மரணித்துவிட்டேன்
தொலைந்துப்போன
தொலைதூர ஒற்றையடிப்
பாதையைத் தேடியதில் உயிர்பித்தநான்...
...
அடிவானம் சென்று
துள்ளிவிளையாடிய அருவிகளை நினைத்துப் பார்க்கையில் உயிர்பித்தநான்....
...
காற்றிலாடும்
தூக்கணாங் குருவிக்கூடுகளைக்
கண்டுப்
பிடிக்கையில் உயிர்பித்தநான்...
...
உச்சிவெயிலில்
உயிர்மீட்டிய மர நிழலில் உட்கார்ந்திருக்கையில் உயிர்பித்தநான்....
...
ஊரோர ஆலமரக்கிளையில்
ஊஞ்சலாடியப்
பொழுதில்
உயிர்பித்தநான்....
...
ஊரோர குளத்தில்
இருகரை நீந்திச்சென்ற
இளமைப் பருவத்தில் உயிர்பித்தநான் ....
...
அம்மிக்கல்லில் அரைத்த
வெஞ்சனத்தை அம்மாஊட்டிய காலங்களில் உயிர்பித்தநான்....
...
உரக்கச்சத்தமிட்டு
உறவுகளோடு கொண்டாடிய ஊர்த்
திருவிழாவில் உயிர்பித்தநான்....
...
பல்லுப்போன பாட்டியோடு
பல்லாங்குழி விளையாடி தோற்றுப்போன தருணத்தில் உயிர்பித்தநான்....
...
பச்சைப்புடவைப்போர்த்தி,
பனித்தூரலில் நனைந்து,
இளந்தென்றலை வீசிய இயற்கைத்தாயை இமைக்காமல்
தீண்டியப்
பொழுதில் உயிர்பித்தநான்....
...
நானாகச் சம்பாரித்து,
நான்காயிரமடி உயரத்தில்,
நாற்பதாவதடுக்கு கட்டிடத்தில்,
நான் வாங்கிய வீட்டில்
வந்து நிற்கும் நான்!! நான்காவது நிமிடத்தில் கனவில் கூட ஏனோ??
மரணித்துவிட்டேன்....