மெய்தீண்டா ஸ்பரிசம்
தாமரைக் குளந்தனில் மலர் கொடிகள் சூழ்ந்து கிடக்க பனிதுளி தாமரை மலர்களை அள்ளி அனைத்த நேரமது. வலப்பக்கம் ஒருகளித்து படுத்த சுகம் வெறுத்து போக இடப்பக்கம் ஒருகளிக்க முன்வந்தாள் வெண்மதி. ஏனோ மல்லாந்து படுத்திட நேரமுமில்லாமல் தலைக்குப்புற படுத்திட காலமும் கனியாமல் தன் கண்களை அலக்கழித்து கொண்டிருந்தான் வளன். எதை எதையோ யோசிக்க தூக்கம் அவன் கண்ணனை கவ்வாமலே கிடந்தது அவ்வப்போது மனைவியின் முகத்தையும் அவள் இடுப்பின் வளைவையும் கண்டு மனம் வெகுண்டான். அவளோ வண்ண கனவுகளால் மெய்மறக்க தன் சப்தமிடும் வளைவிகளை கொண்டு தன் அடி வயிற்றை மெல்ல அனைத்தாள். அவள் முழுக இன்னும் ஈர்இரண்டு திங்கள் ஆகும்படியால் அவள் முகம் சற்றும் குறையாத அவாவை அள்ளி பூசியிருந்தது.
யாருக்கும் எளிதில் இந்த வரத்தை அவன் வழங்காத போதிலும் இந்த வரத்தை பெற்றமையால் வளனின் உள்ளம் பெரிதும் இன்பம் கொள்ளாது இருந்தது. அவன் மனம் சஞ்சலத்தில் மூழ்கி தவித்தது. ஆசை காதல் மனைவியின் முகம் கூட மறையும் மட்டும் அவன் புத்தி எதோ ஒன்றில் மழுங்கி கிடந்தது.
நூற்றாண்டின் ஆண் மகன் என்ற போதும் இவன் மூதாதையர்களின் மந்தி மதி இவனை ஆட்கொள்வதில் எந்த தாத்பரியமும் தேவையில்லை தானே.
விடியும் முன் பனி நேரம் தொடங்கியும் அவன் கண்கள் அயரவில்லை அவன் நாசி பெருமூச்சிட தயங்கவில்லை ஆனால் அவன் காதுகளோ எதோ ஒன்றை முனுமுனுத்து கொண்டே இருந்தது. அது அவன் அலுவலக கேலி உரையாடல்கள்.
"டேய் ராஜ் என்னடா உனக்கு ஆம்பள பிள்ள தான் பிறக்கும்னு சீன் போட்ட இப்ப என்னாச்சு
நான் தான் சொன்னேன் ல நீ தான் கேட்கவே இல்லை
ம்ம் அடுத்து வளன் தான்" என்ற பாபுவின் வார்த்தைகளுக்கு இவ்வாறு மறுமொழிந்தான் ராஜ்.
"என்னடா பொம்பள பிள்ள புறந்தா இப்ப என்னாங்குற"
"என்னாவா ! அசால்ட்டா கேக்குற இப்பனில்ல அப்ப இருந்தே பொம்பள பிள்ள பிறந்தாலே ஒவ்வொருத்தனும் கதறுவானுக" என பாபு கூற.
"டேய் நீ கிராமத்துல பொறந்து வளர்ந்ததுனால அப்படி பேசுர"
"ஆமா சிட்டில நீங்களாம் செய்யவே மாட்டீங்க! போடா டேய் !
இங்க பாரு பொம்பள பிள்ள பிறந்தா அது படிக்க வச்சு, பெரிய பிள்ள ஆன சடங்கு செஞ்சு, கல்யாண பண்ணி வச்சு சீர் சினத்தி கொடுத்து, வளைகாப்பு பண்ணி ஒரே வேலை தான் அதுமில்லாம அத கட்டி கொடுக்குற வரைக்கும் பொத்தி பாதுகாக்கனும் நடுவுல எவனாயாவது இழுத்து ஒடுற கேஸ்லாம் இருக்கு.
இதலாம் விட ஆம்பள பிள்ள பெத்தெடுத்த தனி கெத்து தான டா!!
என்னடா வளன் நான் சொல்றது சரிதான" என்று ராஜ் கூறி முடித்த பிறகும் அதற்கு பதில் கூற மனமில்லாது வளனின் நா நன்கு அடைந்திருந்தது அவன் செவிகளும் கூட அதனால் தான் பாபுவின் மறுமொழி அவன் காதுகளை துளைகாமலே போயிற்று.
