மணப்பந்தல்

கொஞ்சம் கூச்ச சுபாவம் தான் எனக்கும்...
இன்றோ அது எல்லை மீறி
என்னுள்ளே என்னவென்றறியா
எல்லைகளுக்குள் எட்டிப்பார்க்கிறது!

காதல் திருமணம் தான்..
பலமுறை பார்த்து..
பலவற்றை பேசி..
பல நினைவுகளில் நினைந்து..
பல பொழுதுகள் கழித்து..
காதல் மொழி பல பேசி
கை கோர்த்த தருணங்களும்
ஏராளம்!
தாராளம்!

இன்று ஏனோ?!
உன் கண்களை காண
கார்கில் போரே நடக்கிறது ...
உன்னருகில் நிற்க
அம்மணம் துறந்ததாய் ஓர் உணர்வு ..

பல நாட்களின் ஏக்கம்..
பல நாள் கனவுகளின் கருப்பொருள் ..
பல கவிதைகளின் கற்பனை..
எத்தனை முறை ஒத்திகை
அத்தனையும் இன்று கண்முன்னே ..!

குறித்த நேரத்தில் நீ வரவில்லை என்று
கோபப்பட்ட தருணங்கள் காணாமல் போய்
என்னருகிலே நின்றிருக்கிறாய்
நான் தன் என்ன செய்வதன்றியாமல் முழிக்கிறேன் ?

பக்கத்து வீட்டு அண்ணா பார்த்துவிடுவாரோ..
எதிர் வீட்டு அக்காள் யாரிடமாவது சொல்லிவிடுவாளோ..
எப்படியாவது அண்ணாச்சி கண்ணுல மட்டும் படமா
தப்பிச்சிட மாட்டோமா என்றும் ...
இன்னும் ஒரு தெருவு மட்டும் தாண்டுனா போதுமே
ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் ..
இப்படி
பலரது கண்களில் கருப்பு கண்ணாடி மாட்டி விட்டு
நாம் மட்டும் மாட்டிக்கொள்ளாமலே தொலைந்தோம்..

ஆனால் இன்று
பக்கத்து வீட்டு அண்ணா,
எதிர் வீட்டு அக்கா,
நம்ம அண்ணாச்சி ...
எல்லோருமே வசதியாக நாற்காலியில் உட்கார்ந்து
நம்மை தானே இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்...
என்ன வேடிக்கை
நாமும் அதை அசட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் ..

உன் தோழிகள்
என் தோழர்கள்
நம் நட்பு வட்டாரங்கள் தான்
நமக்கு முன்னே வட்டமேசை மாநாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் ..
நிச்சயம் அவர்கள் நம்மைப்பற்றி தான் அசை போட்டுக்கொண்டிருப்பார்கள் ...
நமக்கு தெரியாத என்ன?
எத்தனை மாநாடுகளுக்கு தலைமை தாங்கியிருப்போம்..!

சூரியன் உதிப்பதும்
மலர்கள் மலர்வதும்
எல்லாம் தினம் தினம் நடப்பதுவே
எனக்கு மட்டும் ஏனோ
எல்லாம் புதிதாக தெரிகிறது..

சூறாவளியாய் சுழன்றடித்த சூறைக்காற்றும்
புல்லாங்குழல் நுழைந்து
புது கீதம் பாடுகிறது..

நடப்பவை எல்லாம் நடைமுறைதான் என்றாலும்
எனக்கு மட்டும் புதுமுறையாய்
வள்ளுவன் தந்த பொதுமறையாய்...

மணப்பந்தலில் இணைந்திருப்பது
நமக்கு மட்டுமா சந்தோசம் ,
நிச்சயம் இல்லை ..
அதோ
நான்காவது வரிசையில்
மூன்றாவதாக அமர்ந்திருக்கும்
நம் நண்பனின் கண்களைப்பார் ..
தன் காதலும் மேடை ஏறும் என்ற
அவன் நம்பிக்கையும் தான்
நம் மணமேடையின் மகிமை ..
நம் மண வாழ்வின் பெருமை ..

சிகப்பு கம்பளத்தில் நாம் நடந்து வர
பந்தலில் கட்டி இருக்கும் வாழை மரமும் கொஞ்சம் எட்டித்தான் பார்க்கிறது..
மேடையின் நாற்காலி,
உனை இராணியாகவும்
எனை இராசாவாகவும் நினைத்து ..
ராஜ மரியாதையை கொள்கிறது ..

மேடையில் அலங்கரிக்கும் பூக்களில்
நம் காதலில் பூத்த அந்த ஒற்றை ரோஜா நிச்சயம் இருக்கும் ..

எல்லா புகைப்படங்களிலும்
நம் புன்னகை மட்டுமே பதிந்திருக்க ...

என்னவென்று நான் சொல்வேன்
நம் மணப்பந்தல் மல்லிகையை..!

எழுதியவர் : குணா (19-Aug-18, 3:41 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : manappanthal
பார்வை : 123

மேலே