அவனும் நானும்-அத்தியாயம்-12

....அவனும் நானும்....

அத்தியாயம் : 12

அவளின் நினைவுகள் பின்நோக்கிச் செல்வதை உணர்ந்து கொண்டவன்,அவளது உணர்வுகளிற்கு மதிப்பளித்து அதற்கு மேல் எதுவும் பேசாது அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்..

"சரி அப்படியொரு சம்பவம் நடக்கும் போது நடக்கட்டும்..இப்போ நீ போய் கொஞ்ச நேரமாச்சும் தூங்கு..சரியா..??..."

"...ம்ம்..."

அவளது மனமும் அப்போது தனிமையை வேண்டிக் கொண்டதால்,அவளும் மறுபேச்சின்றியே உறங்குவதற்காய் அறையினுள் நுழைந்து கொண்டாள்..ஆனால் கட்டிலில் வந்து விழுந்தவளுக்கு நிகழ்காலம் மெது மெதுவாய் கண்களை விட்டு அகல,அவளின் கடந்தகாலம் அவளின் கண்முன்னே விரிந்தது...

அன்றோடு அக் கல்லூரிக்கும் அவளுக்குமான பந்தம் ஆரம்பித்து முழுதாக முப்பது நாட்கள் கழிந்திருந்தன...ஆரம்பத்தில் சௌமியோடு மட்டுமாகவே ஒட்டிக் கொண்டு திரிந்தவள்,அதன் பின் மெது மெதுவாய் அனைவரோடும் ஐக்கியமாகிக் கொண்டாள்...

ராக்கிங் அனைத்தும் முந்தைய நாளோடே முடிந்திருந்ததால்,அன்று அவளிற்கு மிகவும் பிடித்தமான நீல நிறச் சுடிதாரில் வந்திருந்தாள்...சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் அவளிற்கு மிகவுமே பிடித்தமான உடையினை அணிந்து கொண்டதால் அன்று வழமையை விடவுமே கொஞ்சம் சந்தோசமாக இருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்...ஆனால் அவளின் அந்த ஆனந்தம்தான் நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கவில்லை....

கடந்த இரண்டு நாட்களாய் மழையின் தாக்கம் அதிகமாய் இருந்ததால் கல்லூரியின் சாலைகளில் அங்கங்கே மழைநீரும் தேங்கியே காணப்பட்டது...அவள் என்னதான் அதிலிருந்து கவனாய் ஒதுங்கியே வந்தாலும்,கடவுள் அவளிற்கு அன்று மழைநீரால் அபிசேகம் செய்வதென்று முடிவெடுத்துவிட்டார் போலும்...அவளைக் கடந்து சென்ற வேகமான பைக் அவள் மீது மொத்தமாய் மழைநீரோடு இணைத்து சேற்றையும் வாரியிறைக்க,அவளின் நீலநிறச் சுடிதார் ஒரு விநாடிக்குள்ளாகவே உருமாறிப் போனது...

ஆனால் சில விடயங்கள் நடப்பதற்குப் பின்னால் ஏதாவதொரு காரணம் இருக்கும் என்பது போல்,அவளிற்கும் அவனுக்குமான முதல் சந்திப்பு நிகழ்வதற்கும் அதுவே காரணமாகவும் அமைந்தது...

கீர்த்தனாவோ தன் சுடிதாரின் கோலத்தைக் கண்டு கலங்கி நிற்க,சௌமியோ அவளின் நிலை கண்டு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிவிட்டாள்...

"ஹா...ஹா...இப்போதான்டி உன் சுடிதார் பார்க்கவே ரொம்ப அழகாய் இருக்கு...அந்த பைக்காரனுக்குத்தான் நன்றி சொல்லனும்.."

"சொல்லுவடி..சொல்லுவ...இப்போ என் சுடிதாரில் இருக்குற சேற்றை உன் சுடிதாருக்குப் பூசினேன்னு வையு...அப்போ சொல்லுவ..."

"அடிப்பாவி...நீ செஞ்சாலும் செய்வ..."என்றவாறே அத்தோடே தன் சிரிப்பினை நிறுத்திக் கொண்டவள்,

"சரி சரி வா...சீக்கிரமா போய் கழுவலாம்..."

"ம்ம்...அந்த பைக்காரன் மட்டும் என் கையில கிடைக்கட்டும்...அப்போ இருக்கு அவனுக்கு...அவன் சேற்றை அடிச்சிட்டுப் போனதக் கூட மன்னிச்சிடுவேன்...ஆனால் அதுக்கப்புறம் திரும்பி நக்கலாய் ஒரு சிரிப்பு சிரிச்சான் பாரு அதைத்தான் என்னால மன்னிக்கவே முடியாது..."