அந்த காலை விடியல் அவ்வளவாக தெளிச்சியடையவில்லை. வழக்கத்திற்கு மாறாக பேருக்கேற்றார் போல நிரைமாத நிலவையொத்த மஞ்சள் பூசி பூர்ண சந்திர நிலவொளி ததும்ப சற்று முன் கண்ணயர்ந்த காதல் கணவனை எழுப்பிட வந்தாள் வெண்மதி அவள் முகத்தில் அப்படியொரு பிரதிபலிப்பு அவள் குரலில் அத்துனை வாஞ்சை "வளன் எந்திரி டா, ஆபிஸ் போனுல" என்று அவள் கூறும்போதே அந்த குறிப்பிட்ட உரையாடல் மீண்டும் அவன் செவியை எட்டியது. இருந்தும் மகிழ்ச்சியின் ழகரம் ஐகாரமாக ஒலிக்க வெக்கம் மேலிட "அம்மா அடுத்த மாசம் வளைகாப்பு பண்ணலாம் சொன்னாங்க" என அவள் கூறியபோது மஞ்சள் கன்னத்தில் சிவப்பு ரேகைகள் பரவின அவனுக்கோ அது கண்களில் பரவியது.
அந்த சிவந்த கண்களுக்கு தெரியவில்லை தான் எதற்காக சிவக்கின்றோம் என்று அவ்வளவேன் அவனுக்கே அந்த அன்னிச்சைகளின் அசைவுகள் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளோ அவன் முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவன் ஒற்றை வார்த்தைக்காக வெகு நேரம் காத்திருந்தாள். 'ம்ம்ம்' என்ற ஒற்றை வார்த்தை வந்து விழுந்தது ஆனால் அவள் அதுவல்லவே.
மெல்ல எழுந்து சொம்பல் முறிக்கையில் அவன் காதோரம் வந்து இவ்வாறு செப்பினாள் "இன்னிக்கு செக்கப் போனும்"
"நான் வரல! அம்மாவ கூட்டிட்டு போ"
"எப்பவும் நீங்க தான வருவீங்க" என அவள் கேட்கயில் அந்த வாக்கியத்தில் அத்துனை கனிவு.
"அதான் சொல்றேன்ல அம்மாவ கூட்டிட்டு போ" என அவன் கூறும் போதே முற்றத்தில் கொத்தி தின்ற புறாக்கள் தன் இணையை கூட்டிட்டு பறந்தன.
புறாக்களின் அந்த சலசலப்பை வாசுகி பெரிதாக ரசிக்க முடியவில்லை.
"என்னடா! காலையிலே கத்திட்டு இருக்க" என்று அவள் அதட்டலில் வளனுக்கு மற்றுமொரு சோம்பல் முறிப்பு.
"இன்னிக்கு செக்கப் போனுமாம்...
நீ கூட்டிட்டு போய்ட்டு வா"
"என்னடா புது பழக்கம்! புருஷனா லச்சணம் கூட்டிட்டு போ...
அடுத்த மாசம் விசேஷம் வேற வச்சு அவ அம்மா வீட்டுக்கு அனுப்பனும்
ஒழுங்க போய்ட்டு வா
நீ ரெடியா இருமா" இவ்வாறு வாசுகி தன் கூற்றை முடிக்கும் முன்பே தாயின் சொல்லை தட்டாது சென்றான்.
அன்று காக்கை கறைந்ததற்கு அது தான் காரணமோ என்னவோ பங்கஜம் அந்த காலை வேளையிலயே மஞ்சள் குங்கும முக வனப்போடு வந்துவிட்டாள். 'வாசுகி வாசுகி' என்று கத்திக்கொண்டே நுழைந்தாள்.
"ஏன்டிமா கிளம்பிட்டியோனோ" சொல்லும் போதே அந்த மஞ்சள் முகம் வெண்மதி யின் மதி வதனத்தில் விழுந்தது.
பங்கஜத்தை பார்த்தவுடனே வெண்மதியின் கண்கள் அவள் பாதங்களை தேடியது சாஷ்டாங்க நமஸ்காரமாக இல்லாவிட்டாலும் நமஸ்கரிக்க முன்வந்தாள் இருந்தும் அவள் ஆசிர்வாதங்கள் வெண்மதியை சேர என்றும் தயங்கியதில்லை.
"நாராயணா! சௌபாக்கியவதியா இருடீமா....
