எங்கள் உயிரினும் மேலான

தமிழ் மண்ணிற்கும், மரபிற்கும்
கலங்கரை விளக்கமாய் இருந்த
கருணாநிதியால் வாழ்ந்தோம் - அவர்
காலத்தை வென்று, காலம் சென்றபின்
கண்ணீரநதியில் வீழ்ந்தோம்

முத்தமிழ்க்காற்று
மூச்சை நிறுத்திக்கொண்டது
தொல்காப்பியப்பூங்கா
தொலைதூரம் சென்று விட்டது

தமிழின் முகவரி
தண்ணீரில் நனைந்தது
தமிழனின் முகமோ
கண்ணீரில் கரைந்தது

சங்கத்தமிழ்க் கவிபாடி
சந்ததி வளர்த்த
சிங்கத்தமிழ் முகமொன்று
சிரிப்போடு மறைந்தது

செந்தமிழ்த் தேன் வாங்கிய
செவிகளோடு சேர்த்து
இயற்றமிழ் தாங்கிய
இதயங்களும் உறைந்தது

அஞ்சுகம் பெற்ற
வஞ்சகமில்லா
நெஞ்சகமே - நீ
மண்ணகம் விட்டு
விண்ணகம் போனாலும்
என்றும் உனைப் பிரியாது
என்னகமே

உன்னகம் தந்த
உன்னதத் தமிழால்
உன்னை மறவாது
தேம்பி அழுகிறது
தென்னகம்

பெரியோரே!
தாய்மாரே!
என்று நீ அழைப்பாயென
இங்கு வந்தோம் - ஆனால்
பெரியாரும்
அண்ணாவும்
உன்னை அழைத்ததால்
நீ சென்றாயென அறிந்து
எங்களையே நொந்தோம்

அய்யா - நீங்கள்
அறியாமை இருள் நீங்க
அன்போடு அவதரித்த ஆதவம்
நீ எமக்குக் கிடைக்க
மானுடம் மொத்தமும்
செய்திருக்கவேண்டும் மாதவம்

காவிரியாறு
பாலாறு
பொருநையாறு
வைகையாறு
இவைகள் வற்றலாம்
எந்நாளும் வற்றாத ஆறு
உனது வரலாறு

அருந்தமிழை அவனிக்கு
அள்ளித்தந்த அமுதசுரபி
அதைப் பருகியபின்பு
எமது உடலைப் பார்த்தல்
உள்ளே இருப்பது அமுதசுரப்பி

பெரியாரின் சொற்கள்
உன்னால்தான் செயலானது
உறங்கிக்கிடந்த தமிழினம்
உன் உரையால் புயலானது

விதவைக்குப் திலகம் தந்த
வித்தகக் கலைஞரே
மக்களுக்காக - வாழ்வில்
அயராது உழைத்த
வியத்தகு இளைஞரே

உன் பகுத்தறிவின் பலனால்
ஆலயத்தில் அனைவராலும் நடந்தது
அம்மனுக்கு அர்ச்சனைகள்
அதனால் குறிப்பிட்ட சிலரால்
உனக்கும் நடந்தது சில
எதிர்ப்பு "அர்ச்சனைகள்"
உனை நோக்கி வந்தது
கபடம் நிறைந்த கர்ஜனைகள்
ஆனால் - உன் முகத்தில் சிந்தும்
புன்சிரிப்பின் முன்னால்
பொடியானது பிரச்சினைகள்

ஆத்திகங்கள் பெற்றெடுத்த
நாகரிக நாத்திகமே
திராவிடம் கண்டெடுத்த
திறன்மிகு திரவியமே

கண்ணகிக்குச் சிலை வடித்து
கற்பிற்கு வடிவம் தந்தாய்
வள்ளுவனை குமரியில் பொருத்தி
தமிழுக்கே உருவம் கொடுத்தாய்
சிவாஜியை சிலையாக நிற்கச்செய்து
நடிப்பிற்கு நன்மதிப்பளித்தாய்

