் வீட்டார் என்னை ஒரு முறை முருகன் கோவிலில் பார்த்தனர். ஹேமா அவர்களிடம் செய்தியைத் தெரிவிக்க விரைத்துள்ளாள்.நான் இங்கே உங்களிடம் தெரிவிக்க வந்துள்ளேன் என்றான்.
அவனிடம் தாங்கள் அவன் மாமாவிற்கு வாக்கு கொடுத்ததையும் அவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டதையும் கூறி, தெரிந்த பெண் நம் உறவு, குடும்பத்துடன் ஒத்துப் போகும் பண்பு, வீட்டிற்கு அடங்கி போகும் தன்மை என அடுக்கி தங்கள் விருப்பத்தை அவனுக்கு தெரிவிக்க, உடனே அவனிடம் இருந்து அதற்கு மறுப்பும் கூடவே என்னை கேட்காமல் ஏன் நீங்களாக ஒரு முடிவை எடுத்தீர்கள் என அவன் குரல் உயர என் மனைவியிடம் என்ன தேவை என எனக்குத் தான் தெரியும் உங்களுக்கு விருப்பமான பெண்ணை எப்படி நான் விரும்புவேன் என கணக்கு போட்டீர்கள்
ரகு சொல்லிக்கொண்டே போனதைக் கேட்டு,கணபதி உறைந்துபோய் உட்காந்திருந்தார்.
தனக்கு ஒரு வசதியான வாழ்க்கை வந்தவுடன்,தனக்கான பாதையை அவனே தீர்மானித்துக் கொண்டான்.
கணபதி.“சரிப்பா.உன்னோட இஷ்டம் போல செய்துக்கோ..”, என கூறிவிட்டு மெல்ல உள்ளே சென்றுவிட்டார்.அவர் பேச்சிலிருந்த வருத்தமும்.தன்னைப் பற்றிய கனவுகளை,தானே சிதைத்து விட்டதையும் எண்ணியபோது,ரகுவிற்கு உள்ளமெல்லாம் முள்ளாய் உறுத்தியது.
ஆனாலும் என்ன செய்யமுடியும். ஒரு பூவின்மணம் போல உள்ளமெங்கும் நிறைந்திருக்கும் காதல், திருமணத்தில் முடியவில்லை என்றால்,அது மிகப்பெறும் தோல்வி,
தோல்வி என்பது எவ்வளவு பெரிய அவமானம்..!.
அப்பாவும் அம்மாவும் கூடிய விரைவில் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில்,ரிஜிஸ்டர் ஆபிசில் நண்பர்களின் உதவியுடன் திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்வதில் தீவிரமானான் ரகு.

ஹேமா தனது அப்பா,சாப்பிட்டு முடிக்கட்டும் என்று காத்திருந்தாள்.அவர் கைகழுவி முடித்து,டி.வியின் முன்பு அமர்ந்தபோது, அப்பா உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும்.என்று பீடிகை போட்டவுடன்,அவர் ஆச்சரியமாகப் பார்த்தார். “என்னடா செல்லம்..சொல்லும்மா..” ஹேமாவிற்கு இருபது வயது ஆனால்தான் என்ன.?அவள் எப்போதுமே அப்பாவின் செல்லம்தான்.கல்லூரியில் படித்துமுடித்து,இப்போதுதான் ஒரு தனியார் நிறுவனத்தில்,ஐந்து இலக்க சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள்.
அப்பா..நீங்க எவ்வளவோ செல்லமா என்னை வளர்த்தீங்க.கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்தீங்க..என்று நிறுத்திய ஹேமா,தனது அப்பாவின் முகத்தில் என்ன மாதிரியான உணர்ச்சிகள் இருக்கிறது என்று அனுமானிப்பவளாக,சற்று நிறுத்தினாள்.
அப்பாவின் முகத்தில் வேறு ஏதோ எதிர்பார்ப்பு.அம்மாவும் கைவேலையெல்லாம் முடித்து வந்து அப்பாவின் அருகில் அமர்ந்தாள்.