நல்ல வயிறு தெரிறதுடீ சாட்சாத் மகாலட்சுமிய தான் பிரசவிக்க போறடீ
ஜாக்கரதடீமா !" என்று கூறயிலே
"ஆமா பங்கஜம், புளிப்பே ஆகாதுங்குறானா பாரு....
சாக்லேட் தான் வாங்கி வாங்கி சாப்ட்றா
முகம் வேற ரொம்ப வெளரி போய்ருக்கு...
எனக்கும் பொம்பள பிள்ள தான் தோனுது"
வாசுகி இப்படி சொல்லி முடிக்கயில் காகம் கறைந்ததன் மற்றொரு காரணம் விளங்கிற்று.
வெண்மதியின் தோழி இன்முகத்துடன் வருவதை கண்டு வாசுகி வரவேற்றாள்.
"வாமா நல்லாருக்கியா ! பார்த்து ரொம்ப நாளாச்சு இப்ப தான் வழி தெரிஞ்சத....
சரி சரி ! மதி உள்ள தான் இருக்கா போ
நான் வெளிய கிளம்பிட்டேன்...
மதி!!!!
செக்கப் போய்ட்டு வந்து ஞாபகப்படுத்து பாதம் வேறமா வீங்கி சூடேறி இருக்குன்னல ஒத்தடம் கொடுக்கனும்
சரியா...." என்று கனிவுடன் விடைபெற்றாள் வாசுகி.
மாமியாரை வழியனுப்பிய கையோடு தோழியை வரவேற்றவள் சிறிது நாழிகை கூட இடைவெளிவிடாமல் தோழியின் பேறு கால அனுபவங்களை அத்துனை ஆச்சரியத்துடன் கேட்டாள்.
தான் பெண் பிள்ளை பெற்றெடுத்த அந்த அழகிய தருணங்களை வெகுவாக அளப்பரிந்தாள். "மாசா மாசம் மூனு நாள் சாகுரதுக்கு பிள்ள குட்டியா பெத்து போடுடலாம் என்னடீ!" "போடிங்கு லூசு" என மனம் விட்டு இருவரும் பேசி சிரித்து கொண்டிருந்தார்கள். உரையாடல்கள் நீண்டது சில பல அந்தரங்க சமாச்சாரங்களை நோக்கி பயணித்தது. ஒரு வழியாக உரையாடல் முடிவுரையை நெருங்கியது.
"அப்ப கண்டிப்பா பொம்பள பிள்ள தான்டீ" என்று எக்காள சிரிப்புடன் அவள் தோழி சொல்ல ஏதுவாக வளனும் அவ்விடம் வந்தான்.
அனைத்தையும் கேட்கவில்லை என்றாலும் குறிப்பறிதலின் குறிப்புகளை அவன் மூளையிலே குறித்து கொண்டான்.
அவனை பார்த்தவுடனே "பாப்பாக்கு காது குத்துறோம் நீங்க கண்டிப்பா வரனும்
உடம்ப பாத்துக்கோடி
வரேன்! வரேன்!" என ஒரு சேர இருவரிடமும் விடைபெற்று சென்றாள் மதியின் தோழி.
நேரம் மெல்ல கடந்தது மருத்துவமனைக்கு இருவரும் புறப்பட்டனர். அவளோ பிள்ளையை சுமக்க அவனோ பல குழப்பங்களை சுமந்தவாரே வந்தான். அவள் பேச்சுக்களின் சுவையை வளனின் செவி உண்ண மறுத்தது. ஒரு சிறிய கத்தி அவன் மன சுவற்றை உதிரம் சிந்தாது அருவியது.
இன்று அந்த கேள்வியை கேட்டே ஆக வேண்டும் என்று அவன் மனம் துடித்தது.
டாக்டரை சந்தித்த வேளையில் அந்த நிகழ்வை இவர்கள் பார்க்க வேண்டும் என ஆண்டவன் விதி செய்தானோ என்னவோ.
பார்த்து விட்டார்கள்.
"இங்க பாருங்க ஐப்பசி 13 சூர்யோதயத்துக்கு பிறகு துலா லக்னத்துல திருவாதிரை நட்சத்திரத்தில மிதுன ராசியில என் மருமகளுக்கு குழந்தை பிறக்கனும் என்ன பண்ணுவீங்களோ தெரியாது எனக்கு இந்த இதுல தான் பிறக்கனும் தயாரா இருந்துகோங்க"
"மேடம் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க
திஸ் இஸ் இம்பாஸிபிள்"
"போன வாரம் கிருஷ்ணமாச்சாரி மருமகளுக்கு பண்ணும் போது தெரிலயோனோ"
"பட் ! உங்க மருமக ஆரோக்கியமா இருக்கா ! தேர் இஸ் நோ நெஸஸிட்டி ஃபார் சிஸேரியன்"
"பட் சிட் லாம் தேவையில்லை
நீங்க பன்றேள் ! அதுக்கு எவ்ளோ வேணாலும் வாங்கிகோங்கோ!"