"அது சரி...இவ்வளவு பேருக்குள்ள நீ அவனைத் தேடிக் கண்டுபிடிச்சு திட்டப் போறியாக்கும்..."

"அவன் முகத்தை என்னவோ தெளிவாய் பார்க்க விடாமல் அந்தக் ஹெல்மட் காப்பாத்திடிச்சு...ஆனால் அவனோட பைக் நம்பரைத்தான் நான் தெட்டத் தெளிவாய் பார்த்து வைச்சிருக்கேனே...ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்கிட்ட மாட்டாமலா போயிடுவான்..."

"அதுசரி...நீ ஒரு முடிவோடதான் இருக்க போல...ஏதோ தெரியாமல் சிரிச்சு வைச்சிட்டான்...அதை அப்படியே விடுவியா..??..அதைவிட்டிட்டு அவனைத் தேடிப்பிடிச்சு திட்டப்போறாளாம்..

"எல்லாம் தெரிஞ்சுதான் நக்கலாய் சிரிச்சிட்டுப் போனான்...ஆமா நீ எனக்கு ப்ரண்டா...இல்லை அவனுக்கு ப்ரண்டா..??..."

"அம்மா தாயே..ஏதோ தெரியாமல் அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டேன்...ஆளைவிடு..."என்று அவள் அழ மாட்டாத குறையாய் கையெடுத்துக் கும்பிடவும் அப்போதைக்கு சமாதானமாகிக் கொண்டாள் கீர்த்தனா...

கதைத்தவாறே நீர்க்குழாய்கள் பூட்டப்பட்டிருந்த பகுதியினை நெருங்கி விட்டிருந்தவர்கள்,அப்போதுதான் அதில் தொங்கவிடப்பட்டிருந்த போர்ட்டைக் கவனித்தார்கள்...

"ஹேய் என்னடி இது தண்ணீர் இரண்டு நாட்களிற்கு வராதின்னு போட்டிருக்கு...இப்போ என்னடி பண்ணுற...??.."

"கடவுளே...ஏன் இப்படி எனக்கு மட்டும் சோதனைக்கு மேல சோதனையாய் கொடுக்குற..."

"வேற வழியில்லை...உன்கிட்டயிருக்கிற தண்ணியில அட்ஜெஸ்ட் பண்ணி கழுவு...அப்புறம் லன்ஞ் டைமுக்கு வீட்டுக்குப் போய் டிரெஸ்ஸை மாத்திட்டு வந்திடலாம்..."

கொண்டு வந்த தண்ணீரில் இயன்றவரைக்கும் கறையினை அகற்றிக் கொண்டிருந்தவளின் முன்னால்,தண்ணீர்ப் போத்தலை நீட்டியவாறு அவளுக்குத் தன் முதல் அறிமுகத்தைக் கொடுத்துக் கொண்டான் அவன்...

"இதையும் வாங்கிக்கோங்க...உங்ககிட்டயிருக்குற தண்ணீர் பத்தாதுன்னு நினைக்குறேன்..."

உண்மையிலேயே அவளுக்கு அப்போது இன்னும் கொஞ்சம் நீர் தேவைப்பட்டதால் நன்றி கூறி அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்...

"யாருடி அவன்...??.."

"எனக்கென்ன தெரியும்...நானே அவனை இன்னைக்குத்தான் பார்க்குறேன்..."

"ம்ம்...யாராய் இருந்தால் என்ன..பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டாய் இருக்கான் ல..."

"இப்போ இது ரொம்ப முக்கியம்...கிளாஸ்க்கு டைமாச்சு...வா போகலாம்..."என்று அவளை இழுத்துக் கொண்டு விரிவுரை மண்டபத்தை நோக்கி விரைந்தாள் அவள்...

விரிவுரைகள் முடிந்து லன்ஞ் டைம் வந்ததுமே இருவருமாய் வீட்டிற்குச் செல்லத் தயாராகிவிட்டனர்...

"ஹேய் நமக்கு ஒரு மணித்தியாலம்தான் டைம் இருக்கு...அதுக்குள்ள போயிட்டு வந்திடனும்.."

"அதெல்லாம் சீக்கிரமாவே வந்திடலாம்...வீடு பக்கம்தானே..."

அவர்கள் இருவரும் கதைத்தவாறே வாசலை நோக்கி வரவும்,கீர்த்தனாவின் பார்வைக்குள் காலையில் சேற்றை வாரியிறைத்த அந்த பைக்கும்,பைக்கிற்குச் சொந்தமானவனும் சிக்கிக் கொண்டார்கள்...

"என்னைக்காச்சும் ஒருநாள் மாட்டுவான்னு நினைச்சேன்...பரவாயில்லையே பயபுள்ள இன்னைக்கே என்கிட்ட மாட்டிக்கிட்டானே.."

