சிவப்பும் சினமும் அழகே

கோபம்
சினமென்பது சட்டென்று வந்துவிடுகிறது
ஒரு மழையென அது பெய்து முடிகிறது
மரமென மனங்கள் வீழ்ந்து விடுகிறது

முடிந்த பின் மனமும் குறுகுறுக்கிறது
சினமேன் கொண்டேனென குமருகிறது
கோபங்கள் மேகமென கழிகின்றது
கொட்டப்படும் கோபங்கள் மரித்து போகிறது
வெட்டப்படும் உறவுகளின் கோலங்களும் நேருகிறது
காலங்கள் பாலங்களாக மாறுகிறது
ஒரு முறைப்பில் மரணித்த உறவுகள்
மறு புன்னகையில் புதுப்பூவென மலர்கிறது

இரவில் குரைக்கும் நாயென
தெறித்து விழும் கோபமும்
வரித்து பேசும் சூடு சொற்களும்
இரவில் நிலவின் நயமென
வீசும் புன்னகையின் அழகும்
பேசும் வார்த்தைகளின் இனிமையும்
இரண்டும் ஒரு மனிதனின்
இருவேறு தருணங்களின் பிம்பங்கள் தானே

காட்டப்படாத கோபங்கள்
காயங்களாய் நமக்குள் வாழ்கிறது
நெஞ்சில் பாரமாய் சேருகிறது
வன்மத்தின் கோரமாய் உள்ளுறங்கிகிறது
கண்ணீரின் ஈரமாய் கரைகிறது
மொத்தத்தில் நோயாகி துரத்துகிறது

உண்டியலில் சேர்க்கும் காசக்காமல்
கோபங்களை நெஞ்சொடு சேர்க்காமல்
நெஞ்சொடு சுமக்காமல்
கோபங்களை சிதற விடுதலும்
சில நேரம் நல்லதுவே

சிணுங்காமல் சிரித்தே
ஞானியென வாழ்ந்திட முடியாத
சாமானியனுக்கு
சிரித்தலும் வேண்டும்
சகித்தலும் வேண்டும்
சினமும் வேண்டும்
சில நேரங்களில்

சிவப்பு சூரியனை போல
சினம் கூட அழகே

எழுதியவர் : யாழினி வளன் (14-Aug-18, 10:44 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 106

மேலே