``ஓகே கூகுள் ஷூட்” - சொன்னதைக் கேட்ட கூகுள் அஸிஸ்டென்ட் நிஜமாகும் டெர்மினேட்டர் படக்கதை--------முராஜேஷ்
டெர்மினேட்டர் படத்துக்கு அறிமுகம் தேவையிருக்காது. அர்னால்டு நடித்து உலகமெங்கும் வசூலில் சக்கைப் போடு போட்ட படம். 1984-ம் ஆண்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தைத் தொடர்ந்து பல பாகங்கள் வெளியாகின. சுயமாகச் சிந்திக்கும் திறன் படைத்த ஒரு ரோபோ மனிதராக அர்னால்டின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். 2029-ம் ஆண்டிலிருந்து காலப் பயணத்தின் மூலமாக 1984-ம் ஆண்டுக்குத் தனக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வேலையை முடிக்க அர்னால்டு வந்திருப்பார்.
ஆனால், அங்குதான் கதையில் ட்விஸ்ட்டே. அவருக்கு உத்தரவிட்டது மனிதர்கள் கிடையாது இயந்திரங்கள்தாம். எதிர்காலத்தில் 2029-ம் ஆண்டில் இயந்திரங்கள் உலகை ஆள்வதாகத்தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். படம் வெளியான போது இந்தக் கதைக்களம் நிச்சயம் மக்களுக்குப் புதிதான ஒன்றாக இருந்தது. இப்படியெல்லாம் நடக்குமா என்ற மக்கள் ஆச்சர்யப்படத்தான் செய்தார்கள்.
டெர்மினேட்டர் படத்தில் வருவதைப் போல நம்மிடம் இப்போது இருக்கும் ஒரு தொழில்நுட்பம் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். சமீப காலமாகவே உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இதில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகின்றன; கூகுள் உட்பட.. நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே வருகிறது இந்தத் தொழில்நுட்பம் அண்மையில் சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்திய கூகுளின் டியூப்லெக்ஸ் இதற்கு நல்ல உதாரணம். அதே கூகுளின் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஸ்பீக்கரைப் பயன்படுத்தி அலெக்சாண்டர் ரெபேன் (Alexander Reben) என்பவர் செய்து காட்டும் ஒரு பரிசோதனை வீடியோ அதிர்ச்சி ரகம். வெறும் 28 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் இருப்பது ஒரு துப்பாக்கி. அதற்கு முன்னால் ஓர் ஆப்பிள் மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஸ்பீக்கர்.
அலெக்சாண்டர் ரெபேன் ``ஓகே கூகுள், துப்பாக்கியைச் செயல்படுத்து" என வாய்ஸ் அசிஸ்டென்ட்டிடம் கட்டளையிடுகிறார். அடுத்த நொடியே சற்றும் தாமதிக்காமல் துப்பாக்கி வெடிக்க ஆப்பிள் சிதறுகிறது. வெறும் 28 நொடிகள்தாம் என்றாலும் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட இது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. விளக்கைக் கன்ட்ரோல் செய்யப்பயன்படும் ரிலேவைத்தான் துப்பாக்கியை இயக்குமாறு மாற்றியமைத்திருக்கிறார் அலெக்சாண்டர் ரெபேன். இதை தன்னால் மிக எளிதாகச் செய்து விட முடிந்தது என விளக்கமும் கொடுத்திருக்கிறார். ஒரு வேளை ஆப்பிளுக்குப் பதிலாக அந்த இடத்தில் யாராவது இருந்தால் வாய்ஸ் அசிஸ்டென்ட் சுடுவதற்கு யோசித்திருக்குமா என்பதுதான் இந்த வீடியோ எழுப்பும் மிக முக்கியமான கேள்வி. அதற்குப் பதில் நிச்சயம் யோசித்திருக்காது என்பதுதான்.
நாம் கட்டளையிடுவதையெல்லாம் யோசிக்காமல் செயல்படுத்தும் என்பதுதான் செயற்கை நுண்ணறிவின் பலமும், பலவீனமும். செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கு ஒரு புறம் ஆதரவு பெருகிக்கொண்டே சென்றாலும் மறுபக்கம் அதற்கு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. ``நாளைக்கு இந்த ஊருக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணிடு"னு சொன்னாலும் செய்யும்.``மதியம் ஒருத்தன் வீட்டுக்கு வருவான் அவன் கதையை முடிச்சிடுனு" சொன்னாலும் யோசிக்காமல் போட்டுதள்ளும். இப்படி செயற்கை நுண்ணறிவு என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறது என்பது எதிர்காலத்தில் மட்டுமே தெரிய வரும்.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தானியங்கி கார் ஒன்று பரிசோதனை ஓட்டத்தின் போது சாலையைக் கடக்க முயன்றவர்மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் இறந்துபோனார். அந்த நிறுவனம் விபத்துக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றாலும் எனக்குச் சம்பந்தம் இல்லையென்று கூட அந்த நிறுவனம் கூறிவிட்டால் என்ன செய்வது ? சாலையைக் கடக்க முயன்றவரைக் கொன்றது AI-யா அல்லது அந்த நிறுவனமா ? யாருக்குத் தண்டனை கொடுப்பது? பல கேள்விகள் எழுந்தாலும் அதற்குத் தீர்வு காணும் வகையில் சட்ட திட்டங்கள் இன்னும் தெளிவாக எந்த நாட்டிலும் கிடையாது. இப்பொழுதே மருத்துவம், கல்வி எனப் பல துறைகளில் AI-ஐ பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். சில ஸ்மார்ட்போன்களில் கூட AI இருக்கிறது. இவ்வளவு துறைகள் இருந்தாலும் பலரும் உற்றுநோக்குவது பாதுகாப்புத் துறையைத்தான். சில நாடுகள் தங்களது ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். ஒருவேளை அதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால் மனிதர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருக்கும்.
மனிதர்கள் மட்டும் ரிப்பேர் ஆவதில்லையா? ராணுவத்திலிருக்கும் சிலர் கட்டுப்பாட்டையிழந்து பொதுமக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அமெரிக்காவில் அதிகம்; மற்ற நாடுகளிலும் உண்டு. அதற்கு என்ன செய்தோம்? - இது போன்ற கேள்விகளும் எழலாம்.
ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னால் இதே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று அது நம் கைகளில் இருக்கிறது. அப்படிப் படத்தில் நாம் பார்த்த டெர்மினேட்டர் கதையும் எதிர்காலத்தில் நிஜமானாலும் ஆகலாம். போங்க பாஸ் இதெல்லாம் நடக்குற காரியமானு சிலருக்குத் தோணலாம். அவர்கள் இதற்கு முன்பு இருக்கும் இரண்டு வரிகளை மீண்டும் படிக்கலாம்.
விகடன்
------------------
//அண்மையில் சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்திய கூகுளின் டியூப்லெக்ஸ் இதற்கு நல்ல உதாரணம்.// ஒரு சலூனுக்கு போன் செய்தது போல நடந்தது ஒரு set up என்று வெளியாகி உள்ளது . எந்த சலோனுக்கும் அப்படி ஒரு போன் வர வில்லை , அதே போல போன் எடுத்தால் கடை பேர் தான் சொல்லுவார்கள் , அதுவும் சொல்லவில்லை . அதே போல background noise அந்த போன் காலில் இல்லை . இந்தியாவில் நடக்கும் மோசடி இப்போ அமெரிக்கா வரை சென்று விட்டது .