அண்ணாவின் பெயரால்
அண்ணா சாலையில்
நீ கட்டியது அறிவாலயம்
உன்னையே நினைந்து
உடன்பிறப்புகள் யாவரும்
உள்ளத்தில் உனக்காக
கட்டியது அன்பாலயம்

பெரியாரின் துணிவும்
அண்ணாவின் கனிவும்
அந்த மகான்களிடத்தில்
உனக்கிருந்த பணிவும்தான்
தமிழையும், தமிழனையும்
தலை நிமிரச்செய்தது
தன்னிகரில்லாத - இந்த
தலைவர்களால்தான்
தமிழ் மண்ணில்
தமிழ்மழை பெய்தது

வானளாவாப் புகழ்ந்தாலும்
வஞ்சத்தோடு இகழ்ந்தாலும்
உன் வாயின் வாயிலில்
வந்தமரும் ஒரு குறுஞ்சிரிப்பு
அதுதான் - உன்
குணத்தைக் காட்டும் குறிஞ்சிப்பூ

மு.க.முத்து, மு.க.அழகிரி
மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு
செல்வி மற்றும் கனிமொழி
இவர்கள் அறுவரும்
உன்னால் பிறந்தவர்கள்
எண்ணிலடஙகாத
விண்மீன்கள் போல
இன்னும் பலர் இருக்கிறார்கள்
அவர்கள் யாவரும்
உன்னால் பிழைத்தவர்கள்

திருக்குவளை ஈன்றெடுத்த
தெய்வத்தின் திருமகனே
அன்னைமொழியாம் - நம்
அருந்தமிழ் செம்மொழியாகப்
பெருந்தொண்டளித்த பெருமகனே

அர்த்தமற்ற ஜாதிகளை எரித்த
அன்பெனும் ஜோதியே
அநீதிகளை அடியோடு அழித்த
அறமெனும் நீதியே - உனை
பறிகொடுத்துவிட்டுப்
பரிதவித்து நிற்கும் - எமக்கு
இனி ஏது நல்லதொரு நாதியே

ஆறடி மண்ணே ஆனாலும்
போராடியே பெரும் போராளியே
தமிழுக்கும், தமிழனுக்கும் துயரென்றால்
பொங்கி வரும் பேராழியே

உலகமக்கள் யாவருக்கும்
தமிழ் என்பது மூத்த மொழி
உன்னதத் தமிழை உயிர்மூச்சாய்க்
உட்கொண்டு வாழ்ந்து வந்த
உமக்கோ அது மூன்றாம் விழி

அற்றை நாளில்
தி.க.விலிருந்து
தி.மு.க பிறந்து வந்தது
இன்றைய பொழுதில்
தி.மு.க. விலிருந்து
மு.க. பிரிந்து சென்றது
இனி என்னாகும்
தமிழனின் தலைவிதி?
கலக்கம் வேண்டாம்
கழகத்திற்காகவே வாழ்கிறார்
தங்கமகன் நம் தளபதி

உதிப்பதும், மறைவதும்
உதயசூரியன்தான் - நீயோ
மறைந்தாலும், மாண்டாலும்
எமக்குள் என்றும் வாழும்
இதய சூரியன்

உன் அறிவாலும்.அறத்தாலும்
என்றும் நாங்கள் கண்டது ஏற்றம்
உன்னால் எப்போதும் இருந்ததில்லை
எங்கள் வாழ்க்கையில் இறங்கல் - அந்த
நன்றிக்கான நல்லதொரு
காணிக்கைதான் இந்த இரங்கல்

தமிழை எவர் எழுதினாலும் - அதை
நீ கவனிப்பாய் சற்று உன்னிப்பாய்
தவறேதும் இதிலிருந்தால்
தயைகூர்ந்து மன்னிப்பாய்

மனமறிந்து நீ எவருக்கும்
இட்டதில்லை நாமம் -எனவே
வையமும், வானமும்
உள்ளவரை வாழும்
கலைஞர் எனும் நாமம்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (14-Aug-18, 9:32 pm)
பார்வை : 217

மேலே