சாதிகள் நிறைந்த வீதியில்

துளிரா அரும்பிதழில் சுனை கூடிய தேனூர
துல்லியமாக கணக்கிட்டு பசியாற்ற வந்த சில வண்டுகளில்...

மலராத மொட்டொன்றில் இதழ்களை உதிர்க்கத் தொடங்கிய அதிர்வூட்டும் கருவண்டுகளாய்
மலட்டுத்தன்மை அறிந்திடா மனநிலை குறைபாடுகளோடு பிறந்த பாத்திரங்களாய்...

மதமெனும் சாயக்கழிவை மனதோடு நிறுத்தாத மக்கியக் குப்பைகளாய்
மதுபோதையில் மொழியறியாது பிதற்றிக் திரியும் மாக்களாய்...

மதத்தை பெரிதும் காக்க முன்நிற்கும் மேதாவிகளாய்
மறைக்கப்பட்ட சூத்திரங்களின் மாற்று வடிவங்களாய்....

வேதமெனும் நூல்படைத்து வேடிக்கை காட்டி உண்டுப்பிழைத்து
வேதனைகளால் வெளிவந்த போராளிகளை ஒடுக்கி வைத்து...

வாதங்களில் நாவாடி மாதங்களாய்ப் போராடி
வாழ்வுரிமை காக்க வந்த பெண்குலத்தை பேதலிக்கச்செய்து....

வட்டமிடும் வான்பருந்தாய் நோட்டமிடும் நரிக்கூட்டங்களாய்
வண்ண வண்ணத் திட்டமிட்டு அடக்கியாளும் திறமையற்ற மாயபிம்பமாய்...

சானக்கிய வசனம் பேசி சாதுர்யமாக தப்பிச் செல்லும் சந்திப்பிழைகளாய்
சாதிப்பெயரால் ஓங்கி நிற்கும் செல்வாக்கு நிறைந்த செல்லாக் காசுகளாய்...

புதையல்கள் போதுமென திருந்திடா ஊழல்வாதிகளை
புதைகுழியில் விழாது தாங்கும் சில பொறுப்பற்ற நீதிமான்களாய்...

வாழ்வதற்கு வழிதேடி வழியற்று நிற்போரை வருத்தி
வாழ்வாதாரத்தை தாழிட்டுக் கொளுத்தும் விலைமதிப்பறியா வியாபாரிகளாய்....

இருந்தொன்றும் பயனில்லை மருந்துண்டு மாண்டிடுக
இறுதிதுளிக் குருதிகளேனும் குளிரட்டும் பேராசையின்றி...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (17-Jul-18, 8:54 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 47

மேலே