"யாருடி உன்கிட்ட மாட்டிக்கிட்டா இப்போ..??.."

"வேற யாரு..எல்லாம் காலையிலேயே எனக்கு அபிசேகம் பண்ணிட்டு சிரிச்சு வைச்சவன்தான்..."

"எங்கடி..??.."

"அதோ அங்க பாரு...பெரிய துரை மாதிரி நிற்குறதை...இன்னைக்கு அவனை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டேன்.."என்றவாறே அவள் அவனை நோக்கிச் செல்லவும்,அவளின் கரத்தினைப் பிடித்துத் தடுத்துக் கொண்டாள் சௌமி...

"ஹேய் கீர்த்து...நமக்கெதுக்குடி இந்த வம்பெல்லாம்..பேசாமல் வா..வீட்டுக்குப் போய் டிரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்திடலாம்.."

"அதெல்லாம் முடியாது...அவனை நாலு வார்த்தை திட்டினால்தான் என் மனசு ஆறும்.."என்றவாறே சௌமியிடமிருந்து தன் கையினை விடுவித்துக் கொண்டவள்,வேகமாய் சென்று அவன் பின்னே நின்று குரல் கொடுத்தாள்...

"ஹலோ மிஸ்டர்..."

அவளிற்கு முதுகு காட்டியவாறு நின்று கொண்டிருந்தவன்,அவளது கோபமான அழைப்பில் அவள் முகம் நோக்கித் திரும்பினான்...

"யெஸ்...என்னையா கூப்பிட்டீங்க..??.."

"ஏன் இங்க நீங்க மட்டும்தானே இருக்கீங்க..??..இல்லைன்னா வேற யாரும் இருக்காங்களா உங்க பக்கத்தில...??.."என்று அவள் நக்கலாய் கேட்டவாறே அவன் பின்னே யாரையோ தேடுவது போல் சைகை செய்யவும்,அவளது செயலைக் கண்டு லேசாகப் புன்னகைத்துக் கொண்டவன்,

"சரிங்க சரி என்னைத்தான் கூப்பிட்டீங்க...ஆனால் எதுக்கு இவ்வளவு கோபம்னு நான் தெரிஞ்சுக்கலாமோ...??.."

"நீங்க பண்ண வேலைக்கு கோபப்படாமல்..வேற என்ன பண்ணுவாங்களாம்...??.."

அவள் எதைச் சொல்கிறாள் என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை...நண்பனின் வேண்டுகோளிற்கிணங்க அவனது பைக்கிற்கு காவலாக நின்றவனிற்கு காலையில் நடந்த விடயம் எதுவும் தெரிந்திருக்கவும் வாய்பில்லைதானே...ஆனாலும் அவளோடு வார்த்தையாடுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததால்,அதை அப்படியே தொடர்ந்தான்...

"அப்படி நான் என்னதாங்க பண்ணேன்..??.."

"இப்படி நீங்க குழந்தை மாதிரி முகத்தை வைச்சுக்கிட்டு கேட்டாப்போல,நாங்க விட்டிடுவோமா..??.."

"இதென்னங்க வம்பா போச்சு...சும்மா நின்னுக்கிட்டிருந்தவனை பிடிச்சு காரணமேயில்லாமல் திட்டினால் நான் என்னதாங்க நினைச்சுக்கிறது..??.."

"ஆமா எங்களுக்கு வேற வேலையில்லை பாருங்க...சும்மா உங்களைப் பிடிச்சுத் திட்டுறதுக்கு...காலையில சேற்றை என் மேல வாரியிறைச்சிட்டு நக்கலாய் சிரிச்சது போதாதின்னு,இப்போ ஒன்னும் தெரியாத பச்சக் குழந்தை மாதிரி பேசுறதை பாரு..."

அவனுக்கு அப்போதுதான் அனைத்துமே புரிந்து போனது...அதை அவளிற்கும் புரிய வைத்துவிடும் நோக்கில் அவன் முயல,அவளோ அவனை அதற்கு மேல் ஓர் வார்த்தை கூடப் பேச விடாது திட்டித் தீர்த்துக் கொண்டாள்...திட்டிய அவளிற்கு மூச்சு வாங்கியதோ இல்லையோ,அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனிற்கும்,சௌமிக்கும் நன்றாகவே மூச்சு வாங்கியது...

"இங்க பாருங்க மிஸ்டர்...ஏதோ நானாய் இருக்கப் போய் இதோடயே விட்டிடுறேன்...இனிமேலாச்சும் ரோட்டில போறவங்களையும் கொஞ்சம் கவனிச்சு வண்டியை ஓட்டுங்க...புரிஞ்சுதா..??.."

