உறங்கிய கவிதை

இந்த தாய் வழிச் சமூகத்தில் தாயின் தாலாட்டை கேட்டு வளர்ந்த பிள்ளைகளுக்கு, தந்தை என்பவர் தள்ளிநின்று தன் அன்பை வெளிப்படுத்துபவர் என்றும் , கண்டிப்புமிக்கவர் என்றும் நினைத்திருப்பார்கள்.இதையெல்லாம் பொய்யாக்கியது உன் வார்த்தைகள்.

ஆம் உன் " ஆனந்த யாழ் " இன்னும் மீட்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது" "தந்தையின் தாலாட்டாய் "

" தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே " என்றாய்.உண்மை தான் இம்முறை தோற்றது தெய்வங்கள் மட்டுமல்ல சில பிள்ளைகளும் தான் ...தந்தை அன்பை உணராதவர்களாய்.

குடும்ப உறவுகளுக்காய் நீ தந்த " ஆயிரம் ஜன்னல் வீடு " நாங்கள் பார்த்திராத வீடு தான்

காதல் கொண்டோரின் பார்வையில் " ஆத்தாடி மனசு தான் றெக்க கட்டி பறக்குது " அதுவே கொஞ்ச நாளில்" லேசா பறக்குது மனசு " என்றானது.

அவனுக்கும் தோன்றியிருக்கிறது.." எங்கேயோ பார்த்த மயக்கம் " என.

" யார் இந்த பெண் தான்" என அவன் கேட்டிருந்த பொழுதில் அவளோ..." யாரோ இவன் " என தேட தொடங்கிருப்பாள்.

" உன் பேரே தெரியாது ..உன்னை கூப்பிட முடியாது "என தவித்துக்கொண்டிருப்பாள்.அதே வேளையில்" உனக்கோர் பேர் வைப்பேன்..அது எனக்கே தெரியாது" என உளரிக்கொண்டிருப்பாள்.

மறுமுறை பார்கையில் " மழை வரும் அறிகுறி விழிகளில் தெரியுதே(மா)..?

பின் "மனசெல்லாம் மழையே " என காதல் மழையில் நனைகிறார்கள்.

சில நொடி வானவில் ரசித்த அவனோ.." வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பார்க்கிறா(றே)ன் "

காதல் கதையை நினைவு கூர்கையில் "நேற்று வரை நேரம் போகவில்லையே...இன்று ஏனோ நேரம் போதவில்லையே .." என அவன் உருகுகையில் ,அவளோ.. "உச்சந்தலை உள்ளுக்குள்ளே ஏதேதோ பேச" வந்த கதை சொல்கிறாள்.

அவளுடன் நெருக்கம் தொடர்வதன் கோபத்தினாலோ ,தன்னால் தீண்ட முடியாத பொறாமையினாலோ.."காற்றை கொஞ்சம் நிற்க சொன்னே(னா)ன்.

"இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து " - ஆம் " நாம் " இரண்டு எழுத்து தானே..?

அவர்களின் காதல் " சரியா ? இது தவறா? என்னும் குழப்பத்திலும் உன் வரிகளால் காதல் வளர்க்கிறார்கள்.

காதல் வர்ணனைகளில் ..செல்லம் , தேவதை என கொஞ்சிய காலத்தில் " அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும்இணையில்லை " என சற்று வித்தியாசமாய் வர்ணித்தாய்.

அவள் கண், மூக்கு , இதழ் ,இடை என காலங்காலமாய் வர்ணிக்க பல இருந்தும் நீ " கோணக்கொண்டக்காரி" என வித்தியாசம் காட்டினாய்.

அவன்களை போல கவிதை எழுதியெல்லாம் காதலிக்க தெரியாது..
அதற்கு சில அவள்களும் விதிவிலக்கு." கருப்பான கையால என்ன புடிச்சான் " என வெக்கம் சிந்தும் அவளே தான் " உம்மீச முடிய செஞ்சுக்குறேன் மோதிரமா" என சீண்டியும் பார்க்கிறாள்.

காதல் பிரிவில் தவிக்கும் இளைஞனை பார்த்து காதல் தானே போனா போகுது என்போரிடம் " நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைவதற்கு " என கேள்வி எழுப்பினாய்.

காதல் தருணங்களை " நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வரும் " அவள் நினைவின் வலிகளை சொன்னாய் " அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் " என கலங்கும் இடங்களிலும் அத்தனை கலக்கம்.

பிரிந்திருக்கும் காதலர்களை பற்றி " ஒரு பாதி கதவு நீயடி..மறுபாதி கதவு நானடி "என பார்த்துக்கண்டே பிரிந்திருக்கும் வலியை சொன்னாய்.

வாழ்க்கையை பற்றி சொல்லுகையில்...

நிலவை "வெள்ளி பொம்மையாக்கி " கட்டிபோடுவதிலும்...
"தீயினை தீண்டி வாழும் போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் " என நம்பிக்கை விதைக்கும் இடங்களிலும் நீ இருக்கிறாய்.

நட்பை பற்றி பேசும் போது " தோள் சாய தோளில்லையேல் என் வாழ்க்கை
என்னாவது? " என கலங்குகிறாய்.

" சுடசுட மழை நனைப்பதும்"...
""வெயிலோடு உறவாடுவதும் "
எங்களுக்கு முற்றிலும் புதிது.

" வெறுந்தண்ணி கேட்டா மோரு தரும் நேசம் ..வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும் " கிராமத்தை நகரத்து பிள்ளைகளுக்கு அறிமுக படுத்தினாய்.

தினமும் ஷார்ப்பினர் தொலைத்து அழும் பிள்ளைகளுக்கு "ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கி தான் பென்சில் சீவலாமே." என அய்யனாரை படம்பிடித்துக்காட்டினாய்.

" பூக்கள் பூக்கும் தருணம் பார்த்தது யாரும் இல்லையே..." - உண்மைதான் பார்த்ததில்லை ஆனால் கேட்டிருக்கிறோம்.

உன் " அழகோ அழகே " தான் எத்தனை அழகு.." மழை மட்டுமா அழகு ...
சுடும் வெயில் கூட ஓர் அழகு "
" நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு...உண்மை அதுதான் மெய்யாய் அழகு .." - கொள்ளை அழகு

இத்தனை காதலா தமி்ழின் மேல் ?
அதனால் தான் காலன் காதல் கொண்டானோ உன்பால்..?

இன்னும் வாழ்கிறாய் ... வார்த்தைகளாய் ... வரிகளாய்...வலிகளாய்...

எப்படி தொடங்கினேன் என தெரியவில்லை...இன்று நான் எழுதிடும் கவிதைகளுக்கு நீயும் ஒரு காரணம்.உன் எளிய நடை கவிகள் கண்டு வியந்திருக்கிறேன்.உன் வரிகளை காதலித்த ஆயிரக்கணக்காண ரசிகர்களில் நானும் ஒருத்தி...

இன்றும் தூக்கம் வர மறுத்த இரவுகளில் உன் பாடல்கள் துணை வருகின்றன என்னோடு.

- கீதா பரமன்
(கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு சமர்பணம் ... அவரின் வரிகளில் )

எழுதியவர் : கீதா பரமன் (15-Aug-18, 10:19 pm)
சேர்த்தது : கீதா பரமன்
Tanglish : urangiya kavithai
பார்வை : 1208

மேலே