காதல்
மஞ்சள் மாலை கொஞ்சும் நேரம்
மதிமயக்கும் பொன்நேரம்-அவள்
வருகைக்கு காத்திருந்தேன் நான்,
பளிங்குநீர்த் தேங்கும் தடாகக் கரையினில்,
மாலையும் போனது இருளும் கவ்வியது
அவள் வரவைக்காத்து நான் இன்னும் அங்கு.............
மண்டிய இருளைக் கிழித்து வந்தது
வெண்ணிலவு தன்னொளி பரப்பி,
காய்ந்த நிலவொளியில் என் உள்ளமும்
குளிர்ந்திட , தூக்கமும் கண்களைத்தழுவ
கனவுலகில் நான் , நிலா, பெண்ணானாள்,
நானும் அவளும் கைகோர்த்து வானில் உலாவர,
கனவிலே என் வாய் முணு முணுத்ததோ.....
'இன்பமான இரவு.....இதயம் பொங்கும் உறவு'
என்று நானும் அவளும் நீலவானில் ஓடியாடி
பாடிவர.................தடாகம் தழுவி வந்த
தென்றல் காற்று என்னைத் தீண்ட .,
கண்விழித்தேன்.....தடாகத்தில் .........
நிலவுப்பெண் என்னைப்பார்த்து சிரித்தாள்,
ஆம் வான் நிலா தடாகத்தில் வந்து சிரித்தாள்,
கண்களைக் கசக்கி, மீண்டும் தடாகத்தைப்
பார்த்து, கைகளால் நீரை அள்ளினேன்
நிலவும் ஆடியது...................நான் தொட நினைத்தது
நிலவு மங்கை அல்ல .....அது ஆடும் அதன் பிம்பமே
என்று புரிந்தது............உறக்கத்திலிருந்து மீண்டேன்
இரவும் போனது.....................உதயம் வந்தது
கோழி கூவ............காத்திருந்தும் பயனிலை
அவளோ வராது போக.... தடாகம் விட்டு
திரும்பினேன் வீடு...................
மாயம் எது என்று புரிந்தும்
மாயத்தின் பிடியில் நான்
காதல் வலையில்