மனகடல்
கண்சிமிட்டி, கண் இமைக்கும் நொடியில்
கரைந்தே சென்றாளோ கன்னி அவள்.
மூழ்கி நீந்தி மூச்சு திணறி தேடுகிறேன்,
என் மனம் எனும் கடலில்.
அலைப்பாயும் என் மனகடலில்.
ஏதேதோ சிந்தனைகளில்
மறந்து போகிற
வரிகளை எல்லாம்
தேடி தேடியே மூழ்கிப்போகிறேன்.
நீந்தி பழக்கமில்லாத கடலதில்
மூச்சு காற்றுகள் வட்டமாய் செல்ல,
விளையாடுவேனோ அதனோடு
நானும் சிறுப்பிள்ளையாய்.
கரையில் நின்றபடியே,
சிப்பிக்கு ஆசைப்படும் சிறுவனும் நானே.
தூண்டிலில் சிக்கி தவிக்கிற
சிறு உயிரும் நானே.
பசியுடனே வட்டமாய் பறந்திடும்,
பருந்தும் நானே.
பார்வைக்கு எட்டா தூரம்
அந்த கன்னியும் நீந்திட,
பார்வைகள் இழந்து
தடுமாறி நானும்
மீண்டும் கடலிலே.
அலைபாயும் என் மனகடலிலே.
நிந்தவோ, பறக்கவோ?
தெளிவில்லாத நானும்,
தெளிவாய் தேடுகிறேன்
உறக்கம் அடைக்கப்பட்ட
பாட்டில்களை.
போதும், அடுத்த பாட்டில் வரை
இது தங்கும்.