என் கனவு மகள் ஆசிபாக்கு

பட்டுவேட்டி நெசவு செஞ்சு
பெட்டியில பூட்டி வெச்சேன்..
பிறக்காத பொன்மேனி உன்ன
பவுசா தொட்டில் இட..
தேடி தேடி வாங்கிவெச்சேன்
தங்கசங்கிலி வளவி எல்லாம்..

விரும்பி விரும்பி வாங்கிவெச்சேன்
வெள்ளியில கொடியோடு கொலுசும்...
தடவி பாத்து வாங்கிவெச்சேன்...
தளிர்மேனிக்கு பருத்திச் சட்டை..
பால்முகம் பசி தீர்க்க
பாலாடை வாங்கி வெச்சேன்..
பிறக்காத முத்து மணியே
பேர்கூட மனசுல வெச்சேன்..

கள்ளி பால் கொடுக்க..
கண்ணே எனக்கு மனமில்ல..
கனவெல்லாம் நிரஞ்ச உனக்கு
கழுத்திலிட விஷகுப்பியும் வாங்கிவெச்சேன்..

காம பிசாசு கண்ணுபட்டா
கடவுள நீ தேடாத....
கல்லா நிக்கிற அவனுக்கு
கண்ணும் காதும் அழிஞ்சுபோச்சு..

கழுத்துல நான் போடும்
குப்பி உன்ன காப்பாத்தும்
கலங்காதே என் மகளே
கருணை கேட்டு கெஞ்சாதே..

விஷம பார்வை துரத்தும்போதும்
விரல்கள் உன்ன விரட்டும்போதும்
விஷ குப்பி உனக்கிருக்கும்
விழுங்கிட நீ தயங்காதே...

ஏளனமா பாக்காத தளிர்மலரே
என்னாசை மகளே வேறென்ன நான்செய்ய...
என் கழுத்தும் சுமந்திருக்கு
எழில்(விஷ) குப்பி ஒன்னு..

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (15-Aug-18, 8:19 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 51

மேலே