நான் இங்கே இருக்கிறேன்

எனக்கு கொஞ்சம் தயக்கம்தான். சொல்வதா வேண்டாமா என்று. எவ்வளவு நாள்தான் தனிமையில் புலம்பிக் கொண்டிருப்பது.. யாரும் நான் சொல்வதைக் கேட்பதில்லை… நானும் அதே இடத்திலிருந்து கத்திக் கொண்டுதான் இருக்கிறேன்…

எவ்வளவு அழகான ஊர் அந்த அறுபது எழுபதுகளில். மிகக் குறைந்த ஜனத்தொகை. சென்னைதான். அதிலும் அந்த மாம்பலமும் பழைய மாம்பலமும்… இரண்டையும் பிரிக்கும் அந்த தண்டவாளங்கள்… “போய்ங்க்” என்ற ஒலியுடன் செல்லும் அந்த மின்சார இரயில். துரைசாமி தெருவுக்கும் பிருந்தாவன் தெருவுக்கும் இடையே இரயில்வே கேட்.. ஆரம்பத்தில் திறந்து மூடுவதுமாய் இருந்தது பிறகு ஏத்தி இறக்குவதுமாய் மாறியது.. மூடியிருக்கும்போது எப்பொழுது திறக்கும் என்று கண் கொட்டாமல் அந்தக் காவலைரைப் பார்த்திருக்க ‘டிணிங்’ என்ற ஒலிக்க ஒரு விளக்கு எரியும். விசையை முன்னுக்குத் தள்ளி, சாவியை எடுத்துத் திறக்க வரும்போதே அடுத்ததாக மூட மணி அடிக்கத் துவங்கி விடும்.. அடுத்த ஐந்து நிமிடம் ஒரே தள்ளுமுள்ளுதான்… கதவு மூடியவுடன் அதன் இடுக்கு வழியாக நுழைந்து செல்பவர்களும் உண்டு. ஏத்தி இறக்கும் கதவு வந்தவுடன் இன்னும் வசதி. தொடர்ந்து அந்த கதவின் கீழ் நுழைந்து செல்வது வாடிக்கை. வசதிக்காக கதவின் கீழ் தொங்கும் கம்பிகள் ஒவ்வொன்றாக பிரித்து எடுக்கப்பட்டது. சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் சாய்த்து நுழைந்து பயணம் தடையின்றி நடை பெற்றது.. இரயில் வண்டி ஓட்டுனர் எப்பொழுதும் அதி ஜாக்கிரதையாக “போய்ங்..” ஒலி எழுப்பி மெதுவாகச் சென்றாலும் விபத்துக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்துகொண்டுதான் இருந்தன…

பிருந்தாவன் தெரு என்றவுடன் எதோ பூந்தோட்டம் இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்.. ஒரு பெரிய குட்டை, அதைச் சுற்றி குடிசைகள்.. சாலை இருக்க வேண்டிய இடத்தில் ஆக்கிரமிப்புகள்.. வாகனங்களும், நடப்பவர்களும் அந்தத் தெருவை தவிர்த்தே வந்தனர்.
பனகல் பார்க் அருகில் இருக்கும் பள்ளியிலிருந்து நான் மெல்ல நடந்து வர, அந்தப் புத்தகக் கடை, பார்க்லாண்டு ஓட்டல், நல்லி துணிக் கடை கடந்தால் அந்த நடிகையில் முன்நாள் கணவரின் துணிக்கடைக்குள் அவர் இருக்கிறாரா என்று எட்டிப் பார்ப்பது வழக்கம். அவரும் நடிகரே. ஜெம் கார்னர் தாண்டி துரைசாமி சாலை நுழைந்தால் நேரே தெரிவது இரயில்வே கேட். மூடியிருந்தால் நுழைந்து செல்லக் கூடாது. தெரிந்தால் அண்ணன் அடி பின்னி எடுத்து விடுவான். மெல்லக் காத்திருந்து தாண்டி, வலது பக்கம் திரும்பி ரயில்வே பார்டர் ரோடு வழியாக தண்டவாளம் ஒட்டி நடந்தால், இரண்டாவது திருப்பம் ஜானகிரம் (பிள்ளை) தெரு. தண்டவாளத்திற்கு நேர் அந்தப் பக்கம் முப்பாத்தம்மன் கோயில் இருக்கும் தெரு.. தண்டவாளத்தை ஒட்டி இருக்கும் சுவற்றில் பெரிய ஓட்டை இருக்கும். இந்த பக்கம் சிமென்ட் கம்பங்களால் ஆன் வேலியில் ஒன்றிரண்டு உடைத்து வழியும் உண்டு.. இப்படிப் போனால் பள்ளிக்கு கிட்ட… ஆனா கோபக்கார அண்ணனிடம் பயம்.. இந்தத் தெரு முனையில்தான் டால்மியா ஜாம் கம்பெனி இருக்கு.. எப்பொழுதும் அங்கே பழத்தோல்கள் குவிந்திருக்கும். என் வீடு இதற்கு அடுத்த தெருவில். பழத்தோல் குவிந்திருந்த வீட்டின் நேர் எதிர் வீட்டு வாசல் சுவற்றில் இரண்டு குரங்கு பொம்மை இருக்கும்… குரங்கு பொம்மை வீடு என்றே பெயர்.

மெல்ல நடந்து வீடு போய் சேற்வேன்.. எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்டவாளத்தை தாண்டி செல்லக் கூடாது என்பது அண்ணின் கட்டளை.. இப்படி ஒரு நாள் அந்த நடிகரின் கடையை எட்டிப் பார்த்துக் கொண்டே கடக்கும்போதுதான் திடீரென்று நெஞ்சில் அந்த வலி ஏற்பட்டது. சற்று கலவரமானது. சாதுரியமாக ஜெம் கார்னர் கடந்து உஸ்மான் ரோடில் சிரிது தூரம் போனால் அந்த பொரி கடலைக் கடை அருகில் எங்கள் குடும்ப மருத்துவர் இருப்பார். வீடும் கிளினிக்கு ஒரே இடம். வாசலில் ஓடாத ஒரு கார் இருக்கும். இரண்டு அடி உயரத்தில் இரண்டு பாட்டில்களில் சிவப்பு மற்றும் வெள்ளை மருந்து நிரம்பி இருக்கும்.. வாசலில் யார் வந்தாலும் உள்ளே படுத்துக் கொண்டே கண் காணித்துக் கொண்டிருப்பார்.. முண்டா பனியனில், மார்புக்கு கீழ் வேட்டியைக் கட்டி இருப்பார்.. நான் நுழைந்த பொழுது யாரும் இல்லை… ஆனால் அவர் கவனித்திருக்கிறார்.. வந்தவர் என்னிடம் “என்னடா…?” என, நான் மெல்லிய குரலில், “நெஞ்சு வலி என்றேன்..” மேலும் கீழும் பார்த்தவர், முதுகில் ஒரு தட்டு தட்டி “அதெல்லாம் வலிக்காது, போ..” என்றார். நானும் வந்து விட்டேன்..

பள்ளிப் படிப்பெல்லாம் முடிந்து கல்லூரியில் கால் வைத்தாகி விட்டது..அந்த இரயில்வே கேட் மூடி கீழ்பாலம் கட்டி விட்டார்கள்.. இப்பொழுதும் அதன் அருகில் உள்ள சுவர் மேல் ஏறி குதித்து தண்டவாளம் தாண்டும் வித்தை பலர் பயின்று வந்தனர்.. சிலர் படிக்கட்டு இறங்கி ஏறினர்.. முதலாம் ஆண்டு பரீட்சை முடிந்த நாள் மாலை.. நண்பர்கள் அழைத்திருந்தனர், முப்பாத்தம்மன் கோவில் அருகில் சந்திக்க… சீக்கிரம் அண்ணன் வருவதற்கு முன் செல்ல வேண்டும்.. ஜானகிராம் பிள்ளை தெருவைக் கடக்கும்போது இப்படியே நுழைந்து அந்தப் பக்கம் சென்று விட வேண்டும் என்று நுழைந்து விட்டேன்… “போய்ங்….” ஒரு நொடி கவனிக்க வில்லை. பார்த்தால் தலையின் பின் பக்கத்தில் இருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருக்கிறது… இடது கால் தொடையிலிருந்து தனியாக இருக்கு, வயிற்றுப் பக்கத்திலும் ஏதோ வெட்டு.. மின்சார வண்டி வேகம் குறைந்து எல்லோரும் என்னை வேடிக்கை பார்க்கிறார்கள். யாராவது என்னை எனது குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கத்துகிறேன், யாரும் கண்டு கொள்ளவில்லை.. சிறிது நேரத்தில் வண்டி கிளம்பிச் சென்று விட்டது… அதோ என் அண்ணன் வந்து கொண்டிருக்கிறான். பார்த்தால் திட்டுவான். அவன் சட்டையை வேறு போட்டுக் கொண்டிருக்கிறேன்.. இரத்தக் கறையாகி கிழிந்துவேறு போய்விட்டது.. என்னைக் கடந்தவன் திரும்பிப் பார்த்து அப்படியே நின்று விட்டான். ஓன்றும் சொல்லைவில்லை… நான் சத்தம் போட்டு “இனிமேல் தண்டவாளம் தாண்ட மாட்டேன்..” என்று கத்த அவன் எதுவும் பதில் சொல்லாமல் சென்று விட்டான்.. சிறிது நேரம் கழித்து மாடி வீட்டு மாமாவுடன் வந்தவன், கையில் இருந்த வெள்ளைத் துணியை என்மேல் போட்டு விட்டுப் போகிறான்.. நான் என்னை அழைத்துச் செல் என்று சொல்வது அவன் காதில் விழவில்லை…

இரவு பத்து மணிக்குமேல் சிலர், என் கை, கால், தலையெல்லம் மூங்கில்வைத்துக் கட்டி எடுத்துச் செல்கிறார்கள்… நான் இங்கே இருக்கிறேன் என்று கத்துகிறேன், யாரும் செவி சாய்க்கவில்லை… என்னால் எங்கும் நகர முடியவில்லை… அங்கேயேதான் இருக்கிறேன்… ஏனோ என் குடும்பத்தினர் யாரும் அந்தப் பக்கம் வருவதே இல்லை. அப்படி வந்தாலும் நான் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை.. அவர்கள் எல்லாம் தண்டவாளம் இல்லாத ஊருக்கு குடிபெயர்ந்து விட்டார்கள் என நினைக்கிறேன்..

நான் இங்கேதான் இருக்கிறேன்…

“டேய்..!! யார்டா அது தண்டவாளத்தைக் கடப்பது… அறிவுகெட்டவனுங்க… அந்தப் பக்கமா போங்கடா…”

---முரளி

எழுதியவர் : முரளி (9-Jun-18, 7:14 pm)
சேர்த்தது : முரளி
Tanglish : naan ingey irukiren
பார்வை : 223

மேலே