"ஆ..நல்லாவே புரிஞ்சுது மேடம்..."என்று அவன் பவ்யமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருக்கவும்,அவ் பைக்கிற்குச் சொந்தக்காரனான அசோக் வந்து சேர்ந்தான்....

"டேய் கிருஷ்...ரொம்ப தேங்ஸ்டா பைக்கை பார்த்துக்கிட்டதுக்கு...அப்படியே ஈவ்வினிங் லெக்சேர்ஸ்க்கு நான் வரமாட்டேன்..எனக்கான சைனையும் நீயே வைச்சிடு...பாய்டா..."என்றவாறே அவன் பைக்கில் வேகமெடுத்துச் செல்லவும்,சென்றவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா...

"கீர்த்து...இப்படிச் சொதப்பிட்டியேடி..."என்று அவள் தன்னைத்தானே நொந்து கொண்டு மெதுவாய் அவனது முகத்தினை நோக்கினாள்... அவனோ இதுவரை நேரமும் அடக்கி வைத்திருந்த சிரிப்பினை மொத்தமாய் முகத்தினில் பூசிக் கொண்டவாறு நின்றான்...

"அப்படின்னா அது உங்க பைக் இல்லையா..??.."

"அப்பாடா இப்போயாச்சும் இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்டீங்களே..??.."

"ரொம்ப சொரி...நீங்கதான் காலையில அப்படிப் பண்ணதின்னு நினைச்சுக்கிட்டு...ரியலி ரியலி சொரி...தப்பா நினைக்காதீங்க...பிளீஸ்..."

" நீங்க மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமேயில்லை...என் ப்ரண்ட் பண்ணதும் தப்புத்தான்...அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன்...அப்புறம் அவனுக்கான திட்டு எல்லாத்தையும்தான் இப்போ நானே வாங்கிக்கிட்டேனே...இனி மறுபடியும் அவனைத் திட்டமாட்டீங்க ல..??.."

"ஹைய்யோ இல்லை...இனி நான் யாரையுமே திட்ட மாட்டேன்ங்க...ப்ரோமிஸ்..."

"ஹா...ஹா...ம்ம்..நீங்க இரண்டு பேரும் ப்ர்ஸ்ட் இயரா..??.."

"ஆமா...நீங்க..??.."

"நான் பைனல் இயர்...சிவில் இஞ்சினியரிங்...நீங்க எந்த டிபார்ட்மென்ட்..??.."

"கொம்பியூட்டர் இஞ்சினியரிங்..."

"ஹ்ம்...அப்புறம் என்னோட பெயர் கிருஷ்ணன்...இங்க எல்லோருமே கிருஷ்னு கூப்பிடுவாங்க..நீங்களும் என்னை அப்படியே கூப்பிடலாம்...சரியா..??"

"ம்ம் சரி.."

மோதலில் ஆரம்பித்த அவர்களது உறவு,இறுதியில் நட்புக்கான தொடக்கப்புள்ளியாய் மாறிக் கொள்ள அவ் மூவரும் ஒருவரிடத்தில் ஒருவருக்கான அறிமுகப்படலத்தோடு விடைபெற்றுக் கொண்டார்கள்...

"ஏதோ புயலடிச்சு ஓய்ந்த மாதிரி இருக்கு...நீ அவரைத் திட்டின திட்டில எனக்கே மூச்சு வாங்கிச்சின்னா பாறேன்..."

"ஆனாலும் அவர் ஏதோ நல்லவராய் இருக்கப் போய் நீ தப்பிச்ச...இதுவே வேற ஒருத்தரா இருந்திருந்தால் நீ பேசின பேச்சுக்கு உன்னை உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பாங்க..."

"உண்மைதான்...என்னோட அப்பாக்கப்புறம் இப்படியொரு கூலான பேர்சனை நான் இப்போதான்டி முதற்தடவையாய் பார்க்குறேன்..."

"காலையில ஒரு ஸ்மார்ட்டான பேர்சனோட சந்திப்பு...இப்போ ஒரு கூலான பேர்சனோட நட்பு..."என்று சௌமி சொல்லிக் கொண்டிருக்கவுமே அந்த ஸ்மார்ட்டான பேர்சன் அவர்களுக்கு எதிராகவே தரிசனம் தந்தான்...

கதைத்துக் கொண்டே வந்ததில் சௌமி அவனைக் கவனிக்கவில்லை...ஆனால் கீர்த்தனாவின் கண்கள் அவனைக் கண்டு கொண்டன...அதே போல் அவள் விழிகள் கவனித்துக் கொண்டதை அவனது விழிகளும் கள்ளமாய் கண்டு கொண்டான்....


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (6-Jul-18, 1:12 am)
பார்வை : 675

மேலே