சதுரத்தை சரித்த சகாப்தம் மகாத்மா
முரண்களின் உச்சம் நீ
முகர்ந்தேன் உன்னை முழு புத்தகமாய்
காந்தியம் சாகாது என்றாய்
ஐந்து வருடத்தில் ஆட்சி மாறும் போல்
காந்தியம் ஒன்று இல்லை என்றாய் - இது
உன் உண்மை கருத்தா இல்லை
உன் கர்வத்துக்கு நீ வைத்த நெருப்பா.
தீண்டாமைக்கு தீவைத்த உனக்கு
சாதியை உடைக்கும் சாமர்த்தியம் இல்லை
சாதி களிமண்ணால் செய்த
சதுர மேடையில்
ஒருபக்கம் உயர்வும் ஒருபக்கம் தாழ்வும்
உள்ளதால் உன்னுடல் சறுக்கியது
உன் அகிம்சை கோலோ
உன்னை சமத்தளத்தில் நிறுத்தியது.
ராமும் ரகீமும் ஒன்றென்று உன்
தூய்மை இதயமொழி ஒலியானதும்
பலியானாய் பிரார்த்திக்கும் வழியில்
துப்பாக்கி ரவையின் தாகம் தீர்ந்தது.
கோடி மக்களின் இதய கோமான்
இருப்பை இவ்வுலகில் நீக்கிய
கோட்சேயின் மனக்கோட்டை
இருள் கவ்வியது - இன்னுமும்
இந்துவும் முஸ்லிமும்
இணைபிரியா மனிதர்களாய்.
சத்தியத்தால் சத்து பிடித்த காந்தியத்தின் சாத்தியம்
சதுரவர்ண கட்டத்தை உடைக்கும் வட்டத்தின் கையில் ...