இருவருக்கும் சேர்த்தே தனது காதல் விவகாரத்தை சொல்லி முடித்துவிடுவது நல்லதுதான் என்று முடிவு செய்து கொண்ட ஹேமா. “அப்பா,நான் ஒருத்தரை மனசாரக் காதலிக்கிறேன்ப்பா.அவரைத்தான் கல்யாணம் செய்துக்கிறதுன்னு முடிவு செஞ்சிருக்கேன்.இத்தனை நாளா சொல்லவேண்டாம்னுதான் இருந்தேன்.ஆனா,இப்ப கொஞ்சநாளா,நீங்க எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க..அதனாலத்தான் இப்ப சொல்லவேண்டிய நெருக்கடி.” ஒரே மூச்சில்,ஹேமா சொல்லி முடிக்கவும்,இதை சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி,அப்பா,அம்மா இருவர் முகத்திலும் துல்லியமாகத் தெரிந்தது.
“நீ..நீ..என்னம்மா சொல்றே..? இப்படி திடீர்னு..”அப்பாவிற்கு வாய் குழறியது.
“ஆமாம்ப்பா,உண்மையைத்தான் சொல்றேன்.”
“இதுக்கு நாங்க சம்மதிக்கலேன்னா..?”
“சம்மதிச்சுட்டா,எல்லாருக்கும் நல்லது.”
“ஓ..அடியேய்,நம்ம பொண்ணு,அவளோட கல்யாணத்தைப் பத்தி நம்மகிட்டே, தகவல்தாண்டி சொல்றா..?.சம்மதம்கூட கேட்கலேன்னு உனக்குப் புரியுதா..? என்று,அம்மாவைப் பார்த்துச் சொன்னார்.
அப்படியெல்லாம் இல்லைப்பா.. நீங்களும் ஒரு காலத்திலே,காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கதானே.அதனாலே எதிர்ப்பு தெரிவிக்கமாட்டீங்க, எப்படியும் நீங்க சம்மதிச்சுடுவீங்கன்னுதான்,நான் நம்பினேன்.அதனாலேத்தான் கல்யாண ஏற்பாட்டையும் செய்யச் சொல்லிட்டேன்.
இப்போது அப்பாவிற்கும்,அம்மாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.அப்பா சற்றே தன்னை நிதானப்படுத்திக் கொள்வது தெரிந்தது. “ஏம்மா,நானும் உங்க அம்மாவும் ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுட்டு, அப்புறமாத்தான் காதல்,கல்யாணம் முடிச்சோம்.
ஆனா,நீ காதலிக்கிற அந்தப் பையன் எப்படிப்பட்டவன்.அவங்க குடும்பம் எல்லாம் எப்படின்னு எங்களுக்கு ஒண்ணுமே தெரியாதே.நம்ம பழக்கவழக்கத்துக்கு சரியா வரமாதிரியிருந்தா..நாங்களே போய்,அவங்ககிட்டே சம்பந்தம் பேசுறோம். அதுக்குள்ளே நீ எதுக்கும்மா,கல்யாணத்துக்கு அவசரப்படணும்.?”
“அப்பா,அவரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையிலே இருக்கார்.அவங்க அப்பா,அம்மாகிட்டே நம்ம குடும்பத்தை பத்தி சொல்லியிருக்கிறார்.ஆனா அவங்க,சொந்தத்துலே நிச்சயம் பண்ணவும் அவசரப்பட்டாங்க.அதான்..”
“அப்ப எல்லாமே,நீங்களே செஞ்சுட்டீங்க..இனி எங்களாலே உனக்கு எதுவும் ஆகவேண்டியது இல்லே.அப்படித்தானே..?.”

ஹேமா மௌனமானாள். அப்பாவே தொடர்ந்தார். “என் மகளோட தேர்வு நிச்சயமா நல்லாருக்கும்னு எனக்குத் தெரியும்.ஆனா எங்களை அந்நியமா நெனச்சு,நீயே எல்லா ஏற்பாடும் பண்ணிக்கிட்டே.ஓ.கே. நீங்க உங்க கல்யாணத்தை முடிச்சுட்டு,எப்பவேணும்னாலும் இங்க வரலாம்.ஆனா கல்யாணத்துக்கு நாங்க வரமாட்டோம்.அதுக்கு சில காரணங்கள் இருக்கு..அதை மெதுவா அப்புறம் பேசிக்கலாம்” என்றதோடு,அந்தப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அப்பா.
ஹேமாவிற்கு மனசு லேசாயிற்று.முதலில் இதை அவரிடத்தில சொல்லவேண்டும் என்று தனது செல்லை எடுத்துக்கொண்டு, மொட்டைமாடிக்கு ஓடினாள்.
