உழவன் வலி

நிர்மூலமாக
நிர்வாணமாக
நிற்கிறேன்,

கண்ணீரை நீராகக்
கருதுவோர் மத்தியில்,
வறண்டு விதவையான
வயல் வெளிக்கெல்லாம்
வியர்வையாகிறேன்,

அரைகுறை அழுக்கு
கோமணத்துடன்
நிர்பயாவைத் தேடும்
காமுகனல்ல,
ஆனால் எனக்கும்
காமவெறி உண்டு,
நாவிற்கு சுவை
கொடுக்கும்
உணவின் மீதுள்ள
உழைப்புக் காமம் எனக்கு,

வயிறு புடைத்துத் துடிக்கும்
பசிக்கு நஞ்சையா
கொடுக்கிறேன் நான்,
ஏன் இந்த சமுதாயத்தில்
கேட்பாரற்று
உலவுகிறேன் நான்?

காவு வாங்க விரும்பும்
எட்டு வழிச்சாலையா நான்?
இல்லை ஊதும்
தொப்பைக்கு சேவகன் நான்,

உழைத்து செழித்த பயிரை
பசிக்குப் படைத்தவனுக்கு
கிடைப்பது வாய்க்கரிசி மட்டுமே
என்பதை உணர்ந்தும்,
சந்ததிகள் செழித்து வாழ,
யாவருக்கும் தேனினும் உயர்ந்த தேவாமிர்தம் கொடுப்பவன்,

நிரந்தரமான ஊதியத்திற்கு
அடிமையாகும்
நஞ்சாமைகள் மத்தியில்,
உயிரையே உழவுக்கு
நிரந்தரமாக்கி
ஊதியம் பெரும்
கொடுங்கோலன் நான்,

காற்றுச் சீரமைப்பிக்குள்
குடிகொள்ளும்
கூமுட்டைகள் மத்தியில்,
ஆர்ப்பரித்து ஓடும்
வியர்வையைத் துடைக்க
கெதியற்றவன் நான்,

தொழில் நுட்பத்தில் தான் பார்
செழிக்குமென்பது மடமை,
விதையில் பயிர் செழித்து
ஊணுண்டு பலம் பெற
உலகமே செழிக்கும்,

உழவன் என்றொரு
இனமுண்டு,
மாடுபூட்டி மாய்ந்த
மதியற்றவன் என்றொரு
பேருண்டு அவனுக்கு,

அழுதோர் சிரிப்போம் இடுகாடுகளிலும்
சுடுகாடுகளிலும்!

செதுக்கிக் கொள்ளுங்கள்
உங்கள் இதயத்தில்
"பசிப்போர் மூளும்"
காலம் வெகு தொலைவினில் இல்லையென்று!

எழுதியவர் : தமிழினியன் (2-Jul-18, 11:01 pm)
Tanglish : uzhavan vali
பார்வை : 7235

மேலே