இரும்புத் தாயே
இரும்புத்தாயே!
தாயிற் சிறந்தவை உண்டோ? இத்தரணியிலே!
உதித்தாயடி கண்மணியே! பஞ்சம்பரந்த பாரதத்திலே
உன்தாய் உதிரம் உதிர்த்து உதித்தாய்
கைமாறிப் போனாய் உன்பாட்டன் வீட்டிற்கு
உறவுகள்கூடி உரிமையோடு அழைத்தனவென்று நினைத்தாயோ?
கற்கும் பருவத்தில் கொய்யாவும்நெல்லியும் விற்றாயே!
அங்குதான் நீ கணிதம் பயின்றாயோ?
எழுத்துகளின் அறிமுகம் இன்றி வாடினாயே
தன்கூட்டுப் பிள்ளைகள் பள்ளி செல்லக்கண்டாயே
தாழ்வுமனப்பான்மையால் தடம்மாறாது கையொப்பமிடக் கற்றாயே
அங்குதான் நீ தன்னம்பிக்கையை வென்றாயோ?
நெடும்பயணங்களுக்கு கண்மணி நீயே வழித்துணையடி
ஊரின் வழித்தடமெல்லாம் உன்விழியில் விரிந்ததடி
பாவாடைப்பருவத்திலே ஆமணக்குவேப்பங் கொட்டைகளை காசாக்கினாயடி
மும்மாரியும் முப்போகமும் செல்வம் சேர்த்தனடி
நீ வாழ்ந்த வீடு செழித்தது
கிட்டியதெல்லாம் கேப்பங்களிதானடி; வழிந்தது உன்விழிநீரடி
நெல்லஞ்சோற்றுக்கு நெஞ்சுக் கிரங்கிப் போவாயடி
அண்டைவீடு உனக்கு அன்னைமடி தானடி
அங்குமட்டும்தான் உனக்கு கிட்டும் நெல்லஞ்சோறு
பூப்பெய்திப் புறப்பட்டாய் உன்பிறந்த வீட்டிற்கு
வந்தாள் ராணியென வரவேற்றவர் ஒருவருமிலர்
கைதேர்ந்தவள் ஆனாயடி கைத்தறி நெசவில்
பகலிரவு பாராது பட்டுக்கு ராணியானாய்
உன்திறமைபோற்றத் தமையனைத் தவிர எவருமிலர்
நெசவுக் கலையில் கைதேர்ந்தவள் ஆனாயடி
கைபிடித்தவனால் கைவிட்டாயடி நெஞ்சம் நிறைத்தநெசவை
கனவுக்கோட்டைகள் சிதறுண்டு காரிருள் சூழந்ததடி
கருப்பு நிறத்து அகத்து அழகியே
மண்ணெண்ணையால் கரியாக அல்லவா நினைத்தாய்
கரம்பிடித்த காரணத்தினால் காப்பாற்றினான் உன்கணவன்
காலத்தால் உணர்ந்தாயடி உன்வாழ்க்கைப் பாடத்தை
காற்றாய்ச் சுழன்றாய் கடும்உழைப்பாளி யானாயடி
ஓராண்டில் ஓட்டைக்கூரை ஓட்டுவீடு ஆனதடி
ஓட்டுவீடு வளர உன்வயிற்றினுள்ளும் கருவளர்ந்ததடி
வீடு உருப்பெருமுன்பே உன்மகன் உலகம்பார்த்தானடி
ஓட்டுவீடு வீடல்ல; உன்உழைப்பின் ஓர்உருவம்
சுற்றம் உன்னை ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை
சுற்றத்துச் சுடுசொற்களுக்கும் அயராஉழைப்பிற்கும் சளைக்காதவளடிநீ
வைரம் பாய்ச்சிய நெஞ்சமல்லவா உனது
வைராக்கியமும் துணிவும் தன்னம்பிக்கையுமே உனதுடைமைகள்
கடின உழைப்பும் பொறுமையும் உனதுஆயுதங்கள்
சுற்றத்திடம் நல்லவேலைக்காரி குழந்தைகளிடம் பெரியம்மா
உன்உலகில் இவைதான் உன்அடையாளம்
எப்படித்தான் பெற்றாயோ இத்தனை வலிமைஎல்லாம்
பிள்ளைப் பருவத்தில் ஓடத் தொடங்கியவள்
பிராயம் நாற்பத்தைந்தைத் தொட்டும் ,வாழ்க்கை
ஓட்டம் கூடுகிறதே தவிர குறையவில்லை
தன்இதயம் வலுவற்றபோதும் உலக இதயங்களுக்காகப்
பலம் பெற்றாள் உலகஅன்னை தெரசா
என்அன்னை மெழுகுவர்த்தி வழிவந்தவள் போலும்
அவள் வாழும்வரை அவளும் வாழ்வாள்
பிறரையும் வாழவைப்பாள்
நான்கண்ட இரும்புப் பெண்ணே! உன்னிடம்தான்
எத்தனை பரிமாணங்கள் எத்தனை நற்குணங்கள்
எத்தகு வலிமை எத்தகு அனுபவமுதிர்வு
எல்லாம் வியக்க வைப்பதோடு நில்லாது
வாழ்க்கைப் பாடத்தை உணர ஊன்றுகோலாகியதே!
வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் அன்னைக்காக
நடந்துகொண்டிருக்கும்
அவள் மகள் எழுதியது..............