இரண்டு குடும்பங்களும் தங்கள் குழந்தைகள் பெயரில் உள்ள நம்பிக்கையுடன்,அவர்கள் எங்களை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற அன்பினால் ஏற்பட்ட ஒரு பிணைப்பை மட்டும் வைத்து முடிவெடுக்க முற்பட்டனர். அதில் முரண்பாடு ஏற்பட்ட பொழுது அதை தாங்கும் நிலையில் அவர்கள் இல்லை. ஒரு ஏமாற்றம் கலந்த கோபம் சந்தோஷமான இந்த முடிவை ஏற்க மறுத்தது.
எல்லோரும் தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் நல்ல வேலையில் அமர்ந்து நல்ல வாழ்வு வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். அவர்கள் அவ்வாறு வளர்ந்தவுடன் நம்மில் எவ்வளவு பேர்கள் அவர்களின் முடிவு செய்யும் திறனை பாராட்டுகிறோம். சில சதவீதமே அவர்களை ஏற்றுக்கொள்கிறோம்.
தொலை காட்சியில் வந்த ஒரு நிகழ்ச்சியில் சமூக மாற்றங்கள் விவாதிக்க பட்டன. சமூகம் எங்ஙனம் மாறிவருகிறது. கல்லூரிகளும்,மாணவர்களும் எவ்வாறு தங்கள் ஆற்றல்களை வளர்த்து தீர்க்கமாக முடிவுகளை எடுத்து, தங்கள் பாதையை வகுக்கிறார்கள். வயதில் முதிர்த்த ஒரு கல்வி நிறுவன இயக்குனர் பங்கெடுத்து சில கருத்துக்களை கூறினார், அக்கருத்துக்கள் இரு குடும்பத்தையும் மிகவும் சிந்திக்க வைத்தது.
அவர் மிருகங்களை உதாரணமாக வைத்து பேசினார்.பறவை இனத்தையும், கால்நடைகளையும், மிருகங்களையும் பால் கொடுக்கும் இனத்தையும் பற்றி கூற ஆரம்பித்தார். மிருகங்களுக்கு ஆறாம் அறிவு இல்லை ,ஆனாலும் அன்பையும் அரவைணைப்பையும் தெரிவிக்க தவறுவதில்லை.எல்லா இனங்களும் தங்கள் குழந்தைகளை வாஞ்சையுடன் வளர்கின்றன. அவைகளுக்கு உயிர் வாழ வழியை உணர்த்துகின்றன.
பின்னர் அந்த குழந்தைகள் தங்களால் தானே வாழ முடியும் என்ற நிலை வந்தவுடன் அவைகளை தங்கள் பிடியில் இருந்து விடிவிக்கின்றன
எல்லோரிலும் உயர்ந்த மனித இனம் கோபத்தையும் தனக்குள்ள உரிமையும் காட்டி தம் குழந்தைகளின் நல்ல முடிவுகளையும் சில பல காரணங்களை காட்டி அதை தவறான முடிவாக சித்தரித்து தாங்கள் வளர்த்த காரணங்களையும் எவ்வாறு அவர்களை வளர்ப்பதற்கு தங்கள் வாழ்க்கையை அர்பணித்தோம் எனக்கூறி அக்குழந்தைகளை தங்கள் அன்படிமைகளாக்குகிறோம் என்று பேசி,
குழந்தைகள் வளர்த்துவிடுகின்றனர், பெற்றோர்கள் தான் வளர்வதில்லை, எப்பொழுது நாம் வளர்ந்து குழந்தைகளின் முடிவில் உள்ள நியாயத்தை உணர்கிறோமோ அப்பொழுதுதான் நாம் முன்னே செல்ல முடியும் என முடித்தார். இந்த நிகழ்ச்சியைக் கண்ட இரு குடும்பங்களும் தங்கள் குழந்தைகளுடன் உடன் தொடர்பு கொண்டனர்.
ரகுவும், ஹேமாவும் அன்று மாலை விருந்துக்கு தயார் செய்து கொண்டிருந்தனர். விருந்தில் பங்கேற்க அவர்களின் நண்பர்களுடன்சிறப்பு விருந்தினராக வந்தவர் யார் தெரியுமா ?
உங்கள் ஊகம் சரியானதே!!!
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த கல்வி நிறுவன இயக்குனர் தான் !!!!!

எழுதியவர் : கே என் ராம் (31-May-18, 12:02 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : kan thirakka vENtum
பார்வை : 193

மேலே