உயிராயுதம் - பெட்னா 2018 விழா மலரில் வெளிவந்த கதை
காலம் : கி.பி பதினெட்டாம் நூற்றாண்டு களம்: சிவகங்கை
சிவகங்கை சீமையை ஆண்டு வந்த மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேய அரசாங்கத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார் . கணவனின் கொலைக்கு பழி தீர்க்கப் புறப்பட்ட வேலு நாச்சியார் கடுமையான போரில் தோற்க்கடிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் தலை மறைவு வாழ்கை வாழ்ந்து கொண்டிருந்தார் .
இங்குதான் காலம் வேலு நாச்சியாரையும் , அவர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குயிலியையும் இணைக்கிறது. பதினெட்டு அகவை மட்டுமே கொண்ட குயிலிக்கு வேலு நாச்சியார் மேல் மிகுந்த மரியாதை.
வேலு நாச்சியாரின் சிலம்பு வாத்தியாராக இருந்த வெற்றிவேல் , அவர் ஆங்கிலேயருக்கு உளவாளி என்று
அவர் எழுதிய கடிதத்தின் மூலம் அறிந்த குயிலி அவரை கொன்று தன் முத்திரையை அழுத்தமாக வரலாற்றில் பதிக்க ஆரம்பிக்கிறார் .
தன் மீது பற்று கொண்டு கொலையும் செய்யத்துணிந்த குயிலியை ராணி தன் மெய்க்காப்பாளராக நியமித்துக் கொண்டார் .
தனது பணியில் விழிப்புடன் இருந்த குயிலி சிறிது காலத்தில் ராணி உறங்கி கொண்டிருக்கும் போது நடைபெற்ற கொலை முயற்ச்சியை வெற்றிகரமாக முறியடிப்பதின் மூலம் பெண்களை மட்டுமே கொண்டு இயங்கும் உடையாள் படைப்பிரிவுக்கு தளபதியாகவும் நியமிக்கப்படுகிறார் .
திப்பு சுல்தான் மூலமாக ஆயுதங்கள் வந்து சேர 1780 களில் பழிதீர்க்கப் புறப்பட்டது வேலு நாச்சியாரின் படை . மூன்றாக பிரிக்கப்பட்ட அவரது படைக்கு தலைமை தாங்கியவர்கள் பெரிய மருது , அவரது தம்பி சின்ன மருது , ராணியின் பெண்கள் படை தளபதி குயிலி . மதுரை கோச்சடையில் ஆரம்பித்த முதல் போரிலேயே அவரின் படை மகத்தான வெற்றி பெறுகிறது .
தொடர்ந்து ஆங்கிலேயர் படையை , காளையார்கோயில் போரிலும் வெற்றிகொண்டார் .
இறுதி போர் சிவகங்கையில் . கோட்டையை கைப்பற்றுவதில் இருந்தது வெற்றி .
வேலு நாச்சியாருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது சிவகங்கை கோட்டையில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் . வெற்றி அல்லது வீர மரணம் என்று அவர் படை போரிட்டாலும் , குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பின்னதையே தரும் என்ற நிலை.
போர் வியூகங்கள் வகுக்கப் பட்டன . திருப்பத்தூரை தோற்கடித்தது சின்ன மருதுவின் படை சிவகங்கை நோக்கி வருவது , இன்னொரு படை பெரிய மருதுவின் தலைமையில் அரண்மனையின் வெளிப்புறம் தாக்குவது . எனினும் கோட்டைக்குள் எப்படிப் போவது ? அதற்கான வழியை மாறுவேடமிற்று உளவறிந்து சொன்னார் குயிலி .
ஆரம்பம் ஆகிற்று இறுதிப்போர் . கோட்டையில் இருந்த அம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவை பார்ப்பதற்கு பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் . அவர்களுடன் பூச்சரங்களுக்குள் வாளினை வைத்து ஊடேறியது ராணியின் பெண்கள் படை .
.ஆம் சுதந்திர போராட்டத்தின் முதல் தற்கொலை போராளி ஒரு பெண் . குயிலி போன்ற முகம் அறியாதவர்கள் தங்களது உயிரை ஆயுதமாக்கி பெற்றுக்கொடுத்ததுதான் சுதந்திர இந்தியா .
எப்பொழுதும் வெற்றி பெற்றவர்களின் பார்வையில் இருந்து தான் சரித்திரம் எழுதப்பட்டுள்ளது . குயிலியைப் பற்றி நம்ம தெரிந்துகொள்ள விரிவான வரலாற்று நூல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை , 2010 முதல்தான் அங்கங்கே எழுதப்பட்ட கட்டுரைகள் மூலம் அவர் பார்வைக்கு வருகிறார் . அதற்கு முன் நாட்டுப்புற பாடல்களில் மட்டுமே அவர் வரலாறு அறியப்படுகிறது . மேலே எழுதியது கூட இணையத்தில் இருந்ததை திரட்டி எழுதியதே தவிர விரிவான , ஆழமான வரலாறு இல்லை .
யாரும் செய்ய துணியாத அருஞ்செயல்களை செய்தாலும் ஏன் குயிலியின் வீரமும் , தியாகமும் பாடமாகாமல் அறியப்படாமல் போயிற்று ?
சோழ சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தினாலும் ஏன் ராஜேந்திரனை விட ராஜராஜன் கொண்டாடப்படுகிறார் ?
கி பி 3 ம் நூற்றாண்டு முதல் , கி பி 6 ம் நூற்றாண்டு வரை , திருக்குறள் முதலான செறிவான இலக்கியங்களை தந்த ஒரு காலகட்டத்தை ஏன் இருண்ட காலம் என்று மட்டுமே படிக்கிறோம் ?
இந்தக் கேள்விகளுக்கான பதிலில் உள்ளது இன்னமும் எழுதப்படாத தமிழகத்தின் சரித்திரம் .