மெர்சி

நான்காம் வகுப்பு சி பிரிவு,
கிறிஸ்த்துவ பள்ளிக்கூடம்,
பெரிய பள்ளி.

காலையில் அப்பாவின்
பஜாஜ் சுகூடரில் ஏறி - ஒரு
தெரு முனையில் இறக்கிடுவார்.

பள்ளி பேருந்து எங்களை,
ஏற்றிக்கொண்டு பள்ளியில்
விட்டு விடும்.

ஏறிய அடுத்த நொடி,
வேய் வேயென்று கூச்சலிட
ஆரம்பிபோம்.

மார்ட்டின் அண்ணா செல்லமாக,
கத்தாதீங்க கண்ணுகளா,
கத்தாதீங்கன்னு சொல்லிகிட்டே
வருவார்.

சில சமயம்,
நாங்கள் அமைதியாய் இருந்தும்,
அவரையும் அறியாமல்
கத்தாதீங்கன்னு கத்துவார்.
அதை கேட்ட நாங்கள்
கொல்லென சிரிப்போம்.


முதல் மூன்று வரிசைகள்
டீச்சர்களுக்கு.
மற்ற அனைத்து இருக்கைகளும்
மாணவர்களும் மாணவிகளும்
அமர்வதற்கென்று ஒதுக்கி இருப்பர்.

வெள்ளை சட்டையும், காக்கி டிரௌசர்,
கொக்கி கிளிப் நீல டை,
எலாஸ்டிக் பெல்ட்,
கருப்பு ஷூ, நேவி ப்ளூ சாக்ஸ்.

மாணவியருக்கு வெள்ளை சட்டையும்,
நீல நிற பெட்டிகோட்டும்,
அதே நிற டையும், பெல்ட்டும் ஷூ
சாக்ஸ் போட்டிருப்பர்.

சில சமயம் கூச்சல் அதிகமானால்,
மார்ட்டின் அண்ணா,
பசங்களையும் பொண்ணுகளையும்,
சேர்ந்து அமரச் செய்வார்.
நாங்கள் பேசுவது குறைந்து,
பேருந்தே உறைந்து போய்விடும்.

இப்படியாக சென்று கொண்டிருந்த- ஒரு நாள்
காலையில் ரேடியோவில்,
"கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே
மானே" என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

அப்பா வண்டி துடைத்துக்கொண்டிருந்தார்,
நான் கிளம்பி சோபாவில்
அமர்த்திருதேன்.
பாட்டு முடியவும்,
அப்பா வண்டி எடுக்கவும்
சரியாக இருந்தது.

தெரு முனை வந்து இறுக்கி விட்டார்,
ரெண்டு ரூபாய், சட்டை மேல் பாக்கெட்டில்
வைத்து விட்டு, டாடா சொல்லி கிளம்பினார்.

என் அருகில் பிலோமினா மிஸ் நிற்கிறார்,
ஏதோ ஒரு மாதிரி இருக்க,
நான் தள்ளி நின்றேன்.

வல புறம், எனக்கு பிடிக்காத சங்கர்
ஒட்டி வந்து நின்றான்.
நான் திரும்பவும், இடப்புறம் தள்ளி,
மிஸ் அருகே நின்றேன்.

மூக்கு துளைக்குள் ஏதோ
என்னையும் அறியாமல் சென்று
மூளை சலவை செய்கிறது.

அண்ணாந்து பார்க்கிறேன்,
இரண்டு சர, மலர்ந்த மல்லிகை பூ,
பின்னலிடாத தலைமுடியில்,
சொருகி இருந்தார் - பிலோமினா மிஸ்.

அலாதியான வாசம்,
என் வயிறை பிரட்டியது.

பீம் பீம் மென பேருந்து சத்தமிட்டு
வந்து நின்றது.

வெள்ளிக்கிழமை,
அனைவரும் ஏக உற்சாகத்தில் அமர்ந்திருந்தனர்.
அன்றிரவு ஒளியும் ஒலியும்,
சனி கிழமை ஹி மேனும், ஹிந்தி படமும்,
ஞாயிறு அன்று ராமாயணமும், தமிழ் படமும்,
பார்க்கும் குஷியில் இருந்தனர்.

எனக்கு மட்டும்,
ஏதோ புரியாத கவலை.

பேருந்து கிளம்பியது.
வேய் வெவென கத்த ஆரம்பிக்க,
மார்ட்டின் அண்ணா,
பசங்களையும், பெண்பிள்ளைகளையும்,
மாற்றி அமர வைத்தார்.

என் அருகில்,
மெர்சி அமர்ந்தாள்,

திரு திருவென
நானும் விழிக்கிறேன்,
அவளும் விழிக்கிறாள்.

அமைதியாய் செல்கிறது.
மீண்டும் வயிறு பிரட்டுகிறது,
சன்னல் பக்கம் இருந்து தலையை
மெர்சி பக்கம் திருப்பினேன்.

அவள் இருக்கையில் கையில்
பென்சில் பாக்ஸ்சை திறந்தபடி ஏந்தி இருந்தாள்,
அதில் மூன்று புதிய வெள்ளை நிற ரப்பர்கள்.

ஒவொன்றாய் எடுத்து,
எடுத்து மூக்கில் வைத்து நுகர் கிறாள்,

ஒவ்வொரு நுகர்வுக்கும் - நடுவில்
ஒரு சிரிப்பும், ஒரு சிணுங்கலும்.

அதை பார்த்து கொண்டே இருக்கிறேன்.
திடீரென்று என்னையும் அறியாமல்
கண்ணீர் வர, அழ ஆரம்பித்தேன்.

மெர்சி என்னை பார்த்து, பயந்து படி,
என்ன ஆச்சு என்றாள் ?
எதுவும் சொல்லத் தெரியாமல்,
வாயில் கைவைத்து அழுகிறேன்.

ஏதோ புரிந்து கொண்டதுபோல்,
என் கையை வாயிலிருந்து எடுத்து விட்டு,
அவள் கைகளை வாயில் பொத்தி,
மறுகையில் வெள்ளை நிற ரப்பரை என்
மூக்கில் வைத்தாள்.

வரும் கண்ணீர் அளவு அதிகமாகிறது,
வாய் ஏனோ சிரிக்கிறது,
காலையில் கேட்ட பாட்டு
மூளையில் ஒலிக்கிறது.

ஒவ்வொரு மல்லிகை மணம்வீசும்
ரப்பரை மாறி மாறி மூக்கில் வைக்கிறாள்,
பேருந்து சன்னல் வழியே
கோடை காற்று வீசுகிறது.

மெர்சியும் சிரிக்கிறாள்,
நானும் சிரிக்கிறேன்.

மார்ட்டின் அண்ணா,
கத்தாதீங்க கண்ணுகளா,
கத்தாதீங்கன்னு சொல்ல கேட்டு,
நாங்கள் சிரிப்பதை
நிறுத்திக்கொண்டோம்!!!!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (15-Jul-18, 2:21 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
Tanglish : Mercy
பார்வை : 252

மேலே