முகம் கொஞ்சம் சிவந்தது மெள்ள தன் இருக்கையில் அமர்ந்த மாத்திரமே எழுந்து மதியை அழைத்து சென்றார் டாக்டர்.
சில மருத்துவ சம்பிரதாயங்களை முடித்த பிறகு டாக்டர் சிரித்த முகத்துடன் வந்து வளனை நலம் விசாரித்தார்
நலம் தெரிவிக்க கூட நாழிகை செலவாகுமென்று சட்டென "டாக்டர் இஃப் யூ டோண்ட் மைன்ட் ! பொறக்கபோறது என்ன குழந்தனு தெரிஞ்சுக்கலமா" என்று குரல் ஒடுங்க மெல்லிய சப்தத்தில் கேட்டான்.
நடுவே தொலைபேசி டாக்டரை பதில் கூற விடாமல் தடுத்தது.
தொலைபேசியில் ஒரு செவிலியர் "டாக்டர் வார்டு நம்பர் ஃபைவ் ரதிதேவிக்கு லேபர் பெயின் ஆரம்பிச்சுருச்சு லேபர் வார்டுக்கு எடுத்து போயிடவ"
"லேபர் வார்டா! ஆப்ரேஷன் தியேட்டர் கூட்டிட்டு போ....
ஏற்கனவே அந்த டீன் என்ன புடிச்ச கத்துறான்
நீ கேசுவலா சொல்ற... திஸ் இஸ் தர்டு கிட் இதும் பொம்பள பிள்ள தான் சோ மேக் இட் அஸ் சிசேரியன் வித் டூபல் லிகேஷன்.
அந்த ஆள்ட சைன் வாங்கிட்டு
எபிடுரல் அனஸ்திஸியா குடுத்து ஆப்ரேஷன் ரெடி பண்ணி வை இதோ வரேன்
'ஏய் அனஸ்திஸ்ஸிஸ்ட்டு லீவ் சோ பார்த்து ஒகே".
இதை கேட்ட கனமே வயிற்றில் அந்த சிசுவுக்கு கூட ஓர் சின்ன மயிர்க் கூச்சம் பதமாக தன் தாயின் அடி வயிற்று சுவற்றை ஆழம் பார்த்தது. இருக அணைத்து அந்த இன்ப வலியை பொன்முறுவலுடன் அனுபவித்தாள் வெண்மதி. சக்ர வியூகம் சூட்சுமத்தை அறிய அபிமன்யு எடுத்த அந்த சலசலப்பும் சீதையின் வயிற்றில் உச்சு கொட்டி வால்மீகியின் கதா கலாட்சபேத்தை கேட்டு லயித்த குசலவர்களின் பரவசத்திற்கும் அந்த சிசுவின் தேக சிலிர்ப்பிற்கு என்றும் ஈடாகிவிடாது அப்படி நுன்னிய நகர்வுகளின் உணர்வுகளை அந்த சிசு கடத்திட்டதை இறைவனும் கூட கண்டு அதிசயித்து போயிருப்பான்.
இப்போது ஒரு சின்ன அசட்டு முகச்சுளிவோடு நிறுத்தி நிதானமாகவே உதட்டோர புன்னகையோடு பதில் சொன்னார் டாக்டர் "ஐ வில் மைன்ட்"
அதோடு நிற்காமல் மேலும் தொடர்ந்தார் "சி மிஸ்டர் வளன் ! ஜ திங் யு ஆர் அ 'புரோகிராம் அனாலிஸ்ட் ' ரைட்டு"
தென் திஸ் குவெஸ்டின் இஸ் சிம்ப்லி ரிடிகுலஸ்
இன்னும் மூனு மாசம் பொறுத்துக்கோங்க.. அப்புறம் உங்களுக்கே தெரியும்.
