சமத்துவ நாயகன்-அடிசில் Published in The CommonSense Magazine -August 2018
கலைஞர் அவர்களின் சமூக நீதிக்கான பங்களிப்பின் சான்று - சமத்துவபுரம் திட்டம் . கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் சாதனைகளாக பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படப்பட்டிருந்தாலும் சமத்துவபுரம் உருவாக்குவதற்கான காரணங்கள் , கலைஞர் அவர்களின் மதிநுட்பத்துக்கும் , நிர்வாகத்திறனுக்கும் , தொலைநோக்கப் பார்வைக்கும் , பற்றி எரியும் ஒரு பிரச்சனையை ஒரு அரசு எப்படி அணுகி தீர்வு தந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வாய்ப்பாகவும் இருக்கிறது .
சமூக நீதிக்கான போராளியாகவே ஆட்சியில் இருந்தபோதும் இல்லாத போதும் அவர் இருந்திருக்கிறார் .
கொள்கைகளில் எந்த அளவுக்கு அவர் உறுதியாக இருந்தார் என்பதற்கு முன்னுதாரணமாய் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் உள்ளது .
சாதி பிரிவினை காலங்காலமாக இருந்து , அக்ரகாரம் , ஊர் , சேரி , ஒவ்வொரு சாதிக்குமான தெருக்கள் என கிராமங்கள் இருப்பிட வாரியாக பிரிந்து கிடக்கையில் இந்தியாவில் எந்தத் தலைவரும் யோசனைக்கூட செய்யாத திட்டமாக அனைவரும் ஓரிடத்தில் வாழ சமத்துவபுரத்தை முன்வைக்கிறார் கலைஞர் . அதுவும் எப்போது ? தென் மாவட்டங்களில் சாதி கலவரங்கள் கொழுந்து விட்டு எரியும் சமயத்தில் அதற்கு தீர்வாக வைக்கிறார் .
அவர் வைத்த தீர்வு இருநூறுக்கும் மேலான சமத்துவபுரங்களாய் , சமூக நீதிக்கும் , சாதி ஒழிப்பிற்குமான கலைஞர் அவர்களின் அர்ப்பணிப்பை பறைசாற்றும் விதமாக இன்றளவும் இருக்கிறது.
இந்த திட்டம் உருவான போது இருந்த கள நிலவரத்தை விரிவாக பார்ப்பது , எந்த சூழ்நிலையிலும் சமூக நீதி என்பதில் இருந்து கலைஞர் பின்வாங்கவில்லை என்பதை உணர்வதற்கு எளிதாக இருக்கும் .
1967 திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்குவந்தபின் மெட்ராஸ் என்பது தமிழ்நாடாக பெயர் மாற்றம் செய்யப்படுகிறது .
பின் தமிழர் , அவர்தம் வரலாறு இதனை தொடர்ந்து வலியுறுத்த எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்ற முழக்கத்துடன் கழக ஆட்சி பல்வேறு பெயர் மாற்றங்களை முன்னெடுக்கிறது , சேர , சோழ , பாண்டிய போக்குவரத்துக்கழகங்கள் என்று பேருந்துகள் மன்னர் பெயர்களில் போக்குவரத்துக்கழகங்கள் என்று மாறியதை உதாரணமாய் சொல்லலாம் .
பின் 1977 இல் எம்ஜிஆர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் ஆட்சியில் தமிழர் அடையாள பெயர்கள் என்றிலிருந்து தலைவர்களின் பெயர்களாக , பல்கலைக்கழகங்கள் , மாவட்டங்கள் மாறுகின்றன .திண்டுக்கல் அண்ணா மாவட்டமாகவும் , ஈரோடு பெரியார் மாவட்டமாகவும் , திருச்சி , கோவை பல்கலைக்கழகங்கள் , பாரதிதாசன் , பாரதியார் என உருமாறி பெயர் மாற்றம் தொடர்கிறது . தலைவர்கள் பெயர்களில் இருந்து தனிமனிதர் பெயராக எம்ஜிஆர் அவர்களின் அம்மா சத்யா பெயரில் போக்குவரத்துக்கு கழகம் தொடங்க முன்னெடுப்புகள் நடக்கும்போது இது விமர்சனங்களுக்கு உள்ளாகிறது .
