நல்ல வீணை தான், நன்றாக மீட்டபடவில்லை

நல்ல வீணை தான், நன்றாக மீட்டபடவில்லை.

சுருட்ட முடிக்கு சொந்தக்காரன். சராசரி ஆண்களை விட சற்று உயரம் கொண்ட அவன் நிறத்தில் கருப்பாக இருந்தான். வெடெவன இருந்ந அவன் மிகவும் சுறுசுறுப்பானவன். அவனுக்கு படிப்பு நன்றாக வந்தாலும் படிக்க முடியாத குடும்ப சூழலும், நட்பு வட்டமும் அமைந்துவிட்டது. ஸ்கூல் படிக்கும் போதே தன்னை அழகு படுத்திக் கொள்வதில் நல்ல நாட்டம் இருந்தது. இயற்கையிலயே அவனுக்கு நகைச்சுவை உணர்வு சற்று அதிகம். அவன் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைப்பதில் கெட்டிக்காரன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தன்னை அனைத்து விளையாட்டிலும் மிக சிறந்த வீரன் என்று நிருபித்து காட்டினான். பி.இ.டி மாஸ்டர் அவனுக்கு நல்ல தோஸ்த். தலைமை ஆசிரியர் அளவுக்கு அவன் விளையாட்டின் புகழ் எட்டியது. ஸ்கூல் புட்பால் டீம் கோல் கீப்பர் அவன் தான். கிரிக்கெட் விக்கெட் கீப்பரும் அவன் தான். அத்லடிக் 100, 200, 400, 4000 மீட்டர் ஒட்ட பந்தயத்திலும் பலமுறை அவனுக்கே முதல் பரிசு. அவன் வீட்டில் மெடல், சர்டிபிகேட், பரிசு கோப்பை சய்ஸ் வாரியாக அலமாரியை நிரப்பியிருந்தான்.

புட்பால் டீமின் தலைமை பொறுப்பை ஏற்று, தன் ஸ்கூல் டீமை தமிழ்நாடு முழுவதும் அழைத்து சென்று அபாரமாக விளையாடி பல வெற்றி கனிகளை பறித்து தன்னுடைய பள்ளிக்கு அற்பனித்துள்ளான்.

தான் வசிக்கும் இடத்திலும் மேல் கூறிய அனைத்து விளையாட்டையும் அவன் தலைமையேற்று நடத்தி பலமுறை வெற்றி அடைந்துள்ளான். இதனால் அவன் பிரபலமானது பெரிய விஷயம் இல்லை. பல பெண்களுக்கு அவன் மீது ஒரு கண் இருந்தது வியப்பில்லை. பள்ளி படிப்பை வெற்றியுடன் முடிக்கவில்லை என்றாலும் விளையாட்டு தன் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நம்பினான். அவன் குடும்பம் மிக பெரியது. அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என்று மிக பெரிய பட்டாளமே இருந்தது. அப்பா ஓய்வு பெற்றார். அண்ணன்களுக்கு அரசாங்கம் உத்தியோகம் இருந்தும் என்ன பயன், சொற்ப சம்பளம் தானே, அவர்கள் என்ன பி.ஏ அல்லது எம்.ஏ வா, சாதாரண எஸ்எஸ்எல்சி பெயில் தானே ஆபிஸர் வேலையா கொடுப்பான் அரசாங்கத்தில். குடும்பம் பொருளாதாரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. படிப்பு பாதியில் முடிந்தாலும் அவன் விளையாட்டு சம்மந்தப்பட்ட விஷயத்தை விடவில்லை. எவ்வளவு நாள் தான் உள்ளூரிலேயே ஓணான் பிடிப்பது, தன் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் பல பயிற்சியாளர்கள் உதவியை நாடினான். அவர்கள் அனைவரும் அவனை ஊக்குவித்தார்கள். அவனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல பல வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அந்த அடுத்து கட்ட பயிற்சிக்கு, அவன் கட்ட இயலாத அளவிற்கு பணம் கேட்டார்கள். அதை கேட்ட அவன் அதிர்ந்தான், மிகவும் சோர்ந்து போனான் .
" ரண்ணிங் ப்பிராக்டீஸ்" செய்வதற்கு ஒரு நல்ல ஷூவே வாங்க முடியாத அவன் அவர்கள் கேட்ட பணத்திற்கு எங்கே போவான் பாவம். இருந்தாலும் அவன் விடவில்லை. அண்ணன்களிடம் இதைப் பற்றி பேசினான். அவர்கள் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்றாலும் அவர்களால் அவனுக்கு அவன் கேட்ட பணம் தர இயலவில்லை. நண்பர்களிடமும் அவனால் கேட்க முடியாது, காரணம் அவர்களும் நடுத்தர வர்க்கம் தானே. அவனுடைய சில சொந்தக்காரர்கள் அவனுக்கு பொருளாதார உதவி செய்து ஊக்குவிக்கும்விதமாக எதையும் செய்யாமல், "இப்ப உன் குடும்பம் இருக்கிற நிலைமைக்கு உனக்கு இது தேவையா, ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு போய், உன் அண்ணன்களுக்கு உதவி செய்". இதுவே அப்போது அனைவருடைய பேச்சாக இருந்தது.

