இனி அவள் இல்லத்தரசி

பாரதியை சபிக்கிறேன்!

ஏன் மூட்டினாய்
இவ் வேள்வித் தீயை?

கனன்று கொண்டிருக்கும்
எங்கள் ஏக்கங்களில்
ஏன் தெளித்தாய்
உன் சத்தியத்தை?

மறத்துப் போன
எங்கள் உடல்
என்ன தீங்கிழைத்தது உனக்கு?

சமையலறை தான்
சர்வமும் என்றால்
அங்கனமே மடிந்திருப்போமே!

கனவுகள் மட்டுமே
சாத்தியம் என்றால்
சளைக்காமல் கண்டிருப்போமே!

விலங்கினை உடைத்து
சிறகுகள் விரித்தால்
சிகரம் எட்டலாமென
பொய்யுரைத்தீரோ?

தத்திப் பறக்க முயலும்
சிட்டுக் குருவி
எப்படியும் ஒருநாள்
நத்தைபோல் ஓட்டுக்குள்
சுருண்டு விடப் போகிறதெனில்

ஏட்டுச் சுரைக்காயா
நீர் சமைத்த அறம்?

பெருங்கனவு பொசுங்கிவிட்ட
பேரதிர்ச்சியில்
புலம்புகிறேன் பேதை!

குட்டையில் மூழ்கிட்ட
அக்கினிக் குஞ்சொன்று
அவலக் குரலெழுப்ப
முயன்று தோற்கிறது!

மன்னித்து விடு
மௌனித்து விடுகிறேன்!

இனி அவள் இல்லத்தரசி!

எழுதியவர் : மது (5-Jul-18, 10:36 pm)
பார்வை : 305

மேலே