நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம்
^^^^^^^^^^^^^^^^^^^^^
எப்போதும்
மொக்கையாகவேனும்
எதையாவது சொல்லி
லேசான எரிச்சலுடன்
சிரிப்பையும் வரவைத்துவிடுகிற
நண்பன் ஒருவன்...

அழகான தேவதை போல்
பெண் ஒருத்தி கடக்கையில்
ஆசையாய் ஆவலாய்
பார்க்கும் நண்பர்களிடமும்
மச்சான்
அவளை மட்டும் பார்க்காதிங்க
அவள் எனக்கு ஒன்றுவிட்ட
அத்தைமகள் என்று
சொல்லி மனதளவில்
அவளை தனதாக்கிக்
கொள்கிற ஒருவன்...

எந்த நிலையிலும்
துறந்து விடாத
கஞ்சத்தனத்துடன்
இருந்தவனை
கண்டிப்பாய் இந்த முறை
சினிமா டிக்கெட்
நீ தான் வாங்குகிறாய்
என சிக்கவைக்க
கவுடண்டரில் காசுகொடுத்த
அதிசயத்தை
கண்கள் நம்பமறுத்த வேளையில்
செல்லாத நோட்டென அதையும்
திரும்ப பெற்றுக் கொண்டு
அவசரத்தில் நம்மையே
பலிகடாவாக்கிவிடும் ஒருவன்...

இப்படியெல்லாம் நம்மில் இருந்தாலும்
எனது கைக்குட்டையின்
ஈரம் படிகிற ஒரு மாலையில்
புருவங்களை போர்த்திக்
கொள்ள முடியாமல்
தவித்த
நெடிய இரவுகளில்
அழைபேசி சினுங்கலில்
அன்புடன் மறுமுனையில்
உங்களின் சொற்கள்
எனக்குள்
ஆறுதலாய்...

தோல்விகளால் துவண்டு
மனம் சோர்ந்து போகிற
ஒரு நாளில்
கைகோர்த்து
நடந்தபடி
ஒரு தேநீர் கடையில்
நம்பிக்கைகளை
பருக வைத்து
இதுவும் கடந்து
போகுமென
நாளைய விடியல்
நமக்கே என்று
தோள் கொடுக்கும்
தோழர்களே...
இனிய நண்பர்களே...
அனைவருக்கும்
நண்பர்கள் தின
நல்வாழ்த்துக்கள்.

நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (5-Aug-18, 9:39 am)
Tanglish : nanbargal thinam
பார்வை : 207

மேலே