அன்ட் ஷி இஸ் கம்ப்ளீட்லி ஃபைன் குழந்தையும் ஆரோக்கியமா இருக்கு
த சேம் டைட் அன்ட் மெடிசன்ஸ்
அதே ஃபாலோ பண்ணுங்க
அன்ட் ஒன் திங் ஃபோன்ல பேசுனது எதையும் மனசுல வச்சுகாதீங்க." என மீண்டும் ஒரு அசட்டு முகச்சுளிவோடு ஒரு குறுஞ்சிரிப்பு.
"அது எங்களுக்கு தெரியாதா" என முனுமுனுத்து கொண்டே அயல் மொழியில் நன்றி கூறி மதியை அழைத்து சென்றான்.
மறுபடியும் அதே யோசனை பித்தம் தலைக்கேறியது மூளை கொஞ்சம் சூடேறியது வீட்டில் அவளை இறக்கி விட்டு அடுத்த நொடியே அவன் கண்கள் அலைப்பாய்ந்தது. என்ன செய்வதென இதயம் எகிறி துடித்தது. எனக்கு 'பொம்பள பிள்ள தான் இப்ப என்ன செய்ய போற' என மனக்கதவை திறந்து யாரோ கூக்குரலிட்டு கொண்டிருந்தார்கள். இரத்தம் கொதிநிலையின் அளவீடை தாண்டியது. பட்டம் படித்த நாகரிக மிருகம் அல்லவா ஆகயால் மனம் இப்போது இணையத்தை தேடியது கூகுளாண்டவனின் துணையை நாடியது.
தேடலின் உச்சத்தை அடைந்தான். எதோ ஒன்று கண்களில் சிக்கியது. சிக்கியதை விடுவதாக இல்லை. நேராக மருந்துக்கடை
கால்களில் இருந்த நடையின் வேகம் வார்த்தைகள் விழும் நாவில் இல்லை. தயங்கினான் கொஞ்சம் மயங்கினான் பிறகு நெஞ்சுரம் கொண்டு. 'மிஃப்டிஸ்ட்ரோன், மிசோபிர்டோல்' இருக்கா என்றான்.
"ஆஆஆன் என்னாது"
"மிஃப்டிஸ்ட்ரோன், மிசோபிர்டோல் வேனும்"
கடைக்காரன் ஏற இறங்க அவனையே வெறித்தான் "டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருக்க"
"இல்ல!!" என்றான். அந்த ஒற்றை வார்த்தையில் அவன் ஜீவனும் அடங்கியது.
"ப்ளிஸ் சார் தாங்க" என்று கெஞ்சினான்.
"சார் அப்டிலாம் தர முடியாது" என. கடைக்காரர் கூறியவுடன் மொத்த உலகை தோற்ற தொனியில் செல்ல முற்பட்டான். தன்னையே தோற்று அற்ப பிறவியானவனுக்கு உலகை தோற்ற தொனி தேவை இல்லை தான் இருந்தும் அதை உருவகப்படுத்திக் கொண்டான்.
சென்றவனை ஒரு குரல் தடுத்தது. அது அந்த கடைக்காரனின் குரல் தான்.
"எத்தன மாசம்" என்றான்
நிரை மாதம் என்று சொல்லிடாதே என்று அதே மனக்குரல் ஒலித்திட "நாலு மாசம்"
"நாலு மாசமா.... பிரிஸ்கிரிப்ஷன் இல்லாம தந்தா ஓனர் திட்டுவாரு
பக்கத்து தெருல நாட்டு மருந்து கடை இருக்கு அங்க போய் கருக்கலைப்பு மாத்திரை வேனும் தேவா அனுப்புன்னு சொல்லுங்க"
அட கொடுமையே அந்த சண்டாளன் கடையை திறந்து தான் வைத்திருக்க வேண்டுமா! மனிதத்தை கலட்டி வைத்து விட்டு திரியும் ஐந்தறிவுக்கு அன்று நினைப்பதெல்லாம் நடக்கத்தான் வேண்டுமா... அந்த ஆலகால விஷத்தை வாங்கிய போது அந்த முகத்தில் வெளிப்படும் முறுவலை பார்த்த போது
அத்துணை அருவருப்பு. காலில் மிதிபட்ட அசிங்கத்தை போல ஒர் அயர்வு.
மெள்ள தான் தினவெடுத்து தேடி எடுத்து கொண்டு அந்த நாட்டு மருந்தை யாருக்கும் தெரியாதவாறு காய்ச்சிய பாலில் கலந்தான்.
தன் பிள்ளையை கொல்ல தானே கால் கடுக்க பாலை காய்சிவிட்டு சென்றாளோ பாதகத்தி. அவள் காய்ச்சியதை அவளுக்கே
பரிசளிக்க இப்போது எடுத்து செல்கிறான்.
