யார் பைத்தியம்
வடபழனி சாலையில் சந்தித்த ஒரு மனநலம் குன்றாத பைத்தியக்காரனுக்காக
யார் பைத்தியம்
நட்ட நடு வீதியில் நான்
பேருந்துகளும் பேரிரைச்சலும்
பெருங்கூட்டமும் நகர்கின்றன
தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட
வேகத்தோடு
நானோ ஆடிக்கொண்டிருந்தேன்
மிகவேகமாக
எனெக்கென்று எந்த வரைமுறையும் இல்லாமல்
என் நடனத்தில் நாகரீகம் இல்லை
நளினம் இல்லை
நவரசம் இல்லை
நடனத்திற்கான எந்த வரைமுறையும் இல்லை
ஆட்டம் மட்டுமே இருந்தது
எல்லோரும் சிரித்தார்கள்
பார்த்து பார்த்து சிரித்தார்கள்
பைத்தியம் என்றார்கள்
நானும் எனக்குள் சிரித்தேன்
சுயமாய் ஆடுவதற்கு கூட -இந்த
சமூக சாளரத்தின் வழி
அனுமதி சீட்டு வாங்கிக்கொண்டுதான் ஆடவேண்டும்
என்றே உங்கள் அழுக்கு
சட்டையை கிழித்து விட்டதால்
சங்கடப்பட்டு சிரிக்கிறீர்களா
இப்போது எனக்கும்
சிரிப்பு வந்தது
சத்தமாய் சிரித்தேன்
சமூகத்தை மறந்து சிரித்தேன்
வேகமாக சிரித்தேன்
வெட்கமின்றி சிரித்தேன்
இப்போது அவர்கள் பைத்தியம்
ஆனார்கள் என்னை கண்டு
மீண்டும் நான்
மற்றொரு வீதியில்
மக்கள் கூட்டம் மிகுந்த தெருவில்
சட்டையை கிழித்து கொண்டு ஓடினேன்
எதிரே வந்த கூட்டம்
எனைக்கண்டு வேகமாய் வழிவிட்டது
வித்தியாச பார்வையுடன்
விலகி நின்று வேடிக்கை பார்த்தது
இந்த சமூகம் எனக்கு தந்த
சாக்கடை அனுபவங்கள்
வியர்வை வழி வெளியேறிக்கொண்டிருந்தது
அந்த வியர்வை துளிகள்
மீண்டும் வேறு மனிதர்களை
பற்றிக்கொள்ள எத்தனிக்கிறது
நானோ சமூக வரையறைகளிலிருந்து
விடுபட்டு இருந்தேன்
என் மனம் மயிலிறகாய்
மாறி இருந்தது
உடல் இலவம் பஞ்சாய்
இலகுவாகி இருந்தது
நான் அங்கு இல்லாமல்
காற்றோடு கலந்து கொண்டிருந்தேன்
பயந்தார்கள் எனை கண்டு எல்லோரும்
பயந்தார்கள்
விலகி ஓடினார்கள்
ஆமாம் அவர்கள் உண்மையை
கண்டுபிடித்து அதன்
சாட்சியாக நின்று கொண்டு இருந்தேன்
சமூக வரையறைக்காக
வாழ்க்கையை தொலைத்தவர்களிலிருந்து
வேறுபட்டு நின்றேன்
அவர்களுக்கு நான் வேறுபட்டவனாய்
எனக்கோ நான் சுயத்திற்குள் சந்தோசமாய்
என் மனம் அழுக்கற்று இருந்தது
கரை இல்லாத என் மனம் அவர்களுக்கு
கடினமாய் இருந்தது
பயந்தார்கள் ஓடினார்கள்
வழிவிட்டார்கள் -அவர்தம்
சுயத்தை மறைத்தபடி
நான் பைத்தியகாரன் அவர்கள்
பார்வை சொன்னது
சிரித்தேன் நன்றாக சிரித்தேன்
சட்டை இல்லாத உடம்போடு
சங்கடமில்லாமல் சிரித்தேன்
சாக்கடையில் தத்தளித்த
நாய்க்குட்டியை தூக்கி
சாலையின் அப்புற நிழலில்
கிடத்தினேன்
இப்போது அவர்கள் பைத்தியம் ஆனார்கள்