அவன் விளையாட்டின் அடுத்த கட்ட கனவு தரைமட்டம் ஆனது. அவன் கவனம் திசை மாறியது. அவனும் சராசரி இந்தியன் போல், தன்னுடைய இறக்கைகளை உடைத்துவிட்டு, தன் எதிர்கால ஆசைகள் அனைத்துக்கும் ஒரு பெரிய பூட்டு போட்டு விட்டு, அவனும் தரையில் இறங்கும் விமானம் ஆனான். அதன் பிறகு அவன் பல வேலைக்கு சென்றான். அதுவும் அவன் அம்பத்தூர் தொழில் பேட்டையில் பணிபுரியும் போது அவன் பல இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. ஆர்க் வெல்டிங், கேஸ் வெல்டிங் என அவன் கற்றுக்கொண்டு, அந்த வேலையில் பல மணி நேரம் இடுபட்டதால் எப்போதும் கோவை பழம் போல் அவன் கண்கள் சிவந்து காணப்படும். அவனுக்கு அங்கே தினக்கூலி எவ்வளவு தெரியுமா? ஐந்து ரூபாய் தான். அதை அப்படியே எடுத்துக் வந்து தன் அன்னையிடம் கொடுப்பான். அந்த பணம் அவனுடைய மிக பெரிய குடும்பத்திற்கு அப்போது மிகவும் உதவியாக இருந்தது என்றால் அது மிகையாகாது .

அவன் அண்ணன்மார்கள் சிரமப்பட்டு அரசாங்க உத்தியோகம் பின் வந்த நாட்களில் அவனுக்கு வாங்கி தந்தார்கள் . திருமணம் ஆனது . பெண், ஆண் எண இரு குழந்தைகள்.
இன்று பணியில் இருந்து ஓய்வும் பெற்றவர், இவர் தன்னுடைய பேர குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இன்று தொலைக்காட்சியில் உலககோப்பை புட்பால் பார்க்கும் போது, இவர் நினைவுகள் பின்னோக்கி செல்லாதா, இவர் கண்களில் கண்ணீர் முட்டாதா? சென்னை வண்ணாரப்பேட்டையில் தியாகராய பள்ளி, இன்டர் ஸ்கூல் புட்பால் போட்டியில் எதிர் அணி வீரர் கோல் போட முயற்சித்தபோது, கோல் கீப்பரான இவர் பாய்ந்து பந்தை பிடித்து கோல் போடாமல் தடுத்ததை இவரால் எப்படி மறக்க முடியும். இவரை பற்றி நிறைவாக சொல்ல வேண்டும் என்றால் நாடு ஒரு நல்ல விளையாட்டு வீரரை அடையாளம் காட்ட தவறிவிட்டது. வெற்றி என்னும் வானில் நட்சத்திரமாக மின்ன வேண்டியவர், குண்டு பல்பாக, தன் குடும்பத்திற்கு மட்டும் ஒளி கொடுக்கிறார்.

இப்படி இந்த தலைமறை குழந்தைகளின் திறமைகளை வீண்அடிக்காது அவர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். அவர்கள் சிறகுகளை ஒடிக்காதீர்கள். அவர்கள் விரும்பிய வானில் சிறகடித்து பறக்கட்டும். அவர்கள் கனவுகள் மெய்பட வழிவகைகள் செய்யுங்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்லிதரவேண்டியதல்லாம் என்ன தெரியுமா? உன் திறமைக்கு" வானம் தான் எல்லை" என்று.
- பாலு.

எழுதியவர் : பாலு (27-Jul-18, 10:46 pm)
சேர்த்தது : balu
பார்வை : 206

மேலே