அந்த பாலை பவ்வியமாக மதியிடம் கொடுத்தான். அவன் கண்களில் வெளிப்பட்ட கொலையுணர்வு அவள் காதல் கண்களுக்கு ஏனோ அது புலப்படாமலே போனது. பாலை வாங்கி சொட்டு மிச்சமில்லாமல் குடித்தாள்.
கொஞ்ச நேரம் கண் சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென "உனக்கு இந்த குழந்தய பெத்துகுறது பிடிக்கலயா" என்றாள்.
அதை கேட்ட கனமே அவன் சப்த நாடியும் ஒடுங்கியது. "ஏய் என்ன உளர்ற... பேசாம தூங்கு" என்று நகர்ந்தான்.
அவள் கேட்ட கேள்வி ஒரு பக்கம் சஞ்சலத்தை ஏற்படுத்தினாலும் அவன் மனம் நிறைந்து காணப்பட்டது மற்றோரு கணம் குற்றவுணர்ச்சியில் சுருங்க எத்தனித்தது.
நகர்ந்தவன் இருக்கையில் அமர வாசுகி டம்ளர் நிரம்ப பால் எடுத்து வந்து கொடுத்து அவன் அருகிலேயே அமர்ந்தாள்.
அவன் குடித்து முடிக்கும் வரை அவனயே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் குடித்து முடித்தவுடன் தன் இன்முகத்தில் பொன் முறுவலிட்டாள்.
தீடீரென "மா!!!!" என்று கத்தினான் அல்லையை எதோ ஒன்று கவ்வியதை உணர்ந்தான். அவன் கதறல் முற்றத்தில் பறந்த புறாக்களால் கூட கேட்க முடியவில்லை.
"என்ன காரியம் பண்ண பார்த்த வளன்" என்று அவள் கேட்கும் போதே அவனிடம் இருந்தது அரை உயிர் தான். இதை கேட்கும் போது வாசுகி மிகவும் கூனி குருகி இருந்தாள்.
இப்படி ஒரு பிள்ளையை பெற்ற பாவத்தை எங்கனம் சென்று கழுவுவாள். அன்று வயிற்றை கழுவி இருந்தால் இப்படி ஒரு உயிரினம் ஜனிக்காமல் கிடந்திருக்கும். அவனை எண்ணுகயில் அவள் உடம்பே நடுங்கியது அவனுக்கு பாலுட்டிய மாரை அறுத்து எறிய துடித்ததாள் அவனை பெற்றேடுத்த உருப்பை பொசுக்கிட துடித்தாள் ஈரய்ந்து மாதம் சுமந்த கருவறை உருவி எடுத்திட துடிதத்தாள். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வர.
"நீ என் வயித்துல தான் பிறந்தியா ! ச்சீ !!!
உன்ன பிள்ளயா பெத்தத நினைக்கும் போது அருவருப்பா இருக்கு" என்று காரி உமிழ்ந்தாள்.
"என்னடா நம்ம அவளுக்கு கொடுத்தது நமக்கு எப்படி வந்துச்சுனு பாக்குறியா!
கண்டிப்பா தெரிஞ்சகனுமா !!
நீ இனி எதையும் தெரிஞ்சுக்க வேனாம்"
என்று கூறி கேசத்தை அள்ளி முடிந்து நகர்ந்தாள்.
கலந்த பாலை அவன் இமைத்த கணம் அவள் மாற்றியத்தை அவன் அறிந்திருக்க மாட்டான். தனக்கு பிறக்க போகும் பிள்ளை ஆணா பெண்ணா என்று அறிய இருப்பானா என்றும் அறிந்திருக்க மாட்டான். அதை அவன் அறிய இப்போது அவன் விளையவில்லை. பாபுவின் வாக்கியங்கள் இப்போது தான் அவன் காதை எட்டியது "பொன்னுங்க தான்டா நம்மக்கிட்ட கடைசி வரைக்கும் அன்பா இருப்பாங்க. பொன்னுங்க பாத்துக்குற எந்த அப்பா அம்மாவும் முதியோர் இல்லம் போனதா சரித்திரம் இல்ல" என அவன் காதுகளை வட்டமிட்டது.
உயிர் ஒடுங்கிய அந்த தருணத்தில் அவன் நா ஒன்றை மட்டுமே முனுமுனுக்க முயற்ச்சித்தது "மா என்ன மன்னிச்சிடு மா என்ன மன்னிச்சிடு!!!!"
- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி