அவனும் நானும்-அத்தியாயம்-09

....அவனும் நானும்....

அத்தியாயம் : 09

அன்று இரு விளம்பரங்களையும் முடித்துவிட்டு தாமதமாகவே வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் ஆனந்தும் கீர்த்தனாவும்...காரில் மெல்லிசையாய் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க,அவர்களிருவரையும் வார்த்தைகள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தன...ஒரு கட்டத்தில் அந்த அமைதியைக் கலைத்து பேச்சைத் தொடங்கி வைத்தாள் கீர்த்தனா...

"அண்ணா நேற்று என்னோட கல்யாணத்தைப்பத்திக் கதைச்சான்..."என்று சொல்லியவாறே அவள் ஆனந்தை திரும்பிப் பார்க்கவும்,அவனும் அதே நேரத்தில் யோசனை படிந்த முகத்தோடு அவளை நோக்கினான்...

"ம்ம்...அதுக்கு நீ என்ன சொன்னாய்..??.."

"ஏன் நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்னு உனக்குத் தெரியாதா...??..."என்று ஆதங்கமாய் கேட்டவளை ஓர்வித அழுத்தத்தோடு நோக்கியவன்,

"சரி அவன் என்ன சொன்னான்...??.."

"..நான் கல்யாணம் பண்ணிக்கலைன்னா தானும் இப்படியே இருந்திடுறேன்னு உறுதியாய் சொல்லிட்டான்...நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டேன் ஆனந்...ஆனால் அவன் அவனோட முடிவை மாத்திக்கத் தயாராவே இல்லை...எனக்கு இப்போ என்ன பண்றதுன்னே தெரியலை...ஒரே குழப்பமாய் இருக்கு..."

"அவன் மட்டும்தான் அவனோட முடிவில பிடிவாதமாய் இருக்கானா...??.."என்றவனின் வார்த்தைகள் மட்டுமில்லாது அவனது பார்வையும் அவளைத் துளைத்தது...

அவனது கேள்வியில் சிறிது நேரத்திற்கு வாயடைத்துப் போயிருந்தவள்,பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்...

"என் வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு உனக்கு நல்லாவே தெரியும் ஆனந்...எல்லாம் தெரிஞ்சும் நீயும் ஏன் இப்படியே பேசி வைக்குற...??.."என்றவளின் குரல் முழுவதுமாகவே கலங்கிப் போயிருந்தது...

அவளது வலி அவனுக்குப் புரியமாலில்லை..ஆனாலும் அவளது மனதை மாற்றுவதற்கு இதைவிடுத்தால் வேறொரு சந்தர்ப்பம் அமையாதென்ற காரணத்தினால்,இறுக்கத்தைக் கொஞ்சமும் தளர்த்திக் கொள்ளாமலே தொடர்ந்தான் அவனும்..

"நம்மளோட அன்பையும்,காதலையும் புரிஞ்சு கொள்ளாதவங்களுக்காக நம்மளோட வாழ்க்கையை நாமளே அழிச்சுக்கிறது என்கிறது முட்டாள்தனமானது...அதை தான் இப்போ நீயும் பண்ணிட்டிருக்க...இது கூட ஒருவிதத்தில் தற்கொலை பண்ணிக்கிறதுக்கு சமமானதுதான்..."

"இந்த ஐந்து வருடத்தில் உன்னோட வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு...ஆனால் உன்னோட மனசு மட்டும் அப்படியே அவனோட நினைவுகளைச் சுமந்துகிட்டுத்தான் இருக்கு என்றது எனக்கு நல்லாவே தெரியும்.."

"நானும் இந்த அஞ்சு வருசத்தில் உன்னையும் உன்னோட மனசையும் மாத்த என்னவெல்லாமோ பண்ணிப் பார்த்திட்டேன்...ஆனால் என்னால எதையுமே மாத்த முடியலை...ஏன்னா நீ அவனையும் அவனோட நினைவுகளையும் மறக்கத் தயாராவே இல்லை..."

"ஆரம்பத்தில் உன்னோட திருமணம் தொடர்பாய் அஸ்வின் பேசினப்போ உனக்கு ஆதரவாய் நான் இருந்தன்னா,அதுக்கு ஒரேயொரு காரணம் நீ எல்லாத்தையும் மறந்து பழைய கீர்த்தனவாய் ஒர் நாள் மாறுவாய் என்ற நம்பிக்கையில்தான்...ஆனால் இந்த விநாடி வரைக்கும் அஞ்சு வருசத்திற்கு முன்னால் தொலைந்து போன என்னோட  கீர்த்துவை என்னால கண்டுபிடிக்கவே முடியலை..."

"இன்னும் எத்தினை நாளைக்குத்தான் உன்னையும் உன் காதலையும் மதிக்காமல் தூக்கி எறிஞ்சிட்டுப் போனவனுக்காக தினம் தினம் கண்ணீர் விட்டிட்டே இருக்கப்போற...??..உனக்கென்றும் ஓர் வாழ்க்கை இருக்கு என்றதை மறந்திடாத…"

அவளிடம் இத்தனை வருடங்களாய் கேட்க முடியாமல் போன கேள்விகள் அத்தனையையும் அன்று ஒட்டு மொத்தமாக கேட்டுக் கொண்டிருந்தான் அவன்,ஆனால் அவனது அனைத்துக் கேள்விகளுக்குமே அவளிடத்தில் இருந்து கிடைத்த பதில் மௌனம் மட்டுமே...

அவன் கேட்ட கேள்விகளில் அவளின் மனம் எந்தளவு தூரத்திற்கு காயப்பட்டிருக்கக்கூடும் என்பதை அவன் நன்கே அறிவான்...ஆனால் இப்போதும் அவன் அமைதியாகவே இருந்துவிட்டால்,வாழ்க்கை முழுவதற்கும் அவள் தனிமையின் அரவணைப்பிலேயே இருந்துவிடுவாள் என்பதாலேயே,முதற்தடவையாக அவளிடம் புன்னகைக்குப் பதில் கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தான்...அவனின் அரவணைப்பையும் ஆறுதலையும்தான் அவள் இப்போது தேடுவாள் என்பது தெரிந்தும் அவன் அவளிடம் மிகுந்த அழுத்தத்தோடே பேசினான்...

"நான் உன்கிட்டதான் பேசிட்டிருக்கேன் கீர்த்து...இப்படி எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தால் என்ன அர்த்தம்...??..."

அவன் கேட்டதுமே அவனைக் கூர்மையாக ஓர் பார்வை பார்த்தவள்,விரக்தியாய் ஓர் புன்னகையை உதிர்த்துக் கொண்டாள்..

"ஹ்ம்...நீதான் என் மனசை இன்னைக்கு காயப்படுத்தியே ஆகனும் என்குற முடிவோட பேசிட்டிருக்கியே...இதில நான் பதில் சொல்லி மட்டும் என்ன ஆகப்போகுது..."

"அவனொருத்தன் ஏற்படுத்திட்டுப் போன வலியே இன்னும் என் மனசில ஆறாத ரணமாய் இருக்கு...இதில இன்னொரு ஏமாற்றத்தையும் வலியையும் தாங்கிக்கிற சக்தி எனக்கில்லை.."

"எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க கீர்த்து...எல்லா விசத்திலேயுமே தன்நம்பிக்கையோட பேசுற நீ...ஏன் இந்த ஒரு விசயத்தில மட்டும் எல்லாத்தையும் இழந்திட்ட மாதிரியே பேசிட்டிருக்க...??.."

"ஹ்ம்...எல்லாத்தையுமே இழந்திட்டுத்தானே நிக்குறேன்...அன்னைக்கு அவன் என்னோட காதலையும் என்னையும் மட்டும் தோற்கடிச்சிட்டுப் போகல...என்னோட காதல் அத்தியாயம் மொத்தத்துக்குமே ஒரேடியாய் முற்றுப்புள்ளியும் வைச்சிட்டுத்தான் போனான்...அன்னைக்கு அங்கே அந்த இடத்திலேயே என்னோட காதல் மொத்தமும் செத்துப் போச்சு ஆனந்..."

"இப்போ நான் கொஞ்சமாச்சும் உணர்வுகளோட உலாவிட்டு இருக்கன்னா,அதுக்கு காரணம் உன்னோட நட்பும்..அண்ணனோட அன்பும் மட்டும்தான்...கடைசிவரைக்கும் உனக்கு ஒரு நல்ல தோழியாவும்,அண்ணனுக்குத் தங்கையாகவும் மட்டுமே இருந்திட்டுப் போயிடுறேன்...உங்களிருவரையும் தவிர என் வாழ்க்கையில் இனி வேற யாருக்குமே நான் இடம் கொடுக்குறதா இல்லை..."

"இதுக்கு மேலேயும் இதைப்பத்தி எதுவும் பேச வேண்டாம் ஆனந்...அண்ணாவை நானே சமாளிச்சுக்குறேன்...இதில உன்னோட சப்போர்ட் இருக்கும்னு நினைச்சேன்...பரவாயில்லை நானே பார்த்துக்குறேன்..."என்றவள் அதற்கு மேல் பேச  எதுவுமேயில்லையென்றது போல் பார்வையை வெளிப்புறமாய் திருப்பிக் கொண்டாள்...

அதற்குமேல் அவனும் அவளின் கோபத்தையும் வேதனையையும் மிகைப்படுத்த விரும்பாததால்,காரின் வேகத்தை அதிகரித்து வீட்டை நோக்கி விரைந்தான்....

காலையிலேயே ஸ்வேத்தாவிடமிருந்து அடுத்தடுத்து வந்திருந்த மெசேஜ்களிற்கு பதிலளித்தவாறே கீழிறங்கி வந்து கொண்டிருந்தான் அஸ்வின்...

"குட்மோர்னிங் அஸ்வின்...என்ன இன்னைக்கும் பிசிதானா...??.."

"மோர்னிங்டா...இதை நான் உன்னைப் பார்த்துக் கேட்கனும்...நீங்க இரண்டு பேரும்தான் 24 மணி நேரமும் பிசியான ஆக்களாச்சே..."

"என்னடா பண்றது சில நிறுவனங்களோட விளம்பரங்களை குறிப்பிட்ட திகதிக்குள் முடிக்கலைன்னா அப்புறம் கேஸாகிடும்...அதான் இப்படி இரவு பகல் பார்க்காமல் ஓடிட்டே இருக்க வேண்டி இருக்கு..."

அவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போதே வெளியே செல்வதற்காய் தயாராகி வந்தாள் கீர்த்தனா...

"என்னம்மா சன்டே அன்னைக்கும் காலையிலேயே கிளம்பிட்டாய்...??.."

"இல்லைன்னா...கொஞ்சம் வேலையிருக்கு..போயிட்டு உடனே வந்திடுறேன்..."

"சரிம்மா...ஆமா நீ போகலையாடா..??.."

"இன்னைக்கு அவள் மட்டும் போனாலே போதும்...எனக்கு அங்கே வேலையில்லை..."

இன்று எந்த வேலையும் இல்லையென்று அவனிற்குத் தெரியும்...அதேபோல் அவள் எதற்காக வெளியே செல்கிறாள் என்பதும் அவனிற்குத் தெரியுமென்பதால் அஸ்வின்னின் முன்னால் எதையும் காட்டிக் கொடுக்காமலேயே பேசினான்...

"ஓகேண்ணா நான் கிளம்புறேன்..."என்றவாறு வெளியே செல்பவளையே யோசனையோடு தொடர்ந்தது அவ் இருவரின் விழிகளும்...

"உன்கிட்ட ஏதாச்சும் சொன்னாளா ஆனந்..??.."

"எதைப்பத்திடா...??.."

"நான் எதைக் கேகுறேன்னு உனக்குத் தெரியாதா..??..நிச்சயம் அவள் உன்கிட்ட எல்லாமே சொல்லியிருப்பாள்...ஆரம்பத்தில அவள் கல்யாணமே வேண்டாம்னு சொன்னப்போ அப்பா அம்மா இறந்த துக்கத்தில ஏதோ அப்படிச் சொல்லுறாள்ன்னுதான் நான் அப்போ அவளைக் கட்டாயப்படுத்தலை...ஆனால் இப்போயும் அவள் கிட்டயிருந்து அதே பதில் வருதென்றால் அதுக்கு காரணம் வேறோன்றாகத்தான் இருக்கனும்..."

"அது என்னன்னு உனக்கு நிச்சயமாய் தெரிஞ்சிருக்கனும் ஆனந்...அவள்தான் என்கிட்ட இருந்து சொல்லாமலேயே மறைச்சிட்டாள்...நீயாச்சும் என்கிட்ட சொல்லேன்டா...??...

தன் முன்னே கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாது தவித்துக் கொண்டிருந்தான் ஆனந்...

"ஆனந் நீயும் இப்படி அமைதியாய் இருந்தால் என்னடா அர்த்தம்...??...என்ன பிரச்சினைன்னு தெரிந்தால்தானே அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்...இப்படி இரண்டு பேருமே என்னை ஒதுக்கி வைச்சால் எப்படிடா..??.."

"டேய் ஏன்டா இப்படியெல்லாம் பேசுற...நீ நினைக்குற மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை...அங்கிள்ளும் ஆன்டியும் என்னைக்கு இறந்தாங்கலோ...அன்னைக்கே அவளோட மனசில எந்த உறவுமே நிரந்தமில்லலை என்ற ஒரு எண்ணம் வந்திட்டுது...அதனாலதான் புது உறவை ஏத்துக்க பயப்படுறாள்..."என்று பாதி உண்மை பாதி பொய்யென்று அப்போதைக்கு அஸ்வின்னை ஒருவழியாக சமாளித்துக் கொண்டான் அவன்...

"அவளை எப்படியாச்சும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு...நீ கவலையை விடு அஸ்வின்..."

ஆனந் கூறியதில் ஓரளவிற்குச் சமாதனமடைந்தவன்,

"நீ சொன்னது போலவே அவளைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைச்சிட்டாய் என்றால் எனக்கு அதுவே போதும்டா..."

"யாமிருக்க பயமேன்...ஆனந் பார்த்துக்குவான்..."என்று அவன் அந்த சூழ்நிலையை இலகுவாக்கவும் இருவர் முகத்திலும் புன்னகை அரும்பியது...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (10-Jun-18, 9:41 am)
பார்வை : 463

மேலே