பின் இந்த பெயர் மாற்றங்கள் எதற்காக தொடங்கின என்பதில் இருந்து விலகி , மாற்றம் பெற்று சாதி பெயர்களாக , வோட்டு அரசியிலை குறி வைத்து மாறுகிறது , ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் ஆட்சியில் , திருச்சி பிரிக்கப்பட்டு முத்தரையர் மாவட்டமாகவும் , விழுப்புரம் ராமசாமி படையாச்சி யாகவும் பெயர் மாற்றம் கொள்கிறது . பின் அந்த போக்கு , பேருந்துகளுக்கும் வந்து அழகு முத்து கோண் போக்குவரத்துக்கழகம் தொடங்கப்படுகிறது .
இப்படிப் போகையில் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகத்தை ஜெயலலிதா அறிவிக்கிறார் . அப்போது தேர்தல் நேரம் அவரால் அதனை அறிவிப்பாக செய்ய முடிந்ததே தவிர செயல்படுத்த முடியவில்லை .
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு , கலைஞர் அவர்கள் ஆட்சியில் அமர , ஏற்கனவே அறிவித்த இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார் .
வெடிக்கிறது தென் மாவட்டங்களில் கலவரம் , மாற்றுச் சாதி அதுவும் தான் கீழாக நோக்கும் சாதி , அந்த சாதியை சேர்ந்த ஒருவரின் பெயரில் இருக்கும் பேருந்துகளுக்கு நான் போவதா என்ற எரியூட்டப்பட்ட ஆதிக்க வெறி பேருந்துகளை எரிக்க வைக்கிறது .சாதி கலவரங்கள் தேனீ , விழுப்புரம் மாவட்டங்களில் பரவுகிறது , இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பு சாதிகள் , பிரச்சனையை மேலும் பெரிதாக்கும் வண்ணம் இமானுவேல் போக்குவரத்து கழகம் , புலித்தேவன் போக்குவரத்துக்கழகம் வேண்டும் என்று அரசை நிர்பந்திக்கின்றன .
இந்த சிக்கலான சூழ்நிலையில் இதனை முடிவுக்கு கொண்டுவர , மதிநுட்பத்துடன் , கலைஞர் ஒரே நாளில்
பத்தொன்பது மாவட்டங்களின் பெயர்களையும் , இருபத்தி ஒன்று போக்குவரத்துக்கழகங்களின் பெயர்களையும் அதிரடியாக சாதி அடையாளம் , கட்சி அடையாளம் இல்லாமல் மாற்றுகிறார் . இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பினாலும் அவரின் உறுதியில் இருந்து பின் வாங்கவில்லை .
கலவரம் முடிவுக்கு வருகிறது , பிரச்சனை முடிந்தது என்று அப்படியே விட்டு இருந்தால் இது ஒரு சம்பவமாகத்தான் இருக்கும் , ஆனால் ஒரு சம்பவத்தை வரலாறாக மாற்ற கலைஞரை போன்ற தலைவர்களால் தான் முடியும் .
கலவரம் அடங்கினாலும் , பதட்டத்தை தணிக்கவும் , சாதி போக்கு ஒழியவும் , கலைஞர் அவர்கள் முன் வைத்த மகத்தான திட்டம்தான் சமதுவுப்புரம் . அவர் இந்த திட்டத்தை முன்வைத்தபோது அவரைத் தவிர அனைவராலும் காகிதத்தில் நன்றாக உள்ளது , ஆனால் நடைமுறை சாத்தியம் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது . ஓரே ஆண்டில் அதற்கு செயல் வடிவம் கொடுத்தார் கலைஞர் .
ஏனோதானோ என்று அவசரகதியில் இவர் இந்த திட்டத்தை முன்வைக்கவில்லை ,எவ்வளவு விரிவாக திட்டம் தீட்டியிருக்கிறார் என்று பார்த்தால் வியப்பாக உள்ளது . இந்த திட்டத்தின் பெயரையே பார்ப்போம் - சாதி
பிரிவினையே ஒழிக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் , இதற்கு சாதி ஒழிப்பிற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பெரியாரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால் திட்டத்தின் பெயர் "பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் "
சமதுவுப்புரத்தில்
1 .அனைத்து சாதிகளுக்கும் சமஉரிமை
2 .அனைவரும் , விழாக்களையும், திருமணங்களையும் நடத்துவதற்கு ஒரே மண்டபம் .
3 .அனைத்து சாதிக்கும் ஒரு மயானம்தான்.
4 . சாதித்தலைவர்களின் சிலைகள் கூடாது
5 . ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 100 வீடுகள் இருக்கும் .அந்த நூறு வீடுகளுக்கும் வரைமுறையும் வகுத்துள்ளார்
6 . 40 % தலித்துகளுக்கு
7 .25 % பிற்படுத்தப்பட்டோருக்கு
8 .25 % மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு
9 .10 % மற்றவர்க்கு
இந்த விதிகளை மீறுபவர்களுக்கு , சமத்துவபுரத்தில் இடம் கிடையாது , வெளியேற வேண்டும்.
இதில் அதற்கும் மேல் என்னும் சொல்லும்படியாக இன்னொரு விதியையும் வைத்திருக்கிறார் , அதுதான் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு , இத்தனை விரிவாக ஒரு திட்டத்தை எந்த தலைவரும் மக்களுக்காக செய்தார்களா என்பது சந்தேகமே .
145 சமத்துவபுரங்கள் 1997 முதல் 2001 வரையிலான கலைஞரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டன . தேர்தல் வர ஆட்சி மாறுகிறது , ஜெயலலிதா இந்த திட்டத்தை முடக்குகிறார் .
இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் , தோழர் ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் முன்வைக்கும் கோணம் , கலைஞர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஜெயலலிதா அவர்கள் முடக்கவில்லை , அவர் தினமும் சென்று வந்த பாலம் கலைஞர் கட்டியதுதான் அதனை அவர் முடக்கவில்லை , எந்த எந்த திட்டங்களை முடக்குகிறார் ? சமத்துவபுரத்தை , சமச்சீர்கல்வியை , அண்ணா நூலகத்தை முடக்குகிறார் . எங்கெல்லாம் சமூக நீதிக்கென திட்டம் வகுக்கப்பட்டதோ , அந்த திட்டங்களை அவர் முடக்கியிருக்கிறார் .
இந்தப் போக்கினை இனப்பகையின் நீட்சியாகவே நாம் காண வேண்டும் . அவர் தொடங்கியதை இவர் எதிர்த்தார் என்று நாம் இதனை காண இயலாது ,
பின் 2008 ஆட்சிக்கு வந்த கலைஞர் சமத்துவபுரத்தை மீண்டும் முன்னெடுக்கிறார் . 95 சமத்துவுப்புரங்கள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கிறார் . ஏன் குறிப்பாக 95 ? பெரியாரின் பெயரை திட்டத்திற்கு வைத்த கலைஞர் , பெரியார் வாழ்ந்த ஆண்டுகளான 95 ஐ நினைவுப்படுத்தும் வண்ணம் 95 சமத்துவுப்புரங்களை அறிவித்து , அறிவித்ததோடு நில்லாமல் தனது ஆட்சி காலத்தில் அமைத்தும் வைக்கிறார்.
கலைஞர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து சொன்னது , "இந்த சமத்துவபுரங்கள் , தமிழ்நாட்டை ஒரு பெரிய சமத்துவபுரமாக மாற்றும் , நாடு முழுவதும் மாற்றம் உண்டாக இது முன்னோடியாக இருக்கும் ".
அவரின் கனவு நினைவாவதற்கு நடைமுறை சிக்கல்கள் உள்ளன , ஏனெனில் இன்றும் பரவலாக மனிதர் நெருங்கினாலும், மனம் நெருங்காமல் இருக்கிறது . மனங்களை நெருங்க வைக்க திராவிடக் கொள்கை பெரியார் , அண்ணா , கலைஞர் வழியில் சமத்துவத்துக்கும் , சமூகநீதிக்கும் தொடர்ந்து பயணிக்கும் .