திகிலும் ருசிக்கும் 7

திகிலும் ருசிக்கும் 7

அந்தரத்தில் பூட்டு தொங்குவதை பார்த்ததும் பயத்தில் பின்னோக்கி நகரவும், பதற்றத்தில் கால் வழுக்கி மல்லாக்க விழவும் சரியாக இருந்தது...

அதற்குமேல் தலையில் லேசாக அடிபட்டிருக்கும் போல, மயங்கிவிட்டேன்...

கண் திறந்து பார்க்கையில் என் தலையில் கைவைத்தபடி கனகா உட்கார்ந்திருந்தாள்..கனகாவின் முகம் பார்த்த பின் தான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது, என் கனகா வந்துவிட்டாள் இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வந்தது...

"கனகா, வந்துட்டியா, நீ இல்லாம இங்க என்னால நிம்மதியா இருக்க முடியல..உன் முகம் பார்த்ததும் தான் மனசுக்கு இதமா இருக்கு, என்ன விட்டு எங்கயும் போயிட மாட்டியே"

இல்லை என்று மெதுவாக தலையசைத்தபடி சிரித்தாள்...

"ஆமா, இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு நினச்சேன், இன்னைக்கே வந்துட்ட, என்ன பார்க்காம இருக்க முடியலையா"

ஆம் என்று தலையசைத்தபடி மறுபடியும் சிரித்தாள்...

"என்ன கனகா என்ன கேட்டாலும் சிரிக்கிற, இன்னைக்கு என்னலாம் நடந்துச்சு தெரியுமா? இந்த வீட்ல மோகினி இருக்கு"

சொல்லிவிட்டு அவளின் முகத்தை பார்த்தேன், மெல்ல என் தலையிலிருந்து கையை எடுத்துவிட்டு எழுந்து சற்று நகர்ந்து நின்றாள்...

"என்ன கனகா, நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு எழுந்துட்டியே"

இப்பொழுதும் அவள் உதட்டில் படிந்திருந்த புன்னகை மாறவில்லை..என் கனகா இப்படியெல்லாம் மௌனம் கொண்டவள் அல்லவே, காதை பிளக்கும்படி பேசி தான் பார்த்திருக்கிறேன், என்ன ஆயிற்று இன்று என்று குழம்பியபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்...

மெல்ல அவள் மேல் ஒரு கரும்படலம் உண்டாயிற்று...

ஆழ்மனம் ஒரு எச்சரிகைமணியை அடித்தது, ஏதோ ஓன்று நிகழப்போகிறது, பார்த்து பதுசாக இருந்துகொள் என்று...

அதே போல என் அன்பான கனகா மெல்ல மெல்ல மறைந்து அழகான மோகினி தோன்ற ஆரம்பித்தாள்...

"மோகினி" சற்று அதிர்ச்சி கலந்த குரலில் அழுத்தமாக கூறினேன்...

"மோகினியே தான்"

காலையில் இருந்து மோகினி என்னைப்படுத்தி எடுத்ததில் மனமும் உடலும் சோர்ந்து போய் இருந்தது, ஒருவன் ஒன்றையே எத்தனை முறை பார்த்து பயந்துபோவான், மோகினியின் மாயாஜாலத்தில் சலித்துப்போன மனம் பொறுமை இழந்து கொதிக்க ஆரம்பித்தது..

"உனக்கு என்ன தான் வேணும், எதுக்கு என்ன இப்படி இம்சிக்கற, உன்னால என் நிம்மதி போச்சி, உன்னோட விளையாட்டை இத்தோட முடிச்சிக்கோ, இல்லைனா விளையாடி முடிச்சிட்டு சொல்லு, நான் வரேன் என்றபடி கிளம்பினேன்... "

"நில்லுங்க , நீங்க என்னைவிட்டு எங்கயும் போகமுடியாது,"

"போனா என்ன பண்ணுவ"

"போய்தான் பாருங்களேன்"

கொஞ்சம் மனதிற்கு திகிலாகத்தான் இருந்தது, சவால்விடுவது ஒன்றும் பெரிதல்ல, ஆனால் யாரிடம் விடுகிறோம் என்பதில் தான் சகலமும் அடங்கியிருக்கிறது...இந்த மோகினி எதையும் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை, ஒருவேளை நான்பாட்டுக்கு ஏதாவது முயற்சி செய்ய போய் அது தன் சக்தியால் என்னை ஏதாவது செய்துவிட்டால்.... வீரியத்தை விட காரியம் தான் முக்கியம், மோகினியிடம் மோத கூடாது என்பதில் தெளிவாகி சூழ்நிலையை மாற்றினேன்...
"நான் எதுக்கு போகப்போறேன், எனக்கு தான் உன்கூட இருக்க பிடிச்சிருக்கே"

இதை சொன்னதும் தான் தாமதம் மோகினியின் கண்கள் மிளிர ஆரம்பித்தது, அதன் மனம் கூலாகிப்போனதிற்கு சாட்சியாய் சற்று தள்ளியிருந்த என் உடலிலும் ஜில்லென்று ஈரப்பதம் உணர்ந்தேன்...

ஆஹா, சரியாக தான் ஆரம்பித்திருக்கிறோம் போல, இதை பிடித்துக்கொண்டே அடுத்த வார்த்தைகளையும் நகர்த்தினால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியது...

"என்ன மோகினி நம்பிக்கை வரலையா, இத்தனை நேரமா உன்ன பிடிக்காததை போல நான் விளையாடினேன், உன் அழகு, உன் வடிவம் எல்லாம் என்னை ஏதோ செஞ்சுட்டுது, உன்னை பார்த்த மாத்திரத்திலேயே நான் உன் அழகுல விழுந்துட்டேன், ஆனாலும் என்னவோ உன்னோட விளையாடிப்பார்க்க தோணுச்சு, அதான் நீ இங்க இருக்கறதுல விருப்பம் இல்லனு சொல்லிட்டேன்...நீயும் மாயமா மறைஞ்சு போய்ட்ட, ஆனா என் மனசு உன்ன எவ்ளோ தேடினுச்சி தெரியுமா, இனி இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் வேண்டாம், நீ விருந்தாளியா இங்க தாராளமா தங்கலாம், நாம பேசிக்கலாம், பழகிக்கலாம், என்ன உனக்கு சந்தோசம் தானே...

மோகினியின் அழகில் விழுந்த உண்மையெல்லாம் அச்சுபிசகாமல் சொல்லிமுடித்தேன், மோகினியின் அழகை நான் மெச்சிக்கொண்டதில் மோகினியும் மயங்கிவிட்டது..இந்த பெண்கள் பேயானாலும் அவர்களை புகழ்ந்தால் மதிமயங்கிவிடுவார்கள் போல..

என் வார்த்தைகளில் சகஜமான மோகினியிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது, மோகினியின் உடல் சமிக்னையை பார்த்தால் மோகினி என்னிடம் தன் கடந்தகால பின்புலத்தை சொல்ல விரும்புவதை போல் தோன்றவே மோகினிக்கும் ஏதாவதொரு கதை இருக்கலாம், அதுவே தானாக கூறும்வரை பொறுமையாக இருக்கலாமென காத்திருந்தேன்...

எழுதியவர் : ராணிகோவிந் (9-Jul-18, 1:25 pm)
பார்வை : 476

மேலே